Last Updated : 11 Nov, 2016 12:02 PM

 

Published : 11 Nov 2016 12:02 PM
Last Updated : 11 Nov 2016 12:02 PM

ஒரு நல்ல செய்தி!

இந்திய‌ ஊடகத்துக்கு இது முக்கியமான ஆண்டு. ஏனென்றால், இந்த ஆண்டில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் ஊடகத்துறையில் நிகழ்ந்துள்ளன. ஒன்று, ‘ராம்நாத் கோயங்கா விருது’ வழங்கும் விழாவில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ஆசிரியர் ராஜ் கமல் ஜா, பிரதமர் முன்னிலையில் அவரது அரசையே விமர்சனம் செய்திருக்கிறார். இன்னொன்று, என்.டி.டி.வி. மீதான தடையும் அது சார்ந்த விவாதங்களும்! இந்த இரண்டும் சொல்லும் நல்ல செய்தி... ஊடகச் சுதந்திரத்தை யாரும் நெரிக்க முடியாது என்பதே!

இவற்றில் என்.டி.டி.வி. மீதான மத்திய அரசின் தடை உத்தரவு, பல கேள்விகளை எழுப்புகிறது. என்.டி.டி.வி. செய்தது சரியா, அரசு செய்தது சரியா என்று தீவிரமாக அலசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் வெளியாகியிருக்கிறது, ‘மோர் நியூஸ் இஸ் குட் நியூஸ்’ எனும் புத்தகம்.

என்.டி.டி.வி. ஆரம்பித்து தற்போது 28-வது ஆண்டில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் ஊடகத்துறையில் தனது 25 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்ததன் நினைவை அசைபோடும் விதமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. என்.டி.டி.வி.யின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஆயிஷா ககல் தொகுத்த இந்தத் தொகுப்பை ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

முதல் தனியார் தொலைக்காட்சி

இன்று நாடு முழுக்க சுமார் 450-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தி சேனல்கள் உள்ளன. முப்பது வருடங்கள் பின்னோக்கிப் போனால் ‘தூர்தர்ஷன்’ மட்டுமே அன்றைக்கு நாட்டிலிருந்த ஒரே தொலைக்காட்சி. அதுவும் அரசு நிறுவனம். அமைச்சர்கள் ரிப்பன் வெட்டிப் புதிய கட்டிடங்களைத் திறந்துவைப்பதுதான் அன்றைக்கெல்லாம் செய்தி. இதையே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருந்த மக்களுக்கு, உலகத்தை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டு வந்தது ‘தி வேர்ல்ட் திஸ் வீக்’ எனும் அரைமணி நேர நிகழ்ச்சி.

பொருளாதார அறிஞராக இருந்த பிரணாய் ராய், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரின் மனைவி ராதிகா ராய் ஆகியோர் புதிதாகச் செய்தி சேனல் தொடங்கத் திட்டமிட்டனர். அதன் முதல் படி, தூர்தர்ஷனிலேயே அரை மணி நேர ஸ்லாட்டை வாங்கி, அதில் உலக நிகழ்வுகளை வழங்கத் தொடங்கினர். அதுதான் மேற்சொன்ன நிகழ்ச்சி. இது நடந்தது 1988-ம் ஆண்டு. கணினி, கை பேசி உள்ளிட்ட அடிப்படையான தொழில்நுட்பக் கருவிகள்கூட அன்று வளர்ச்சியடைந்திருக்காத காலத்தில் பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து செய்திகளை வழங்கியவர்கள் ‘ராய் அண்ட் கோ’.

அதற்குப் பிறகு அதே தூர்தர்ஷனில் நேரலையாகச் செய்திகளை வழங்கியது, பிரிட்டனின் ‘ஸ்டார் நியூஸ்’ நிறுவனத்துடன் கைகோத்தது, தனியாக சேனல் தொடங்கியது என அனைத்துமே வரலாறு!

இந்தி சேனலின் முகம்

என்.டி.டி.வி. நிறுவனம் என்.டி.டி.வி. 24X7, என்.டி.டி.வி. இந்தியா என இரண்டு செய்தி சேனல்களைக் கொண்டிருக்கிறது. முன்னது ஆங்கிலத்தில்; பின்னது இந்தியில்.

தற்போது என்.டி.டி.வி. மீது தடை விதிக்கப் படுவதற்குக் காரணமாகச் சொல்லப்படும் பதான்கோட் தாக்குதல் தொடர்பான நிகழ்ச்சி என்.டி.டி.வி. இந்தியா சேனலில்தான் வெளியானது. அந்த சேனலின் நட்சத்திரத் தொகுப்பாளராக இருப்பவர் ரவீஷ் குமார். இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து தனது சேனலில் இரண்டு ‘மைம்’ கலைஞர்களை வைத்து அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தார். இதற்கு முன்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சிக்க, தான் பங்கேற்கும் ‘ப்ரைம் டைம்’ நிகழ்ச்சியின்போது சுமார் 40 நிமிடங்களுக்குத் திரையைக் கருப்பாக்கினார். இதுபோன்ற பல நிகழ்ச்சிகளால் அவர் பார்வையாளர்களிடமும் சக பத்திரிகையாளர்களிடமும் மிகவும் பிரபலமாக விளங்குகிறார்.

என்.டி.டி.வி.யில் பணிபுரிந்த, பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்களின் நினைவுகளைக் கட்டுரையாக எழுதியிருக்கும் இந்தத் தொகுப்பில், இந்தி சேனலின் முகம் என்று புகழப்படும் ரவீஷ் குமாரைக் குறித்து ஒரு கட்டுரை உள்ளது. அவரே எழுதிய கட்டுரை ஒன்றும் உள்ளது.

வெற்றி ரகசியம் என்ன?

‘ரவீஷ் குமாரால் மட்டும் ஏன் இந்தியில் வெற்றி பெற முடிகிறது?’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையை என்.டி.டி.வி. இந்தியா சேனலின் நிர்வாக ஆசிரியர் அனிந்தியோ சக்ரவர்த்தி எழுதியுள்ளார். இது ரவீஷ் குமாருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமை.

ஒரு செய்தியை நிருபர் ஒருவர் தன்னுடைய பார்வையிலிருந்து தன்னிலை அனுபவமாக விவரிக்கும் செய்தி வழங்கும் முறையை ஆங்கிலத்தில் ‘கன்ஸோ ஜர்னலிஸம்’ என்று அழைக்கப்படுகிறது. 1960-களில் பி.பி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த ஹன்டர் எஸ்.தாம்ஸன் மற்றும் அவரது குழுவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகையான செய்தி வழங்கல் முறை வெளிநாடுகளில் பிரபலம்.

“அந்த ‘கன்ஸோ’ முறையைத்தான் ரவீஷ் குமார் பின்பற்றுகிறார். ‘இந்தி டி.வி. பார்வையாளர்கள் எந்த ஒரு விஷயம் குறித்தும் குறைந்த அளவே தகவல் அறிந்தவர்கள்’ பொதுவான பார்வை, இந்தி சேனல்களிடம் உள்ளன. எனவே அவர்களுக்கு ஆழமான செய்திகள், அலசல்கள் ஆகியவற்றை எல்லாம் வழங்காமல் கிசுகிசு, பரபரப்பு கொண்ட, ரசனை குறைவான‌ ‘டேப்ளாய்ட்’ நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.

அறிவுலக ஆளுமைகள், அதிகார வர்க்கம், உரிமைகளைப் பேசுதல் போன்ற விஷயங்கள் ஆங்கில டி.வி. பார்வையாளர்களை அதிகம் கவரும். எனவே இவர்களை ‘குடிமைச் சமூகம்’ எனவும், சமநிலைச் சமுதாயம், ஒன்றிணைந்து பணியாற்றுதல் போன்ற விஷயங்கள் இந்தி டி.வி.பார்வையாளர்களைக் கவர்வதால் இவர்களை ‘அரசியல் சமூகம்’ எனவும் பிரிக்கலாம். ரவீஷ் குமாரின் நிகழ்ச்சிகள் இந்த இரண்டு பிரிவினரையும் பார்க்க வைக்கின்றன. அதனால்தான் அவரின் நிகழ்ச்சிகள் வெற்றியடைகின்றன” என்று எழுதுகிறார் அனிந்தியோ சக்ரவர்த்தி.

ரவீஷ் குமாரோ ‘லுடியன்ஸ் ஜர்னலிஸம்’ என்ற தன் கட்டுரையில் “இந்திய நாடாளுமன்றத்தில்தான் பல பத்திரிகையாளர்கள் ஜாகை அமைத்துத் தங்கள் வாழ்நாளை ஓட்டுகிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே, டெல்லிக்கு வெளியேதான் உண்மையான இந்தியா இருக்கிறது. செய்தியாளர்களுக்கு அங்குதான் நிறைய வேலைகள் இருக்கின்றன” என்கிறார்.

தற்சமயம் என்.டி.டி.வி. மீதான தடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான விவாதங்களிலிருந்து நாம் பாடம் கற்கிறோமோ இல்லையோ, நிச்சயம் இந்தப் புத்தகத்திலிருந்து பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளராக வரத் துடிக்கும் இளைஞர்களும் நிறைய கற்றுக்கொள்ளலாம்!

ஜி... அது என்ன ‘ஸெஃபாலஜி’?

இந்தியத் தொலைக்காட்சி ஊடகத்தில் என்.டி.டி.வி. பல விஷயங்களுக்கு முன்னோடி. முக்கியமாகத் தேர்தல். தேர்தல் தொடர்பான ஆய்வுகள், அலசல்களை ஆங்கிலத்தில் ‘ஸெஃபாலஜி’ (Psephology) என்று குறிப்பிடுகிறார்கள். இந்தச் சொல்லை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் (கவனிக்க... உருவாக்கியவர் அல்ல!) இங்கிலாந்தின் ஆக்ஸ்பார்ட் பகுதியில் உள்ள புதுக் கல்லூரிப் பேராசிரியர் டேவிட் பட்லர். 1945-ம் ஆண்டில் இதைத் தன் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அறிமுகப்படுத்தினார்.

பண்டைய கிரேக்கத்தில் தேர்தலின்போது மண் பானைக்குள் கற்களைப் போடும் வழக்கம் இருந்தது. கிரேக்கத்தில் கற்களுக்கு ‘ஸெஃபோஸ்’ (Psephos)என்று பெயர். அதனை அடிப்படையாக வைத்துத்தான் இந்தச் சொல் உருவானதாக ப‌ட்லர் கூறுகிறார். இந்த வார்த்தை இந்திய மக்களுக்கு என்.டி.டி.வி.யின் மூலமாக அறிமுகமானது. ஆம், 90-களில் இந்தியாவில் நடந்த தேர்தல்களை அலசுவதற்கு என்.டி.டி.வி., பட்லரின் உதவியை நாட, இந்த வார்த்தை இந்தியத் தேர்தல் அகராதியில் இடம்பிடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x