Last Updated : 01 Nov, 2016 12:11 PM

 

Published : 01 Nov 2016 12:11 PM
Last Updated : 01 Nov 2016 12:11 PM

சேதி தெரியுமா? - ஸ்ரீநகரில் அமைதிப் பேச்சுவார்த்தை

முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான ஐந்து உறுப்பினர்கள் குழு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அக்டோபர் 25-ம் தேதி ஸ்ரீநகர் சென்றது. புதுடெல்லிக்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததையடுத்து அங்குள்ள வெவ்வேறு அமைப்புகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. “இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர் மக்கள் மூன்று தரப்பினரும் நிபந்தனையற்ற, தொடர்ந்த பேச்சுவார்த்தையை நடத்துவது அவசியம்” என்கிறார் காஷ்மீர் தொழில், வர்த்தக சபையின் செய்தித் தொடர்பாளரான பயஸ் பக்ஷி.

சமூக மற்றும் வளர்ச்சி ஆய்வுகளுக்கான காஷ்மீர் மையம் என்ற அமைப்பும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்து, 20 அம்ச கோரிக்கைகளைக் கொடுத்தது. சிறையிலிருக்கும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை விடுவிக்க வேண்டுமென்பதும் அவர்களது கோரிக்கைகளில் ஒன்று. “நாங்கள் இங்கே திறந்த மனதுடன் வந்திருக்கிறோம். எந்தக் குறிப்பிட்ட திட்டமும் இல்லை. மக்களின் துயரங்களைக் கேட்டு, அவர்களது கருத்துகளுக்கு செவிசாய்க்க வந்திருக்கிறோம்” என்று யஷ்வந்த் சின்ஹா பத்திரிகையாளர்களிடம் கூறினார்.



எவரெஸ்டைத் தொட்ட முதல் பெண் காலமானார்

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூங்கோ தபேய், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அக்டோபர் 20-ம் தேதி காலமானார். ஐந்தடி உயரம், 41 கிலோ எடை மட்டுமே கொண்ட இவர் கொடூரமான பனிச் சூழலிலும் தன்னுடைய கடுமையான பயிற்சி மூலமாக 70 நாடுகளிலுள்ள உயரமான சிகரங்களைத் தன் வாழ்நாளில் தொட்டுள்ளார். தனது 35-வது வயதில் 1975-ம் ஆண்டு மே மாதம் 29 ஆயிரத்து 29 அடி உயரமுள்ள எவரெஸ்ட்டை 15 பெண்கள் கொண்ட குழுவின் துணைத் தலைவராக எட்டினார்.

பெண்களின் நிலை பின்தங்கி இருந்த ஜப்பானிய சமூகத்திலிருந்து வந்த ஜூங்கோ தபேயின் சாதனை அக்காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்ற ஜூங்கோ தபேய், தனது இமாலயப் பயணத்துக்காக நிதி திரட்டுவதற்காக, பியானோ மற்றும் ஆங்கிலப் பாடங்களை எடுத்தார். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி புகுஷிமாவில் பிறந்த இவர், குழந்தைப் பருவத்தில் பலவீனமான குழந்தையாக சுற்றியிருந்தவர்களால் விலக்கப்பட்டவர்.



மேன் புக்கர் வென்றார் முதல் அமெரிக்கர்

‘தி செல்அவுட்’ நாவலுக்காக அமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டி 2016-ம் ஆண்டுக்கான ‘மேன் புக்கர்’ பரிசை வென்றுள்ளார். ‘மேன் புக்கர்’ பரிசு பெறும் முதல் அமெரிக்க இலக்கிய ஆசிரியர் இவர். அமெரிக்காவில் நிலவும் இனவாதம் மற்றும் மதப் பாகுபாடுகள் குறித்து கேலி செய்யும் படைப்பு இது. 50 ஆயிரம் பவுண்டுகள் தொகை கொண்ட இந்த இலக்கிய விருதை அக்டோபர் 24-ம் தேதி இரவு லண்டனில் நடந்த விழாவில் பால் பீட்டி பெற்றார். ‘தி செல்அவுட்’ நாவலை ‘மேன் புக்கர்’ பரிசுக்காகத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவின் தலைவரான அமன்டா போர்மேன், தற்கால அமெரிக்க சமூகத்தைப் பற்றி தீவிரமாகக் கிண்டல் செய்யும் படைப்பு என்று கூறினார். தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் பால் பீட்டி, இதற்கு முன்னர் ‘ஸ்லம்பர்லேண்ட்’, ‘டஃப்’, ‘தி வைட் பாய் ஷஃபில்’ ஆகிய மூன்று நாவல்களை எழுதியுள்ளார்.



கபடியில் ஹாட்ரிக் உலகக் கோப்பை

உலகக் கோப்பை கபடிப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்தியாவுக்கும் ஈரான் அணிக்கும் அக்டோபர் 22-ம் தேதி, அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் 38-29 புள்ளிக்கணக்கில் இந்தியா வென்றது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, வங்கதேசம், ஈரான், அமெரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. ஏற்கெனவே 2004, 2007-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கபடி உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலும் ஈரானுடனான இறுதிப் போட்டியில் விளையாடி இந்தியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.



ஆந்திர- ஒடிசா எல்லையில் மாவோயிஸ்டுகள் பலி

ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலக் காவல் துறையினர் சேர்ந்து நடத்திய மோதல் தாக்குதலில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தைச் சேர்ந்த 24 பேர் அக்டோபர் 24-ம் தேதி கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேச எல்லைக்கு அருகேயுள்ள மல்காங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாந்திரிக்கு அருகே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. கொல்லப்பட்ட 24 பேரில் ஏழு பெண்களும் அடக்கம். மல்காங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இரண்டாவது பெரிய தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போடியா பகுதியில் 13 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x