Published : 09 Oct 2016 13:23 pm

Updated : 09 Oct 2016 13:23 pm

 

Published : 09 Oct 2016 01:23 PM
Last Updated : 09 Oct 2016 01:23 PM

கமலா கல்பனா கனிஷ்கா: ஆண்களும் இல்லத்தரசர் ஆகலாமே!

கணினியில் மூழ்கியிருந்தார் கமலா பாட்டி.

“நாங்க வந்ததுகூடத் தெரியாமல், அப்படி என்ன தேடிட்டு இருக்கீங்க?’’ என்று கல்பனா கேட்க, நிமிர்ந்து பார்த்தார் பாட்டி.


“என் உறவுக்கார பெண் விண்வெளி ஆராய்ச்சியாளராக இருக்கிறாள். அவளுக்கு வரன் தேடுறேன். அதுவும் ஹவுஸ் ஹஸ்பண்டா இருக்க சம்மதிக்கும் ஒரு வரனைத் தேடுறேன்!”

“ஹவுஸ் ஹஸ்பண்டா, புதுசா இருக்கே! கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பாட்டி” ஆவலுடன் கேட்டாள் கனிஷ்கா.

“மேரி கோம் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவர். இப்போ ராஜ்யசபா எம்.பி.யாக இருக்காங்க. ஒன்பது, மூன்று வயதுகளில் இருக்கும் தன் மகன்களுக்கு திறந்த மடல் ஒண்ணு எழுதியிருக்காங்க. அதுலதான் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பற்றிப் பேசியிருக்காங்க. ‘பெண்ணை மதிக்க வேண்டும், சரிநிகராக நடத்த வேண்டும் என்று கற்றுத் தரும் வீட்டில்தான் நீங்கள் இருவரும் வளர்கிறீர்கள். உங்கள் தந்தை, உங்கள் நண்பர்களின் தந்தைபோல் காலை ஒன்பது மணிக்கு வேலைக்குச் சென்று, மாலை ஐந்து மணிக்கு வீடுதிரும்பும் வேலையில் இல்லை. மாறாக என் லட்சியத்துக்காக நான் பயிற்சி மேற்கொள்ளும்போதும், போட்டிகளுக்கு வெளியில் செல்லும்போதும், எம்.பி.யாகப் பணிபுரியும் பொருட்டும் வீட்டைவிட்டு பல நாட்கள் வெளியில் தங்கியிருக்கும்போது உங்களை அரவணைக்கிறார். மகன்களே, விரைவில் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ என்ற சொல் பிரபலமடைவதை நீங்கள் கேட்பீர்கள். ஆனால், ஓர் ஆண் அப்படி அழைக்கப்படுவது இழிவல்ல என்பதை இப்போதே தெரிந்துகொள்ளுங்கள். நான் முன்னேற எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் உங்கள் தந்தை என்னுடன் இருக்கிறார்’னு எழுதியிருக்கார்!’’

“ரொம்ப அருமையா சொல்லியிருக்காங்க. திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் வேலையை விடுவது ரொம்ப இயல்பான நிகழ்வா பார்க்கப்படுது. ஆனால், அது ஒருவரின் கனவுகளுக்கு வைக்கும் முற்றுப்புள்ளின்னு யாருமே நினைக்கறதில்லை. மேரி கோமின் கணவரைப்போல போல பலரும் முன்வந்தால் சமூகம் முன்னேறும்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“ஆமாம். பாலினச் சமத்துவத்தை வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும். சரி, அருந்ததி ராய் அடுத்த நாவலை அறிவிச்சிருக்காங்க தெரியுமா?” என்று இருவரையும் பார்த்தாள் கனிஷ்கா.

“ம்… காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் வெளியாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த நாவல்,

The Ministry of Utmost Happiness.”

“மினிஸ்ட்ரி என்றதும் நம் பாதுகாப்பு அமைச்சகம் நினைவுக்கு வந்துருச்சு. எல்லையில் ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் (துல்லிய திடீர்த் தாக்குதல்) உலக அரங்கில் விவாதங்களைக் கிளப்பிவிட்டிருக்கு.’’

“ஆமாம் பாட்டி, போர் என்று பேசும்போது கலக்கமா இருக்கு. இதுவரை நடந்த போர்களில் தீவிரமாகப் பாதிக்கப்பட்டது பெண்களும் குழந்தைகளும்தான். இதனால்தான், தெற்காசிய பெண் பத்திரிகையாளர்கள், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் ராஜாங்க ரீதியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டிருக்காங்க. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமான சூழல் சர்வதேச அமைதிக்கே பெரிய அச்சுறுத்தல்” என்று வருத்தத்துடன் சொன்னார் கல்பனா ஆன்ட்டி.

“சண்டிகரில் நடைபெற்ற ‘இளைஞர்களும் அமைதியும்’என்ற நிகழ்ச்சிக்காக கல்லூரி மாணவிகள் 19 பேர் கொண்ட ஒரு குழு இந்தியாவுக்கு வந்தது. பாகிஸ்தான் குழுவுக்குத் தலைமை வகித்த ஆலியா, ‘இரு நாட்டு மக்களும் அமைதியையே விரும்புகிறார்கள்’ என்றார். அப்போ எல்லையில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்துச்சு. இதனால் அவங்க திரும்பிப் போறதில் சிக்கல். பிறகு வெளியுறவு அமைச்சகம் பத்திரமாக அனுப்பி வைத்தது. இதுபோன்ற நல்லெண்ண நடவடிக்கைகள் பதற்றத்தைத் தணிக்கும். இப்ப காபி கிடைக்குமா பாட்டி?” என்றாள் கனிஷ்கா.

“இதோ, காபி வந்தாச்சு!” என்ற குரல் கேட்டு, மூவரும் திரும்பினர். தாத்தா சூடான காபி கோப்பைகளுடன் நின்றார். புன்னகையால் நன்றி சொல்லிவிட்டு, காபி குடித்தனர்.

“இரோம் ஷர்மிளா அரசியல் கட்சி தொடங்கப் போறாங்க. பெண்கள் அரசியலுக்கு வருவது நல்லது” என்றார் கமலா பாட்டி.

“உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாராகியிருக்கிறார் சட்டக் கல்லூரி மாணவி அபிராமி. சென்னை மாநகராட்சி 48-வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கார். இப்போதைக்குத் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அரசியலுக்கு இளம் பெண் ஒருவர் வருவதை வரவேற்போம்!” என்று கல்பனா ஆன்ட்டி சொல்ல, பாட்டியும் கனிஷ்காவும் அதைக் கைதட்டி ஆமோதித்தார்கள்.


ஆண்கள்இல்லத்தரசர்ஆகலாமேசெய்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x