Published : 19 Oct 2016 11:24 am

Updated : 19 Oct 2016 11:24 am

 

Published : 19 Oct 2016 11:24 AM
Last Updated : 19 Oct 2016 11:24 AM

வண்ண மழை, மீத்தேன் மழை, மீன் மழை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கப் போகிறது. குழந்தைகளுக்கு மழை என்றாலே குஷிதான்! கன மழை என்றால் லீவு கிடைக்கும். அதையும் தாண்டி மழைக்கு முன்பாக மண்ணில் எழும் வாசம், தெருக்களில் புரண்டோடும் வெள்ள நீர், அதில் காகிதக் கப்பல் விடும் வாய்ப்பு, மழை ஓய்ந்ததும் மரத்தடியில் கிளைகளை அசைத்து நனைவது, திடீரெனக் குறுக்கிடும் மழையில் நனையும் சந்தோஷம். இப்படி மழை அழைத்து வரும் சுவாரசியங்கள் ஏராளம். மழை குறித்த சுவாரசியங்கள் இன்னும்கூட நிறைய உண்டு. அவற்றையும் பார்ப்போமா?

> நீர்த்துளிகளாகப் பெய்தால் மழை என்கிறோம். இதுவே நீர்த்துளிகளுக்குப் பதிலாகப் பனிக்கட்டி துகள்களாகவும், பனித்தூவலாகவும் பெய்தால் அது ‘ஆலங்கட்டி மழை’.

> பூமியில் மழையே பெய்யாத நிலப்பரப்பு, அண்டார்டிகாவில் உள்ளது. உறைபனி சூழல் நிலவுவதால் இங்கு நீர்த்துளியாக மழை பெய்யாது. இதனால் இது பூமியின் ‘வறண்ட’ கண்டம் எனப்படுகிறது.

> பாலைவனங்களிலும் மழை பெய்வதுண்டு. ஆனால், அவை அங்கு நிலவும் அதிக வெப்பம் காரணமாகத் தரையை அடையும் முன்பே ஆவியாகி விடும்.

> பூமியைப் போலவே மற்ற கோள்களிலும் மழை பெய்வதுண்டு. ஆனால், அவை நீராலான மழை கிடையாது. வியாழன் கோளில் கந்தக அமில மழையும், சனி கோளின் நிலவான டைட்டனில் மீத்தேன் மழையும் பெய்யும்.

> மழை நீரின் pH அளவு 5.6 ஆகும். மழை நீருக்குச் சற்றே அமிலத் தன்மை உண்டு. இந்த pH அளவில் குறைந்ததாகப் பெய்யும் மழையே அமில மழை. தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுவால் வளிமண்டலத்தில் பெருகும் சல்ஃபர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகியவை அமில மழைக்குக் காரணமாகின்றன.

> ஆலங்கட்டி மழை, பனி மழை போல, மெக்சிகோவின் தெற்கேயுள்ள ஹாண்டுராஸ் (Honduras) நாட்டில் மீன் மழை பிரபலம். 18-ம் நூற்றாண்டில் வருடந்தோறும் கனமழையின் போது நன்னீர் வாழ் மீன்கள் வானிலிருந்து கொட்டியதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். தாய்லாந்து போன்ற நாடுகளிலும் மீன், தவளை, நீர்ப்பாம்பு உள்ளிட்ட நீர்வாழ்வன மழையுடன் கொட்டி உள்ளன. சூறைப்புயலின்போது மிகப்பெரும் நீர் நிலைகளிலிருந்து மேகத்துக்கு உறிஞ்சப்படும் நீர், மழையாகப் பெய்யும்போது மீன்கள் விழுவதாக ஆராய்ச்சியில் சொல்லியுள்ளார்கள்.

> சில இடங்களில் சிவப்பு நிறத்தில் பெய்வதை ‘ரத்த மழை’என்று பயமுறுத்துவார்கள். சிவப்பு மட்டுமல்ல, மஞ்சள், கறுப்பு மற்றும் பச்சை நிறங்களிலும் மழை பெய்வதுண்டு. கேரளாவின் கோட்டயம், இடுக்கி பகுதிகளில் இம்மாதிரி வண்ண மழைகள் பெய்துள்ளன. காற்றில் பரவியிருக் கும் மாசு, நுண்ணுயிரிகள் மழையில் கரைவதே வண்ண மழை பெய்யக் காரணம்.

> நீண்ட காலமாக மழை பெய்யாத பகுதிகளில், மேகங்களைத் தூண்டிவிட்டுச் செயற்கை மழையைப் பெய்யச் செய்கிறார்கள். விமானங்கள் மூலம் உலர்பனியை மேகங்களில் தூவிச் செயற்கை மழை உண்டாக்கப்படுகிறது.

> பாலைவனப் பரப்பு அதிகமுள்ள ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில், மழை என்னும் பொருள்படும் ‘புலா’ என்ற பெயரில் பணத்தை அழைக்கிறார்கள்.

> மழைக்கு எனத் தனியாக வாசனை கிடையாது. மண்ணில் அவை விழும்போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்களுடன் மழை நீர் வினை புரிந்து, நாம் உணரக்கூடிய ‘மண் வாசனை’பிறக்கிறது.

> மழையில் நனைந்த செடி கொடிகளின் இலைகள் முன்பைவிட பச்சைப்பசேலென்று காட்சியளிக்கும். இதற்கு மழை நீரில் கரைந்து வரும் நைட்ரஜனே காரணம்.

> மழைக்கு நாம் பயன்படுத்தும் குடை, வெயிலில் இருந்து தப்பிக்கவே முதலில் உருவாக்கப்பட்டது. நிழலுக்காக என்று பொருள்படும் லத்தீன் வார்த்தையிலிருந்தே ‘அம்ப்ரெல்லா’என்ற பெயர் உருவானது. தற்போது பயன்பாட்டில் உள்ள குடை, 11-ம் நூற்றாண்டு சீனாவில் புழக்கத்துக்கு வந்தது.

> அதிக மழை பெய்வதால் இந்தியாவிலுள்ள மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி மற்றும் மாவ்சின்ராம் ஆகிய இடங்கள் உலகப் புகழ் பெற்றுள்ளன. காசி குன்றுகளில் அமைந்திருக்கும் மாவ்சின்ராம் கிராமம், உலகிலேயே மிக அதிக சராசரி மழை பெய்யும் இடம். இங்கு ஆண்டு சராசரி மழை 11,873 மி.மீ.. இதனால் உலகின் மிகவும் ‘ஈரமான’பகுதி என மாவ்சின்ராம் அழைக்கப்படுகிறது. இரண்டாம் இடத்திலிருக்கும் சிரபுஞ்சியின் ஆண்டு சராசரி மழையளவு 11,430 மி.மீ.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


    வடகிழக்குப் பருவமழைமழை தகவல்மழை ரகசியம்பொது அறிவு தகவல்ஆலங்கட்டி மழைபாலைவன மழைமீத்தேன் மழைமீன் மழைவண்ண ம்ழை

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author