Published : 28 Oct 2016 07:17 PM
Last Updated : 28 Oct 2016 07:17 PM

படித்தது பத்தாம் வகுப்பு; நடத்துவது கீரை மேளா

அரைக் கீரை, முருங்கைக் கீரை, பாலக் கீரை, சிறு கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக் கீரை, பருப்புக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக் கீரை, பீட்ரூட் கீரை, முடக்கத்தான் கீரை, புளிச்ச கீரை, அகத்திக் கீரை இப்படிக் கீரையில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையையும் தன் தோட்டத்தில் பயிர் செய்திருக்கிறார் கோவை புட்டுவிக்கி சாலையில் வசிக்கும் விஸ்வநாதன்.

வாடிக்கையாளர்கள் வந்து கேட்ட பின்பு தோட்டத்தில் புத்தம் புதுசாகக் கீரையைப் பறித்துத் தருகிறார். ‘இந்தக் கீரையின் பெயரை நாங்க கேள்விப்பட்டதில்லையே? இதை எப்படிச் சமைக்கிறது?’ என்று வாங்குபவர்கள் கேட்டால், அந்தக் கீரையில் என்னவெல்லாம் சமைக்கலாம் என்பதைத் தெளிவாக விளக்கவும் செய்கிறார். இப்படிப் பலரும் கேட்கவே ஒருநாள் அவர்களுக்கெல்லாம் கீரை மேளாவையே நடத்திவிட்டார். அதில் 15 வகையான கீரைகளில் என்னவெல்லாம் சமைக்கலாம் என்பதையும் செய்துகாட்டி அசத்தியிருக்கிறார்.

பல்கலைக்கழக உரை

விஸ்வநாதன் படித்தது 10-ம் வகுப்புதான். பிஹார் வேளாண் பல்கலைக்கழகத்துக்குச் சென்று வேளாண் கல்வியாளர்கள், நிபுணர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில், ‘விவசாயத் தொழிலை மேம்படுத்துவது எப்படி? இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கக் காரணம் என்ன? அதை எப்படிச் சரிசெய்வது?’ என்பது குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்து, உரை நிகழ்த்திவிட்டு வந்துள்ளார்.

``எப்படி இது சாத்தியமானது?”

“சின்ன வயசிலேயிருந்தே எனக்குத் தெரிஞ்ச தொழில் விவசாயம்தான். எங்கள் குடும்பத்துக்குச் சுமார் 30 ஏக்கர் நிலம் இருக்கு. அதில் இரண்டு ஏக்கர்ல மட்டும் உருளை, பெரிய வெங்காயம் தவிர அனைத்துக் காய்கறிகளையும் விளைவிக்கிறோம். கிட்டத்தட்ட 15 விதமான காய்கறிகள் விவசாயத்தோட, 12 விதமான கீரைகளையும் விளைவிக்கிறோம். அதை மொத்த வியாபாரிகள், இடைத்தரகர்கள் மூலம்தான் கொடுத்துவந்தோம். நாமே விற்பனை செய்தால் என்ன என்று மூன்று மாதங்களுக்கு முன்பு, நேரடியாக வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தோம். எங்கள் தோட்டத்துக்கு வந்து செல்பவர்கள் மூலமாகவே இந்தத் தகவல் பரவலானது.

இப்ப 100 வாடிக்கையாளர்களுக்கு மேல எங்ககிட்ட வந்து காய்கறிகளைப் புத்தம் புதுசா வாங்கிட்டுப் போறாங்க. தினசரி வர்றவங்களுக்கே காய்கறி பற்றாக்குறையா இருக்கு. அவங்களும் தங்கள் கண்ணாலே நல்ல நிலத்துல, நல்ல தண்ணியில வளர்ந்து நிற்கிற காய்கறிகளைப் பார்த்துத் திருப்தியா வாங்கிட்டுப் போறாங்க. அப்படித்தான் கீரையும் வாங்கிட்டுப் போறாங்க.

இப்படிக் கீரை வாங்கறவங்களுக்கெல்லாம் நிறைய சந்தேகம். டாக்டர் என்னைய கீரை சாப்பிடச் சொல்லீட்டாங்க. அந்தக் கீரைய மார்க்கெட்டுல போய் எப்படி வாங்கறது. அப்படி வாங்கற கீரை சாக்கடையில, சுகாதாரக் கேடுள்ள இடத்துல விளைஞ்சிருந்தா என்ன செய்யறதுன்னு அதிலயும் பயம். அதற்காகவே இங்கே கீரை விவசாயம் செஞ்சு, அதைக் கேட்கறவங்களுக்குக் கண்ணு முன்னாடியே பறிச்சுத் தர்றேன்.

வகை வகையாய்க் கீரை சமையல்

இந்தத் தலைமுறைக்கு எந்தக் கீரையை எப்படிச் சமைக்கிறதுன்னே தெரியலை. அதை ஒவ்வொருத்தருக்கும் சொல்லிச் சொல்லி தீரலை. அதான் இப்படி ‘கீரை மேளா’ ஒண்ணு நடத்தி, அதுல சமைச்சும் காட்டறோம். அரைக் கீரை சூப்; தயிர்ப் பச்சடி, முருங்கைக் கீரை பிரட்டல், சூப்பு; பாலக் கீரை தாள்; சிறு கீரை மசியல், வடை; மணத்தக்காளி பொரியல்; தண்டுக் கீரை பொரியல்; பருப்புக் கீரை கூட்டு, வெந்தயக் கீரை சப்பாத்தி, முள்ளங்கிக் கீரை சப்பாத்தி, முடக்கத்தான் கீரை ரசம், புளிச்ச கீரை துவையல், சட்னி; அரைக் கீரை சூப், பொரியல்; சிறு கீரை புலவ்னு பல வகைகளைச் செஞ்சு காட்டியிருக்கோம்!’ என்கிறார்.

பள்ளியில் பயிற்சி

“எங்கள் பண்ணையில் ரசாயனப் பூச்சிக்கொல்லி எதுவும் பயன்படுத்துவதில்லை. இயற்கை விவசாயத்தில் விளைந்தது என்று கூடுதலாக விலை வைத்து விற்பதும் இல்லை. மார்க்கெட்டில் சாதாரண காய்கறிக்கு என்ன விலையோ, அதை மட்டுமே நிர்ணயிக்கிறோம். இது சுகாதாரமானது; ஆற்றல் மிக்கது என்பதை எங்கள் பண்ணையைப் பார்த்தே புரிந்துகொள்ளலாம்.

கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு விஸ்வநாதன் மாடித் தோட்டப் பயிற்சியும் கொடுத்துவருகிறார்.

தீர்வு நம்மிடம்

இதன் உச்சகட்டமாகவே பிஹாரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் 2014-ம் ஆண்டில் விவசாய மேம்பாடு குறித்த கருத்தரங்குக்கு ஒரு ஆய்வுக்கட்டுரையை அனுப்பினாராம். அவர்களும் அழைப்பு அனுப்ப அதில் கலந்து கொண்டு திரும்பினார்.

“நாடு முழுவதும் இருந்து வேளாண் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் கலந்து கொண்ட கருத்தரங்கம் அது. ரொம்ப வருஷமா இந்தியாவில் மட்டும்தான் விவசாயப் பாடங்கள் ஒரே மாதிரி இருக்கு. இத்தனை ஆராய்ச்சிகள் செய்தும் கிடைக்கும் பயன் மட்டும் ஒரே அளவாக இருந்தால் எப்படி? அதைக் சரிப்படுத்த இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை எங்க வயலுக்குக் கூட்டி வந்தேன். அவங்களை ஒரு குழுவா சேர்த்து, அவங்களே கத்துகிட்ட தொழில்நுட்பத்தையும், எங்க அனுபவத்தையும் கூட்டா பயன்படுத்தி விளைவித்தோம். அதில் கிடைத்த விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் என்பதுதான் என் ஆய்வறிக்கையின் சுருக்கம்.

இந்த அரசாங்கம் விவசாயத்தைத் தூக்கி நிறுத்தத் தயாரா இல்லை. எதுக்கு விவசாயம் செஞ்சு நஷ்டப்படறீங்க, வேற தொழிலுக்குப் போங்கன்னு சொல்லுது.

நீர் வளம், நில வளம், சூழல் வளம் எல்லாமே இருந்தும் ஏன் நாம நஷ்டப்படணும்? எங்கே கோளாறு இருக்கு? அதை விவசாயியே களைஞ்சிடணும். அதுல ஒண்ணுதான் இந்தக் கீரை மேளா!” என்கிறார் விஸ்வநாதன் நம்பிக்கையுடன்.

விவசாயி விஸ்வநாதன் தொடர்புக்கு: 99432 99225

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x