Published : 08 Aug 2022 09:51 PM
Last Updated : 08 Aug 2022 09:51 PM

தேசிய விருதுக்குக் குறி வைக்கும் அமீர்கான்!

கடந்த 2001இல் வெளியாகி இந்தியா முழுவதும் சென்றடைந்த ‘லகான்’ படத்திலிருந்தே தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் அமீர்கான். பிறகு ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் மூலம் நாடு முழுவதும் பேசுபொருளானார். ஒரு பக்கம் தரமான படங்களைத் தயாரிப்பது, நடிப்பது என தன் திரை வாழ்வை உயிர்த் துடிப்புள்ளதாக மாற்றிக்கொண்ட அமீர்கான், இன்னொரு பக்கம் வணிகப் படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து தமிழ் சினிமாவுடனான தனது தொடர்பை உறுதி செய்துகொண்ட அவரது நடிப்பில் வெளியான ‘த்ரி இடியட்ஸ்’ தமிழில் ‘நண்பன்’ ஆக மறுஆக்கம் செய்யப்படும் முன்பு, இந்திப் படமாகவே தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தது. அதன்பிறகு ‘பிகே’ ‘தங்கல்’ ஆகிய படங்களுக்கு தமிழ்நாட்டிலும் வரவேற்புக் கிடைத்தது. ‘தங்கல்’ தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி, வசூலையும் அள்ளியது. இந்நிலையில் வயாகாம் 18 நிறுவனத்துடன் இணைந்து அவர் நடித்து, தயாரித்துள்ள ‘லால் சிங் சத்தா’படத்தின் தமிழ் மொழிமாற்றுப் பதிப்புடன் தமிழ் ரசிகர்களைச் சந்திக்க 6 ஆண்டுகளுக்குப் பின் வந்திருக்கிறார்.

‘லால் சிங் சத்தா’ பத்திரிகையாளர் சந்திப்பில் உதயநிதியுடன் அமீர்கான்

இந்தப் படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் கான் நடிக்க, இவர்களுடன் நாக சைதன்யா, மோனா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்துக்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். 1994இல் வெளியாகி வசூல் வெற்றியும் ஆஸ்கர் விருதுகளையும் பெற்ற ‘ஃபாரஸ்ட் கம்ப்’ என்கிற ஹாலிவுட் கதைப் படத்தை இந்தியத் தன்மையுடன் மறுஆக்கம் செய்திருக்கிறார்கள். அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதையடுத்து சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் அமீர்கான். அதில் உதயநிதி ஸ்டாலினுடன் படக் குழுவினரும் கலந்துகொண்டனர். அதில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது:

“நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு அமீர் கானின் 'ரங்கீலா' படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர் கானின் ரசிகன். மாதந்தோறும் இரண்டு திரைப்படங்களையாவது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பலமுறை முயற்சித்தாலும், திரையுலக நண்பர்களுக்காக தரமான படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்தத் தருணத்தில் அமீர்கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் லால் சிங் சத்தா படத்தினை தமிழில் வெளியிடுவதற்காக எங்களைத் தொடர்பு கொண்டார்கள். நாங்கள் அதை முதலில் வேண்டாம் என்று மறுக்க நினைத்தோம். தமிழ் திரைப்படங்களே போதும். இந்தித் திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம்.

திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, ‘'லால் சிங் சத்தா' படத்தினை நீங்கள் வெளியிட வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார். உடனே சரி என்று ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு படத்தை முழுவதும் பார்த்தோம். முன்னோட்டத்தில் பார்த்து ரசித்ததை விட, திரைப்படம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. அமீர்கான் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். பான் இந்தியா என்கிற வார்த்தையை தற்போது தான் நாம் பெருமளவில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அமீர்கான் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இதனை அறிமுகப்படுத்தி, வெற்றி பெற்றிருக்கிறார். இப்படத்தை தமிழ் ரசிகர்களும் பெரிய அளவில் வரவேற்பார்கள்” என்றார்.

படத்தின் இயக்குநர் அத்வைத் சந்தன் பேசுகையில், “‘ஃபாரஸ்ட் கம்ப்’ ஒரு சிறந்த படைப்பு. அது ‘லால் சிங் சத்தா’வாக நம் மண்ணுக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்ப உருமாற்றம் பெற்றிருக்கிறது. அதனை இயக்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதும் அமீர்கான் எனக்கு அளித்த பரிசு. திரைக்கதை ஆசிரியர் அதுல் குல்கர்னியின் உழைப்பு எளிதானதல்ல. அமீர்கான், அஜித் ஆந்த்ரே, மோனோசிங், நாக சைதன்யா போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த படைப்பு நிறைவு பெற்றிருக்காது. சென்னைக்கு வருகை தந்து இந்தப் படத்தின் தமிழ் மொழியிலான முன்னோட்டத்தை பார்வையிட்டபோது புதிய படம் போல், புது அனுபவத்தை அளித்தது.'' என்றார்.

நாக சைதன்யா

நடிகர் நாக சைதன்யா பேசுகையில், “நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான். சென்னைக்கு வருகை தந்து நீண்ட நாட்களாகி விட்டது. ‘லால் சிங் சத்தா’வுக்காக சென்னைக்கு வந்ததை மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இப்படம் என்னுடைய கலையுலகப் பயணத்தில் முக்கியமான ஒன்று. ஒரு நடிகராக இப்படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். இது திரையரங்கம் சென்று காண வேண்டிய படம்” என்றார்.

இறுதியாக நாயகன் அமீர்கான் பேசும்போது: “‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழகம் முழுவதும் நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு முதலில் எனது நன்றி. ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எதைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்தப் படம் நேர்மறையாக உணர்த்துகிறது. இந்தப் படைப்பு உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும், பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு இந்தப் படைப்பு கவரும் என நினைக்கிறேன்.'' என்றார்.

அமீர்கான் ஏற்கெனவே சிறந்த இயக்குநர், சிறந்த தயாரிப்பாளர் என இரு தேசிய விருதுகளோடு, ‘கயாமத் சே கயாமத் தக்’, ‘ராக்’ ஆகிய இரு படங்களில் நடிப்புக்காக ‘ஸ்பெஷல் மென்சன்’ தேசிய விருதுகளையும் (சான்றிதழ் மட்டும்) பெற்றவர். இருமுறை தவறவிட்ட சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினை, இம்முறை ‘லால் சிங் சத்தா’ அவருக்குப் பெற்றுத் தரும் என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x