Last Updated : 03 Jun, 2014 09:10 AM

 

Published : 03 Jun 2014 09:10 AM
Last Updated : 03 Jun 2014 09:10 AM

எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை விரட்டும் யுனானி

யுனானி மருத்துவத்தின் வேர் கிரேக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்து அரேபியாவுக்கு வந்து வளர்ச்சி பெற்ற பின்னர், பெர்சியா (இன்றைய ஈரான்) வழியாக இந்திய வந்தது. இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக யுனானி மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. மொகலாயர் காலத்தில்தான் யுனானி சாதாரண மக்களிடையே பிரபலம் ஆனது.

ஆங்கிலேயர் காலத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்துப் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் இருந்த தடைகள் யுனானிக்கும் இருந்தன. நாடு விடுதலை பெற்ற பிறகு மகாத்மா காந்தியின் தலையீட்டை அடுத்து மத்திய அமைச்சரவையில் இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க 1948-ல் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளுக்கு ஆதரவு கிடைத்தது.

யுனானியின் அடிப்படை

யுனானி என்ற வார்த்தைக்கு ‘கிரேக்கத்தைச் சேர்ந்தது' என்று அர்த்தம். யுனானி வைத்திய முறை மனித உடலில் இருக்கும் நான்கு திரவங்களான கோழை (Phlegm), குருதி (Dam), மஞ்சள் பித்தம் (Yellow bile), கரும் பித்தம் (Black bile) ஆகியவற்றுக்கிடையே உள்ள சமநிலையின்மையை நோய்க்கான காரணமாகப் பார்க்கிறது. மனிதனுக்கு நோய் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளையும் நான்காகப் பார்க்கிறது: வெப்பம், குளிர், ஈரம், உலர்வுத்தன்மை. உடலுக்கு வரும் நோய்களை நிலம், காற்று, நீர், நெருப்பு என்ற நான்கு அடிப்படை அம்சங்களின் சமநிலையின்மையாகவும் பார்க்கிறது. இதுதான் யுனானியின் அடிப்படை.

மனிதனின் சூழ்நிலைகளையும் நான்காகப் பார்ப்பது யுனானியின் தனித்துவ அம்சம். வயோதிகர் என்பவர் உலர்வு நிலை கொண்டவர். அவருக்கு ஈரமான மருந்துகளைத் தர வேண்டும். வளரிளம் பருவம், வளர்ந்த பருவம், நடு வயது, முதுமை என்று வாழ்க்கை நிலைகளையும் நான்காகப் பார்க்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு உடல் நிதானம் இருக்கும்.

மேலும் யுனானி, நோயை மட்டும் பார்ப்பதில்லை. முழுமையாக மனித உடலையும் மனதையும் பார்க்கிறது. நோய்க்கு மருந்து அளிக்காமல், நோய் வந்த மனிதரின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் மருத்துவத்தையே யுனானி தர விழைகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் நோய் தானாகவே போய்விடும் என்பதே யுனானி சிகிச்சையின் அடிப்படை.

தமிழகத்தின் சிறந்த யுனானி மருத்துவரும் சமீபத்தில் மத்திய அரசால் பத்ம விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவருமான மருத்துவர் ஹக்கீம் சையத் கலீபதுல்லா, யுனானி மருத்துவம் குறித்து விளக்குகிறார்:

மருந்துகள்

இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைகள்தான் 90 சதவீத யுனானி மருந்துகளில் பயன்படுத்தப் படுகின்றன. விலங்கு சார்ந்த பொருட்களும் கலக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, குறிப்பிட்ட வகை மீனின் தலையில் இருந்து ஒரு பொருளை எடுத்து மருந்துகளில் கலந்து சிறுநீரகக் கற்களை உடைப்பதற்குப் பயன்படுத்துகிறோம். தாது உப்புகளும் உண்டு. பெரும்பாலும் உலோகப் பொருட்கள் கலப்பதில்லை.

உடலில் இதயம், மூளை, கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகளின் நலனை உடலின் ஒட்டுமொத்த நலனுக்கான அடிப்படையாகப் பார்க்கிறது யுனானி.

இதயப் பாதிப்பு உள்ளவர் களுக்குக் கல்லீரலைச் சீர்செய்யும் மருந்தும் கொடுக்கப்படும். மூளைப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் கல்லீரலுக்கான மருந்து கொடுக்கப்படும்.

சிகிச்சை முறை

1.ரெஜிமென்டல் சிகிச்சை எனப்படும் இலாஜ்- பில்– தத்பிர்: இந்த சிகிச்சையில் மருந்து கிடையாது. மசாஜ், கப்பிங், அட்டையைப் பயன்படுத்தி உபரி ரத்தத்தை எடுத்தல் போன்ற முறைகள் பயன்படுத்தப்படும். ஒருவருக்குக் கழுத்துப் பிரச்சினை என்றால், அவரது உறங்கும் நிலையை மாற்றுவது போன்ற எளிய முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. வியர்வை வரவைத்தும், பேதி வரவைத்தும் குணப்படுத்துதல், வாந்தி ஏற்படுத்தி விஷத்தை எடுப்பது, டர்க்கிஷ் பாத் போன்ற சிகிச்சை முறைகள் இதில் அடக்கம். தற்போது இம்முறைகள் ரெஜிமினல் தெரபி எனப்படுகின்றன.

2. உணவு முறை சிகிச்சை எனப்படும் இலாஜ்- பில் - கிஸா: சில உணவு வகைகளைத் தவிர்த்தும், சில உணவு வகைகளைச் சேர்த்தும் கொள்வதன் மூலம் நோயைக் குணப்படுத்துவது.

3.மருந்து சிகிச்சை எனப்படும் இலாஜ்- பி- தவா:

ஹக்கீம்கள் (யுனானி மருத்து வர்கள்) பொதுவாக ஒற்றை மூலிகை மருந்தை நோயாளிகளுக்குக் கொடுப்பதில்லை. பத்து, பதினைந்து மூலிகைகள் சேர்ந்த மருந்துகளை லேகியம், பொடி, கேப்ஸ்யூல் வடிவில் கொடுக்கிறோம். ஊசி மருந்து இல்லை. யுனானி மருத்துவத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன.

4.அறுவை சிகிச்சை எனப்படும் இலாஜ் - பில் - யாத்: கடைசிக் கட்டமாகச் செய்யப்படுகிறது அறுவை சிகிச்சை.

நோயறியும் முறைகள்: ஸ்டெதஸ்கோப், எக்ஸ்ரே, இ.சி.ஜி. உள்ளிட்ட எல்லா நோயறிதல் முறைகளையும் நாங்களும் பின்பற்றுகிறோம்.

யுனானியில் முஸ்லிம்கள்

யுனானி மருத்துவ நூல்கள் முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தன. அரபு நாடுகளுக்கு வந்த பிறகு அரபி மொழியிலும், பிறகு பெர்சிய மொழியிலும் எழுதப்பட்டன. யுனானி மருத்துவ முறை இந்தியாவுக்கு வந்த பிறகு மூல நூல்களை உருதுவில் மொழிபெயர்த்தார்கள். அக்பரின் ராணுவத்தில் அரபியர்கள், பெர்சியர்கள், சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவற்றைக் கலந்தே உருது மொழி உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை உருது மொழியை இஸ்லாமியர் அல்லாதவரும் பேசிவந்தார்கள்.

சுதந்திரத்துக்குப் பிறகுதான் ஒரு மதத்தவருக்கான மொழியாக உருது மாறிவிட்டது. இப்போது யுனானி மருத்துவப் பாட நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. ஆனால் கிளாசிக் டெக்ஸ்ட் எனப்படும் மூல நூல்கள் உருதுவிலேயே உள்ளன. அதனால் பாடமொழி உருதுதான். அதனால்தான் அதிக ஹக்கீம்கள் முஸ்லிம்களாக உள்ளனர். நாட்டில் முஸ்லிம் அல்லாத 10 சதவீதம் பேர் யுனானி மருத்துவம் பார்க்கிறார்கள்.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருந்துகளுக்கு இடையிலான வித்தியாசம்?

எடுத்துக்காட்டாக, வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் பொருளை மூன்று முறைகளும் பயன்படுத்துகின்றன. ஆனால், வேறு வேறு பொருட்களைப் பயன்படுத்துகிறோம். நான் வேப்பமரத்தின் குருத்து இலையைப் பயன்படுத்துகிறேன். சித்தத்தில் வேப்பங்குச்சி, ஆயுர்வேதத்தில் வேப்ப விதையைப் பயன்படுத்துகிறார்கள். ஆயுர்வேதம் இந்து ஐதீக முறைகளைப் பயன்படுத்துகிறது. அதாவது மருந்தை நொதிக்கச் செய்கிறது. நொதிக்கும்போது ஆல்கஹால் உருவாகிறது. ஆனால், யுனானியில் மதத்துக்கும் மருத்துவ முறைக்கும் தொடர்பு கிடையாது.

யுனானியின் பரவல்

யுனானி தோன்றிய, வளர்ந்த இடங்களில் அதாவது கிரேக்கத்திலும் அரபு நாடுகளிலும் ஈரானிலும் இப்போது வீட்டு மருத்துவமாகச் சுருங்கிவிட்டது. ஆனால், நம் நாட்டில் யுனானிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இங்கே இம்மருத்துவம் மக்களின் நம்பிக்கையைப் பரவலாகப் பெற்றுள்ளது. தமிழகத்தில் பதிவுசெய்த மருத்துவர்கள் 1,000 பேர். இந்தியாவில் 50 ஆயிரம் பேர் இருப்பார்கள். பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்திலும் யுனானி மருத்துவம் உள்ளது.

சமீபகாலம் வரை பரம்பரை பரம்பரையாக வந்த மருத்துவர்களே யுனானி முறைப்படி பார்த்துவந்தனர்.

1985-ம் ஆண்டுவரை பரம்பரை மருத்துவத்துக்கு அனுமதி இருந்தது. அதன் பிறகு முறையாகப் படித்தவர்கள் மட்டுமே இந்த மருத்துவத்தைச் செய்ய முடியும்.

யுனானி இன்று

1965-ல் சென்ட்ரல் கவுன்சில் ஃபார் ரிசர்ச் இன் இந்தியன் சிஸ்டம்ஸ் ஆஃப் மெடிசன் அண்ட் ஹோமியோபதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனால் யுனானி மருத்துவக் கல்வி, ஆராய்ச்சிகளில் வளர்ச்சி ஏற்பட்டது. 1979-ல் யுனானி மருத்துவத்துக்கும் தனி கவுன்சில் ஆரம்பிக்கப்பட்டுப் பல பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா முழுவதும் யுனானி கவுன்சிலின் கீழ் 31 யுனானி ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று சென்னையில் ராயபுரத்தில் ரீஜனல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் யுனானி மெடிசன். இங்கே ஆர்த்ரட்டிஸ், மஞ்சள் காமாலை தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இந்தியாவில் உள்ள 40 யுனானி மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று சென்னையில் உள்ளது. தற்போது 7 யுனானி மருந்துகளுக்குக் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. 15 மருந்துகள் பரிசீலனையில் உள்ளன.

மருத்துவர் கலுபதுல்லா - தொடர்புக்கு: 044-28444362, syed.khaleefathullah@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x