Last Updated : 15 May, 2016 01:14 PM

Published : 15 May 2016 01:14 PM
Last Updated : 15 May 2016 01:14 PM

எங்க ஊரு வாசம்: பயணத்தில் பசி தீர்க்கும் உருண்டைச் சோறு!

எங்கள் கிராமத்து வாழ்க்கையில் யாரும் எதையும் தனியாகச் செய்ய முடியாது. எந்தக் காரியத்தையும் சொந்த பந்தங்களோடு சேர்ந்து கூட்டாகத்தான் செய்ய முடியும். அப்படித்தான் கல்யாணங்களும் ஒன்று, இரண்டு என்று மாதத்துக்கு ஒன்றாக முடிக்க மாட்டார்கள். ஐந்தாறு கல்யாணங்கள்வரை சேர்த்தே முடித்து விடுவார்கள். கல்யாண வேலைகள் என்று வந்துவிட்டால் யாருக்கும் ஓய்வு இருக்காது. அதனால் இப்போது கோயிலுக்குப் போகிறவர்கள் போகலாம் என்று பெரியவர்கள் சொல்ல, பெண்கள் உடனே ஆள் சேர்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

பூச்சி அண்டாமல் இருக்க வேண்டுதல்

முதலில் எதற்காக சங்கரன்கோவிலுக்குப் போகிறார்கள் என்றால் ஊரில் இருக்கும் ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் உட்பட எல்லோரும் விடிந்ததிலிருந்து பொழுது அடையும்வரை காட்டில்தான் கிடக்கிறார்கள். இரவு வந்த பிறகும் மாட்டுக்குக் கூளம் பிடுங்குவதற்காகப் படப்படியிலும் தீ எரிக்க அடுக்கடுக்காய் அடுக்கியிருக்கும் விறகுக் கட்டுகளிலும் அலைவதால் அவர்களின் காலடியில் வழுக்கிக்கொண்டு ஓடும் பாம்பு (சில சமயம் கடித்துவிடும்), நட்டுவாக்கலி, தேள், பூரான் என்று பல விஷப் பூச்சிகள் அவர்கள் வேலை செய்யும்போது குறுக்கும்

மறுக்குமாக அலைந்து திரிந்து அவர்கள் நெஞ்சில் திகிலையும் பயத்தையும் ஏற்றியிருந்தது. இப்படி பூச்சி, பொட்டு தெரியாமலும் கடிக்காமலும் இருக்க வேண்டுமென்றால் ராஜபாளையம் பக்கம் இருக்கும் சங்கரன்கோவிலுக்குப் போய் அங்கே அலுமினியம் அல்லது தகரத்தில் செய்திருக்கும் உருவங்களை வாங்கி, உண்டியலில் போட்டுவிட்டால் எந்தப் பூச்சியும் கண்ணுக்குத் தெரியாது என்று ஒரு நம்பிக்கை. ஆறேழு பேர் சேர்ந்துகொண்டு சங்கரன்கோவிலுக்குப் புறப்பட்டுவிடுவார்கள். பெண்கள்தான் இப்படி ஆவலாகப் புறப்படுகிறார்கள் என்றால் அவர்களின் துணைக்காக ஒருவர், இருவர் என்று ஆண்களும் துணைக்குப் புறப்பட்டுவிடுவார்கள். எங்கேயும் நடந்துதான் போக வேண்டும் என்பதால் சங்கரன்கோவில் போய் வர இரண்டு நாள் ஆகிவிடும்.

இப்படிப் போவதற்கு வழக்கமாகக் கஞ்சி கொண்டுபோகும் கலயத்தைவிட இன்னும் கொஞ்சம் பெரிய கலயமாகத் தேர்ந்தெடுப்பார்கள். அதில் சோளக் கஞ்சி, கம்பங் கஞ்சி, உருண்டை பிடித்த வரகு, குதிரைவாலிச் சோறு இவற்றை ஏழெட்டு உருண்டைவரை எடுத்துக்கொள்வார்கள். அதனால் பெரிய சுமையாக இருக்கும். வெறும் கஞ்சி நன்றாக இருக்காது என்பதால் வெண்ணெய் எடுத்த மோரை அந்தக் கஞ்சியில் ஊற்றிக்கொள்வார்கள். போகிற வழியில் பசித்தாலும், ரொம்பக் களைப்பாக இருந்தாலும் இந்த மோரை வயிறாரக் குடித்துக்கொள்ளலாம். கலயத்தின் மீது கஞ்சியைக் கரைக்க, குடிக்க என்று ஒரு மண் சட்டி கவிழ்த்துவைக்கப்பட்டிருக்கும். இந்தக் கஞ்சிக்கு வெஞ்சனமெல்லாம் ஒன்றும் கிடையாது. போகிற வழியில் தக்காளி, மிளகாய், வெங்காயம் என்று நிறைய தோட்டங்கள் இருக்கும். விருப்பமானதைப் பறித்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் போகிற வழியில் தின்பதற்காக வறுத்த எள்ளோடு சுக்கு, கருப்பட்டி போட்டு இடித்த எள்ளுருண்டை, பனங்கற்கண்டு போட்ட சோளப்பொரி மாவு, வரையோட்டில் சிறிது மணலோடு சேர்த்து வறுத்த நிலக்கடலை, கல்லுப்பயறு, காணப் பயறு என்று பலவற்றையும் தாங்கள் கொண்டு போகும் பழைய துணிகளில் முடிந்துகொள்வார்கள்.

மனம் கவரும் நார்ப்பட்டு

கோயிலுக்குப் போகும் இரண்டு நாளைக்கு முன்பே துணி வெளுப்பவரிடம் ஒவ்வொருவரும் கால்படி தானியத்தைக் கொடுத்து மாற்றுச் சேலைகளைக் கொண்டுவரச் சொல்வார்கள். இவர்கள் டவுனிலும் துணி வெளுப்பதால் நார்ப்பட்டு, அந்தி மந்தாரை, கிரேப் சில்க் என்று கொடிகொடியாகப் பூப்போட்ட வண்ணமயமான சேலைகளைக் கொண்டுவந்து கொடுப்பார்கள்.

வழக்கம் போல் மூன்றாம் சாமத்துக் கோழி கூப்பிடும் முன்பே எழுந்து கொல்லையில் பானைகளில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீரை மோந்து தலைவழியே ஊற்றிக் குளித்து முடிப்பார்கள். அந்திமந்தாரை, நார்ப்பட்டை உடுத்திய பிறகு இரும்பு சிணுக்கோரியால் தலைமுடியைச் சிக்கெடுத்து, மரச்சீப்பால் சீவி, வலது பக்கமாக சிறிது சாய்வாகக் கொண்டையும் போட்டு, சிறிது மரிக்கொழுந்தையும் அதில் செருகிக்கொள்வார்கள். அதோடு ஒற்றை மரிக்கொழுந்தைத் தாலியில் செருகி, நெஞ்சின் நடுவே தொங்கவிடும்போது சுமங்கலிகளுக்கெல்லாம் முகம் பொலிவு கண்டு துலங்கும். கல்யாணம் முடித்த பெண்களுக்கு நாட்டு கருவலங்காயில் சேர்த்த பொட்டு நெற்றிக்குப் பொருந்தாது. சந்தையில் கால் துட்டுக்கு வாங்கிய சிவந்த குங்குமம்தான் பொருந்தும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: arunskr@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x