Last Updated : 17 May, 2016 01:31 PM

 

Published : 17 May 2016 01:31 PM
Last Updated : 17 May 2016 01:31 PM

இப்படியும் பார்க்கலாம்: உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயட்டுமே!

எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, அவர்களின் விழாக்களில் ஏதாவது ஒரு சிறுவனோ, சிறுமியோ பொய் மீசை, கத்தியுடன் “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது” என்று இப்போதும் முழங்கிக்கொண்டுதான் இருக்கிறார். சிவாஜிகணேசனின் உணர்வூட்டும் நடிப்புக்காகவும், தமிழ் வார்த்தைகளின் வசீகரத்துக்காகவும் நாளைய தமிழரும் இதே வசனத்தை கர்ஜிப்பார்.

இந்தக் காட்சி டி.வியில் ஓடிக்கொண்டிருந்த போது, வடஇந்திய நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு தமிழும், எனக்கு இந்தியும் தெரியாது. ஆனால் என் மனைவிக்கு இந்தியும் தெரியும். நண்பர் இந்தக் காட்சியின் அழுத்தத்தில் ஈர்க்கப்பட்டு” என்ன சொல்றார் சிவாஜி?” என்றார்.

என் மனைவி அதை இந்தியில் மொழிபெயர்த்துச் சொன்ன பதிலை கட்டுரையின் இடையில் பார்ப்போம்.

பத்து செ.மீ சதுர அளவில் ஒரு கட்டம் வரைந்து அதனுள் ஒரு எறும்பைப் போட்டு “இதனுள் நீ இருந்தாக வேண்டும்!” என்று ஆணையிட்டுப் பாருங்கள். எறும்பின் மொழி தெரிந்தால் அது இரண்டு பக்க அளவு கட்டபொம்மன் வசனம் பேசுவதைக் கேட்பீர்கள். சரி, மனிதக் குழந்தைகளிடம் வருவோம்.

எது சுதந்திரம்?

ஒரு கைக்குழந்தையை நீங்கள் விரும்புகிறபடி எல்லாம் ஆட்டுவிக்க முடியுமா? தான் விரும்பிய பொம்மைக்காக, சாக்லேட்டுக்காகக் கடையிலேயே படுத்துவிடும் பிடிவாதக் குழந்தைகள் இருக்கின்றன.

எறும்பாகட்டும், குழந்தையாகட்டும், இயற்கையில் எல்லாமே சுதந்திரமாய் இருப்பதையே விரும்புகின்றன. “இப்படிச் செய், அப்படிச் செய்யாதே” என்றால் அடிமைத்தனத்தை எதிர்த்து “காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளம் சொம்புக்குள்ளே அடங்கிவிடாது” என்று சுதந்திர கீதம் பாடுகின்றன.

சரி, சுதந்திரம் என்றால் என்ன? அதை நடைமுறையில் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம்?

யாருடைய ஆளுமைக்கும், அதிகாரத்துக்கும் பலியாகாமல் தனது விருப்பப்படி தன்னை நடத்திக்கொள்ள ஒருவருக்கு இருக்கும் நிபந்தனையற்ற உரிமையை சுதந்திரம் என்கிறோம். ஏன் சுதந்திரத்தை விரும்புகிறோம்? எதையும் எவரையும் சார்ந்திருப்பவருக்கு சந்தோஷம் கிடைப்பதில்லை என்பதால், அடிமைத்தனத்தில் அலர்ஜி அடைகிறோம்.

இதிலுள்ள உள் ஷரத்துகளில் ஒன்று, நாம் விரும்புகிற பெரும்பான்மையான விஷயங்களை அடுத்தவர் உதவியின்றி செய்துவிட முடியுமா? அதாவது, நாம் விரும்பிய நேரத்தில், விரும்பிய செயலைச் செய்ய, நமக்குத் தேவையான ஒருவர், தேவையான நேரத்தில், விருப்பமான விதத்தில் அந்தச் செயலைச் செய்தாக வேண்டும்.

இதில் ஒளிந்திருக்கிற நீங்கள் சுதந்திரமாய் இருந்து இன்புற அடுத்தவர் கொஞ்சம் அடிமைத்தனத்துடன் இருக்க வேண்டும் என்ற கருத்தைக்கூட விடுங்கள். இன்னொருவரைச் சார்ந்திருந்தால், அது எப்படி நீங்கள் சுதந்திரமாய் இருப்பதாக அர்த்தமாகும்?

ஆனால், நடைமுறை வாழ்வில் என்ன நடக்கிறது? ஒரு சின்னத் தலைவலிக்கு காபி, டீ போட்டுத்தர, அவசரத்துக்கு எளிய ரசம் வைத்து, சோறு பொங்கத் தெரியாமல் அடுத்தவரின் அடுப்பு தேடி அலைகிறோம்.

“எனக்காக இதைச் செய்யேன்” என கேட்பதில் பெரும்பாலானவை நாமே செய்து முடிக்கும் ரகத்தைச் சேர்ந்தவைதான். இதில் அடுத்தவர்கள் நமது விருப்பப்படி நடக்காவிட்டால், “சின்ன உதவிதானே கேட்டேன்? இதைக்கூட செய்ய மனசில்ல” என்றும் “உலகத்துல யாருமே உதவறதில்ல” என்றும் ஸ்டேட்டஸ் போட்டுக்கொள்கிறோம்.

வாழக் கற்றுக்கொடுப்போம்!

நாகர்கோவில் வட்டாரத்தில் ஒரு கவித்துவமான சொலவடை உண்டு. “உதடு தேயறது, உள்ளங்கால் தேயட்டுமே!” என்பார்கள். அதாவது அடுத்தவரிடம் “அதைச் செய், அப்படிச் செய்” என்று சொல்லிக்கொண்டே இருப்பதன் மூலம் நமது உதடுகள்தான் தேயுமே தவிர, வேறொன்றும் நடக்காது. அதைவிட நமது உள்ளங்கால்கள் தேய்ந்தாலும் பரவாயில்லை என்று நாமே அந்த வேலையைச் செய்துவிடலாம்!

இதன் பொருள் அடுத்தவரிடம் உதவி கேட்கவே கூடாது என்றோ, அடுத்தவர்களின் இதயம் இரும்பால் ஆனது என்றோ அர்த்தமல்ல. அவர்களும் செய்வார்கள். எப்படி?

“வரி, வட்டி, கிஸ்தி...!” என்று துவங்கி ஏற்றமிறைத்தாயா? களை பறித்தாயா?....மாமனா, மச்சானா? மானங்கெட்டவனே!” 10 நிமிடம் சிவாஜி கொந்தளிக்க, அந்த வசனங்களின் சூடான மொழிபெயர்ப்பை ஆவலுடன் நண்பர் கேட்க, படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் என் மனைவி மொழிபெயர்த்த வசனம் இது: “வரி தர முடியாதாம்!”

அடுத்தவர் செய்யும் உதவி இப்படித்தான் இருக்கும்! நீங்கள் கேட்பது உங்களின் எதிர்பார்ப்புக்கிணங்க அமைந்தால் அது உங்கள் அதிர்ஷ்டம். ஆனால் பெரும்பாலான நிகழ்வுகளில் அவர்கள் அவர்களின் வசதிக்கேற்ப செய்வார்கள்!

உதவி பெறுவது ஒரு வரம். அதையே தொழிலாக வைத்திருந்தால், உதவி கோருபவர் “வேற வேலையே கிடையாதா?” என்ற விமர்சனத்தையே சந்திப்பார். அடிக்கடி சொல்லப்படும் “நன்றி” உதடுகளின் வார்த்தையாகி செயற்கையாகி விடுகிறது.

குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என பலர் சொல்லிக்கொள்கிறார்கள். ஆராய்ந்தால், விரும்பிய இடங்களுக்குச் செல்லுதல், விரும்பிய சேனலைப் பார்த்தல், இரவு ஒரு மணிக்கு வந்து கதவைத் தட்டுதல் போன்ற செயல்களுக்கு அனுமதி அளித்திருப்பதையே சுதந்திரம் என்கிறார்கள்.

ஆனால், இத்துடன் அவர்களுக்கு தற்சார்பாக இருப்பதைக் கற்றுக்கொடுத்தால் மட்டுமே அது முழு சுதந்திரமாகும். உங்கள் குழந்தைகளை “கொஞ்சம் அந்த ஃபேனைப் போடுங்கள், இந்த ரிமோட்டை எடுத்துக் கொடுங்கள்” போன்ற குரல்களை எழுப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளுங்கள்.

எளிய உணவுகளை சமைக்கக் கற்றுக் கொடுப்பதன் மூலம் ஒரு கலையைக் கற்றுக் கொடுப்பதோடு உலகின் எந்த மூலையிலும் வாழக் கற்றுக்கொடுக்கிறீர்கள். சிறிய மின்பழுதுகளை நீக்குதல், வாகனப் பழுதுகளைச் சரி செய்தல் ஆகியவற்றைக் கற்கிற குழந்தைகள் குறைந்தது இரண்டு தொலைபேசி எண்களை தனது செல்லிருந்து நீக்கி விடுகின்றன.

இவை அவர்களைத் தற்சார்பு அடையச்செய்து, தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் அடுத்தவரின் சுதந்திரத்தையும் மதிக்கச் சொல்லும்!

தொடர்புக்கு:shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x