Published : 29 Jun 2022 10:30 AM
Last Updated : 29 Jun 2022 10:30 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மனிதனைவிட வேகமாக ஓடுமா யானை?

இரிடியம் மோசடி என்று செய்திகளில் வருகிறது. அது மிகவும் உயர்வான பொருளா, டிங்கு?

- ஆர். கவின், 9-ம் வகுப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.

இரிடியம் ஒரு தனிமம். இது பிளாட்டினம் குழுவைச் சேர்ந்தது. வெள்ளை, லேசான மஞ்சள் கலந்த வெள்ளை நிறங்களில் காணப்படுகிறது. அரிதாகக் கிடைக்கும் உலோகங்கள் எல்லாம் விலை அதிகமானவையாக இருக்கும்.

அப்படித்தான் இரிடியமும் குறைவாகவே கிடைக்கிறது. அதனால் விலை மதிப்புமிக்கதாக இருக்கிறது. ஒரு காலத்தில் பூமியில் இரிடியம் மிகக் குறைவாக இருந்தது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விண்கல் மோதியதன் காரணமாக, விண்கல்லில் இருந்த இரிடியம் பூமியில் இறங்கியது. அதனால்தான் பூமியில் இரிடியத்தின் அளவு அதிகரித்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள், கவின்.

யானையின் எடை அதிகம். யானை துரத்தினால் மனிதனால் வேகமாக ஓடித் தப்பித்துவிட முடியாதா, டிங்கு?

- எம்.கே. தினேஷ், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

யானையின் எடை அதிகம்தான். ஆனால், யானையால் வேகமாக ஓட முடியும். ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனால் யானை அளவுக்கு வேகமாக ஓட இயலாது.

யானை ஒரு மணி நேரத்தில் சுமார் 5 கி.மீ. தொலைவைக் கடந்துவிடும். சமதளத்தில் யானையும் மனிதனும் ஓடினால், யானை மனிதனை எட்டிப் பிடித்துவிடும்.

ஆனால், மேடு பள்ளங்களில் மனிதனால் எளிதாக ஏறி இறங்கிவிட முடியும். யானையால் அப்படி மேடு பள்ளங்களைக் கடக்க முடியாது, தினேஷ்.

ஏன் ஒட்டும் பசை அதன் பாட்டிலில் மட்டும் ஒட்டிக்கொள் வதில்லை, டிங்கு?

- தா. லோகேஸ்வரி, 12-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.

எதையாவது ஒட்டுவதற்குப் பசையைப் பயன்படுத்தும் போது அது எளிதில் காய்ந்து, இறுக்கமாக ஒட்டிக்கொள்ள வேண்டும். பசை இறுக வேண்டுமானால் காற்றுப் பட வேண்டும். பாட்டிலுக்குள் பசை இருப்பதால் எளிதில் காயாமல், நெகிழும் தன்மையுடன் இருக்கிறது. மூடியைக் கழற்றி வைத்துவிட்டால், பாட்டிலில் இருக்கும் பசையும் காய்ந்து ஒட்டிக்கொள்ளும், லோகேஸ்வரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x