Published : 07 Jun 2022 03:48 PM
Last Updated : 07 Jun 2022 03:48 PM

துடிக்கும் தோழன் 7 | டென்ஷன் இதயத்துக்கு நல்லதல்ல

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் ரத்த அழுத்தம் முக்கியமானது. இது பரம்பரையாக வரலாம். நம்முடைய வேகமான வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படலாம். அழுத்தம் நிறைந்த பணி காரணமாகவும் இருக்கலாம். அதனால், மனத்தைத் தளர்வாக வைக்க வேண்டும். ஓய்வுநேர விளையாட்டுகள், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது, யோகா, தியானம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க உதவும்.

ரத்த அழுத்தம் பார்க்கும்போது மேல் அளவு, கீழ் அளவு குறிப்பிடுகிறார்கள் அல்லவா? கீழ் அளவு அதாவது டயஸ்டாலிக் ப்ரெஷர் ரத்த நாளங்கள் இறுகுவதால் ஏற்படுவது. மேல் அளவு குறுகிய நாளங்கள் வழியாக ரத்தத்தை பம்ப் செய்ய இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டுமல்லவா அதனால் ஏற்படுவது. நடைபயிற்சி உடலுக்கும் மனத்துக்கும் நல்லது. அதுவும் நல்ல நண்பருடனோ வழ்க்கைத் துணையுடனோ மனம்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பது ரொம்பவும் நல்லது. மனம் லகுவாகி ரத்தக் குழாய்களும் தளர்ந்து ரத்த ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முறையாக மருத்துவர்களிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

படுத்திருக்கும் நிலை, உட்கார்ந்த நிலை, நிற்கும் நிலை என்று மூன்று நிலைகளில் ரீடிங் எடுப்பார்கள். அதன்பின் தகுந்த மருந்துகள் அளிப்பார்கள். ஒவ்வொருவர் உடல் நிலையைப் பொறுத்து மருந்துகள் மாறலாம். உங்களுக்கு ஒரு மருந்து ஒத்துப்போனால் அதையே எடுத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் மருந்துகளையோ மருத்துவரையோ மாற்றாதீர்கள். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் குறைக்க வேண்டும். அதற்காகக் கறி, கூட்டு, சாம்பாரில் உப்பு குறைவாகப் போட்டு வீட்டில் உள்ளவர்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். அப்பளம், ஊறுகாய், புளிக்குழம்பு, கருவாடு, வத்தல்கள் போன்ற உப்பு மிகுந்த உணவு வகைகளைத் தவிர்த்தாலே போதும். நம் நாட்டில் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் நமக்கு ஓரளவுக்குத்தான் உப்பு தேவை.

சிகிச்சை முறைகள்

தீவிர மாரடைப்பை எப்படிக் கையாளுகிறார்கள் என்று பார்த்தோம். குணமானபின் இரண்டாவது பாதிப்பு வராமல் இருக்க சிகிச்சை இருக்கிறது. அதேபோல் உடனே மாரடைப்பு வரும் சாத்தியம் இருக்கிறது என்றால் அதைத் தடுக்கவும் சில வழிகள் உள்ளன. ஒரு இடத்துக்கு நாம் போக வரைபடம் அல்லது ஜிபிஎஸ் மூலமாக வழி தெரிந்துகொள்கிறோம் அல்லவா அதுபோலத்தான் இது. கொரோனரி நாளங்களில் என்னென்ன மாற்றங்கள் எங்கே, எத்தனை அடைப்புகள், எவ்வளவு சதவீதம் அடைப்பு என்பதைக் கண்டுபிடிக்க ஆஞ்சியோகிராம் செய்வார்கள். இது எக்ஸ்ரே வழிகாட்டுதலில் நடக்கும் பரிசோதனை. கையிலுள்ள ரத்தக் குழாய் வழியாகவோ தொடையிடுக்கிலுள்ள ரத்தக் குழாய் வழியாகவோ ஊசிமூலம் ஒரு மெல்லிய பாலிதீன் குழல் செலுத்தப்படும். அது அயோட்டா என்கிற மகாதமனியின் தொடக்கத்தில் இருக்கும் கொரோனரி நாளங்கள் தொடங்கும் துவாரங்களின் வழியாக உள்ளே செலுத்தப்படும். இது எக்ஸ்ரேயில் வித்தியாசமாகப் பளிச்சென்று வெள்ளையாகத் தெரியும். இந்த கதீடர் மூலம் டை எனப்படும் சாயத்தைச் செலுத்துவார்கள். அது எத்தனை அடைப்புகள் இருக்கின்றன, எவ்வளவு சதவீதம் அடைப்பு இருக்கிறது போன்றவற்றை எடுத்துக்காட்டும். உட்செல்லும் சாயம் ரத்த ஓட்டத்தின் வழியாகச் சிறுநீரகத்தை அடைந்து அங்கிருந்து வெளியேறிவிடும்.

இதன்பிறகு இரண்டுவித சிகிச்சை உண்டு. ஆஞ்சியோப்ளாஸ்டி ஒன்று. மற்றது ஸ்டென்ட்டுடன் சேர்ந்த அஞ்சியோப்ளாஸ்டி. முன்பு கூறியது மாதிரியே ஒரு பாலிதீன் கதீடர் மூலமாக ஒரு கம்பி போன்றதைச் செலுத்தி அந்த அடைப்பைச் சுரண்டி நீக்குவார்கள். அந்த இடம் திரும்பவும் குறுகுவதைத் தடுக்க ஸ்டென்ட் என்பதை அங்கே பொருத்துவார்கள். விரியக் கூடிய ஸ்பிரிங் போன்றது என்பதால், விரிந்து ரத்தக்குழாயின் சுவரில் பதிந்து அதை விரிந்த நிலையிலேயே வைக்கும். ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துடன் கூடிய ஸ்டென்ட்களும் உண்டு. இதற்கு ‘ட்ரக் எலூடிங் ஸ்டென்ட்’ என்று பெயர். சில நேரம் நன்றாகக் கட்டியாக உள்ள அடைப்பு இருந்தால் சுழலும் சக்கரம் போன்ற ஒன்றால் குடைந்து அந்த அடைப்பை நீக்க முடியும்.

அடைப்பு மிக முக்கியமான நாளத்தில் இருந்தாலோ நீண்ட அடைப்புகளாக இருந்தாலோ அறுவைச்சிகிச்சை மூலம் மாற்றுப் பாதை உருவாக்குவார்கள். நாம் தேசிய நெடுஞ்சாலையில் போகும்போது ஏதாவது சீரமைப்புப் பணியோ கட்டுமானப் பணியோ நடந்தால் சாலை தடுக்கப்பட்டு ‘டேக் டைவர்ஷன்’ என்று மாற்றுப் பாதை உருவாக்கி இருப்பார்கள் அல்லவா? அதேபோல் அறுவை சிகிச்சையால் ஒரு மாற்றுப்பாதையை உருவாக்குவார்கள். இது ‘ஓபன் ஹார்ட்’ அறுவை சிகிச்சை. இதயத் துடிப்பை நிறுத்தி, முக்கிய ரத்த நாளங்களைச் செயற்கையாக ‘ஹார்ட் - லங்’ மெஷினில் பொருத்தி ரத்தம் இதன் வழியாகச் சென்று உடலுக்கு வேண்டிய பிராண வாயு, சத்துப் பொருட்களைக் கொண்டுசெல்லும். காலில் இருந்து ஒரு சிரையின் பகுதியை எடுத்து கொரோனரியில் உள்ள அடைப்பின் மேலிருந்து அதன் கீழ் வரை பொருத்தி மாற்றுப் பாதையை உண்டாக்குவார்கள் (பை பாஸ்). சிகிச்சையின் முடிவில் இதயத்தை மீண்டும் துடிக்கச் செய்து ரத்த நாளங்களையும் பழைய நிலைக்குக் கொண்டுவருவார்கள்.

கட்டுப்பாடு நல்லது

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மேற்கண்ட சிகிச்சை முறைகள் மாரடைப்பின் மூல காரணத்தை நீக்குபவை அல்ல. இன்னொரு மாரடைப்பு திரும்பவும் ஏற்படச் சாத்தியம் இருக்கிறது. அதனால் எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். முன்பு கூறப்பட்ட காரணிகளான சர்க்கரை நோய் போன்றவை கட்டுக்குள் இருக்க வேண்டும். புகை பிடிப்பது அறவே கூடாது. மாவுச் சத்து, கொழுபு உணவு போன்றவற்றை உணவில் குறைத்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவைச் சாப்பிட வேண்டும். நேரம் தவறாமல் உணவும் உறக்கமும் வேண்டும். 6 – 8 மணி நேர உறக்கம் இரவு 10 மணியிருந்து காலை 6 மணிக்குள் இருக்க வேண்டும். தவிர இரவில் 1 மணி வரை கண் விழித்து காலை 8 – 9 மணி வரை உறங்குவது இயற்கையானது அல்ல.

உங்கள் வாழ்க்கை ஒரு முரட்டுக் குதிரையில் சவாரி செய்வது போலத்தான். லகானை எப்போதும் கையில் கட்டுக்குள் வைத்திருந்தால், குதிரை சந்தை நெருக்கத்தில் நுழைந்தாலும் தறிகெட்டு ஓடாது. நம் வாழ்விலும் ‘சந்தை நெரிஅல்’ ஏற்பட்டால் சேதப்படாமல் தப்பலாம். ‘ஓபன் ஹார்ட்’ அறுவைச் சிகிச்சைக்கு ஆரம்பத்தில் மார்புக் கூட்டின் நடு எலும்பை (ஸ்டெர்னம்) பிளந்து இதயத்தை அடைய வழிசெய்வார்கள். சிகிச்சை முடிந்ததும் இது கம்பிகளால் இணைக்கப்படும். எலும்பு கூடிய பிறகு கம்பிகள் நீக்கப்படும்.

கல்யாணி நித்யானந்தன்

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு) தொடர்புக்கு: joenitya@yahoo.com
(தற்போது 87 வயதாகும் டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.)

முந்தைய அத்தியாயம் > நீரிழிவும் உடல் பருமனும் இதயத்துக்குப் பகை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x