Published : 13 May 2016 12:28 PM
Last Updated : 13 May 2016 12:28 PM

சினிமா ரசனை 45: நீங்கள் எப்படிப்பட்ட ரசிகர்?

இன்றே கடைசி’ என்று சொல்வதைப்போல இந்தத் தொடருக்கு இது கடைசி வாரம். இருப்பினும் ‘தி இந்து’ தமிழ் வழியாக வாய்ப்பு அமையும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் சந்திப்போம். இத்தனை வாரங்கள், ‘சினிமா ரசனை’ என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்களைப் பார்த்தோம். எனவே, சினிமா ரசனை என்றால் என்ன? திரைப்படங்களைப் பார்க்க அது அவசியமா என்பது உட்பட சினிமா ரசனையை ஒட்டி சில கருத்துகளை இந்த வாரம் பார்க்கலாம்.

நீங்கள் நல்ல ரசிகரா?

ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம். அதில் நமக்குப் பிடித்த/பிடிக்காத நடிகரோ நடிகையோ இயக்குநரோ இசையமைப்பாளரோ, இன்னும் பலரோ இருப்பதைப் பொறுத்தே அந்தப் படத்தைப் பற்றிய நமது கருத்தும் உருவாகிறது. பெரும்பாலும் இதுதான் நடைமுறை. இதற்குக் காரணம் நாம் எப்போதுமே யாருக்கோ ரசிகர்களாகவோ/ வெறியர்களாகவோ இருந்துகொண்டே இருக்கிறோம். இதனால் அவர்கள் இருக்கும் படம் நன்றாக இல்லாவிட்டாலும் அதை நல்ல படம் என்று நிறுவுவதிலேயே நமது நேரம் முழுக்கச் செலவாகிறது. இதை விட்டுவிட்டு, திரைப்படம் என்ற ஒன்றை எந்த முன்முடிவும் இல்லாமல் அணுகினால் அந்தத் திரைப்படம் நமக்குத் தரும் அனுபவமே வேறாக இருக்கும். நல்ல சினிமா ரசிகர் இதைத்தான் செய்வார்.

‘சினிமா ரசனை’ என்பது மேலைநாடுகளில் மிகவும் விரிவானதொரு விஷயம். ஒரு திரைப்படத்தை எப்படி அணுக வேண்டும் என்பதில் அங்கே பலரும் விரிவான புத்தகங்களே எழுதியுள்ளனர். திரைக்கல்லூரிகளில் இது ஒரு பாடமாகவே கற்பிக்கப்படுகிறது. இது ஏன் என்றால், ஒரு திரைப்படத்தை அணுகும் முறைகளே ஒரு திரை ரசிகராக நம்மை உருவாக்குகின்றன. ஒரு திரைப்படத்தில் என்ன கருத்து சொல்லப்படுகிறது; அந்த இயக்குநரின் பாணி என்ன; திரைக்கதையில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் வாயிலாக நமக்குச் சொல்லப்படும் செய்திகள் என்ன; படத்தின் இசை நமக்கு எப்படிப்பட்ட உணர்வை வழங்குகிறது; படத்தொகுப்பு எப்படியெல்லாம் நமது திரை அனுபவத்தை மேம்படுத்துகிறது; இப்படி, ஒரு திரைப்படத்தைப் பல கோணங்களில் அணுக முடியும். இவற்றையெல்லாம் ஒரு திரைப்படம் காணும்போது நாம் கவனித்தால், அது நம் ரசனையை அவசியம் மேம்படுத்தும். எனவே, ‘சினிமாவை ரசித்தல்’ என்பது ஒவ்வொரு திரை ரசிகருக்கும் அவசியம்.

வேறுபாட்டை உணருங்கள்

அடுத்ததாக, ஒரு திரைப்படத்தை நாம் மகிழ்ச்சியுடன் பார்ப்பதற்கும், ஒரு திரைப்படத்தை மனதாரப் பாராட்டுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஒரு காமெடிப் படத்தை விழுந்து புரண்டு சிரித்துக்கொண்டே ஜாலியாகப் பார்க்கிறோம். ஆனால், அந்தப் படம் நமது மனதில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்றால் – மறுநாள் எழுந்தவுடன் அப்படம் நமது நினைவிலேயே இல்லை என்றால் – அது முதல் வகையைச் சேர்ந்தது. அதுவே, ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதே நமது மனதில் ஏதோ ஒரு மாற்றம் எழுந்து, மறக்க முடியாத அனுபவத்தை அந்தப் படம் தந்து, நம்மை நன்றாக யோசிக்க வைத்து, அதன்மூலம் நமது புரிதலை மேம்படுத்தி, ஒரு மனிதராக நமது வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது என்றால் அது இரண்டாவது வகை. இப்படிப்பட்ட படங்கள்தான் ‘சினிமா ரசனை’ என்பதின் கீழ் வருவன.

பிடுங்கி எறிய வேண்டிய களை

‘ஆர்ட் படங்கள்’ என்ற வகையைச் சேர்ந்த படங்கள்தான் வாழ்க்கையைப் பற்றிப் போதிக்கும்; நமக்கெல்லாம் வாழ்க்கையில் ஏற்கெனவே ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் உள்ளன; எனவே, நமக்குத் தேவையெல்லாம் ஜாலியான படங்களே’ என்பது போன்ற எண்ணங்கள் வலுவாக ஒரு களைச்செடியைப் போல் நம் மனதில் வேரோடிப்போய் இருக்கின்றன என்பதைக் கவனித்திருக்கிறேன். பிடுங்கி வீசப்பட வேண்டிய எண்ணம் இது. இப்படி நாம் நினைத்துக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்று இந்தத் தொடரில் தமிழ்ப் படங்களைப் ஆராயும்போதே நாம் கவனித்திருக்கிறோம். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உலகின் சிறந்த படங்களின் பட்டியலில் இடம்பெறும் படங்களை நம் இந்தியாவும் தமிழகமும் மிகக் குறைவாகவே எடுத்திருக்கின்றன. தொடக்கத்திலிருந்தே சினிமா என்றால் பொழுதுபோக்கு என்ற எண்ணம் நம் மனதில் வேரூன்றிவிட்டது. பொழுதுபோக்கையே ரசித்துக்கொண்டிருப்பதால்தான் நம் மனதில் மேலே சொன்ன எண்ணம் உதிக்கிறது. இப்படிப்பட்ட நிலைக்கு நாம் எல்லாருமே காரணம். மக்களுக்கு நல்ல திரைப்படங்களைப் பற்றிக் கொண்டுசேர்க்க வேண்டிய ஊடகங்கள், பிரபல நடிகர்களைப் பற்றிய செய்திகளையே முக்கியமாக எண்ணி வெளியிடுகின்றன. நல்ல படங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெரும்பாலான ஊடகங்கள் ஏற்படுத்துவதில்லை. தமிழகத்தில் ஊடகங்கள் உருவாகத் தொடங்கிய காலத்திலிருந்தே இதுதான் நிலை.

மாறாக, உலகின் பிற பெரும்பாலான நாடுகளில் ஆர்ட் படங்கள், வணிகப் படங்கள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலான திரைரசிகர்களுக்கு உண்டு. இரண்டு வகையான படங்களையும் அவர்கள் சமமாகவே எண்ணுவார்கள், பார்ப்பார்கள்.

மாற்றம் தேவை

திரைப்படம் என்றாலே பொழுதுபோக்கு என்பது பெரும்பாலான ஊடகங்களால் தவறாகவே பரப்பப்பட்டதால்தான் நம்மூரில் இன்னும் திரைப்படங்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இது ஊடகங்களின் பிரச்சினை மட்டுமே இல்லை; நல்ல இலக்கியங்களை நாம் படிக்கிறோமா? ரசனை உணர்வை மேம்படுத்தும் புத்தகங்களின் பக்கம் நாம் செல்கிறோமா? ஒரு மனிதராக, நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? பிறரை மதிக்கிறோமா? சக மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கிறோமா? அவர்களது உரிமைகளை மதித்து, நாம் என்ன செய்தாலும் அவர்களை பாதிக்காதவண்ணம் வாழ்கிறோமா? நாம் வாழ்வதைப் போலவே வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறோமா?

இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாகவே இலக்கியமும் திரைப்படங்களும் இருக்கின்றன. நல்ல இலக்கியம் என்பது மனிதர்களை மேம்படுத்தும். நல்ல திரைப்படம் என்பது மனிதர்களை வளப்படுத்தும். நம்மை அடுத்த நிலையை நோக்கி நகர்த்தும். நல்ல படங்களை நாம்

தேடத் தொடங்கினால், நமக்கே ஏராளமான நன்மைகள் உண்டு. இதுதான் நல்ல திரைப்படம் ஒன்றின் வேலை. இலக்கியமும் இதைத்தான் செய்கிறது.

சினிமா என்பது மிகப் பிரம்மாண்டமான மாற்றங்களை மனிதர்களின் மனதில் நிகழ்த்த வல்லது. ஒரே ஒரு நல்ல திரைப்படம் பார்த்தாலே அந்த உணர்வு நமது மனதில் நீங்காமல் நிறைந்திருப்பதை அறிய முடியும். அதேசமயம், சில நேரங்களில் மோசமான படங்களையும் காண வேண்டிவரும் என்பதை மறுக்க முடியாதுதான்.

இருப்பினும், ஒரு நல்ல திரைப்படம், மனிதர்களாகிய நம்மை முற்றிலும் அடியோடு மாற்றும் திறன் உடையது என்பதே உண்மை. அப்படிப்பட்ட மாற்றத்தை ஒரு திரைரசிகர் உணர்வதற்காகவே ‘சினிமா ரசனை’ என்ற பதம் உபயோகப்படுகிறது. உலகின் தலைசிறந்த திரைமேதைகள் எடுத்த படங்கள் இப்படிப்பட்டவையே. அவற்றில் பலரைப் பற்றி இந்தத் தொடரில் நாம் பார்த்திருக்கிறோம்.

அதேசமயம் அப்படிப் பார்க்காதவர்களும் ஏராளமாக உள்ளனர். வாழ்க்கை முழுதும் திரைப்படங்கள் பற்றி எழுதினாலும்கூட உலகின் தலைசிறந்த திரைமேதைகள் அத்தனை பேரையும் பற்றி எழுதிவிட இயலாது. எனவே முடிந்தவரை நாம் இப்படிப்பட்ட மேதைகளின் திரைப்படங்களைப் பார்த்து, நமது ரசனையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இந்தத் தொடரின் பின்னால் உள்ள எண்ணம். பல நேரங்களில், நமக்குள் ஆர்வம் இருக்கும். ஆனால், அந்த ஆர்வத்தைச் சரியாகத் திசைதிருப்ப முடியாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஆர்வம் உடைய நண்பர்களுக்கு ஒரு சிறு துரும்பையாவது எடுத்துப் போட்டு இந்தத் தொடர் உதவும்-உதவியிருக்கும் என்று நம்புகிறேன்.

அப்படி உதவியிருந்தால் மகிழ்ச்சி. இத்தனை நாட்கள் இந்தத் தொடரைப் படித்ததற்காக உங்களுக்கு எனது நன்றி! மீண்டும் வேறொரு சந்தர்ப்பத்தில் இன்னும் பல திரைப்படங்களோடு சந்திப்போம். முடிந்தவரை உங்களால் முடிந்த நல்ல திரைப்படங்களை நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். நன்றி!

“திரைப்படங்களுக்குச் செல்வது என்பது, மறுபடியும் தாயின் கருவறைக்குள் செல்வதைப் போன்றதே… இருட்டில் அமர்ந்துகொண்டு, அமைதியாக, ஒருவித தியான நிலையில், திரையில் தோன்றப்போகும் உணர்ச்சிபூர்வமான வாழ்க்கைக்காகக் காத்திருக்கிறோம்”

– ஃபெடெரிகோ ஃபெலினி.

(நிறைந்தது)

கருந்தேள் ராஜேஷ்

- தொடர்புக்கு rajesh.scorpi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x