Last Updated : 06 May, 2016 01:08 PM

 

Published : 06 May 2016 01:08 PM
Last Updated : 06 May 2016 01:08 PM

புறப்படும் புதிய இசை- 6: கொஞ்சும் காதல் இசை

இன்றைய இசை காதுகளுக்குத்தான் மனதுக்கு அல்ல எனச் சொல்கிறார்கள். ஆனாலும் காதுகளையும் தாண்டி மனதுக்குள் ரீங்காரமிடும் பாடல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்’ என இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாட ஆரம்பித்தது இன்றும் இனிமையாய் ஒலிக்கிறதே! ‘இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து’ எனப் பாடாத காதல்கள் உண்டா? இந்த இனிமையான, அமைதியான மெலடியை கொடுத்த நிவாஸ் பிரசன்னா 2014-ல் ‘தெகிடி’யில் தொடங்கி, ‘சேதுபதி’, ‘ஜீரோ’ என அடுத்தடுத்து இனிய இசையைப் பொழியத் தொடங்கிவிட்டார்.

திருநெல்வேலியில் குட்டிப் பையனாகச் சுற்றித் திரிந்தபோதே இசையமைப்பாள ராகும் கனவு நிவாஸுக்குத் துளிர்த்தது. 10 வயதில் கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். ஆனால் திரையிசையில்தான் மனம் லயித்தது. மாக்டலேன் பள்ளியில் படிக்கும்போது டேவிட் தாம்சனிடம் பியானோ படிக்க ஆரம்பித்தார். 10-ம் வகுப்பில் இருக்கும்போதே லண்டன் ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக்கில் ஏழு கிரேடு முடித்து விரல்கள் பியானோவில் விளையாடின. அடுத்து சென்னைக்கு வந்து கல்லூரியில் விஸ்காம் சேர்ந்தாலும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது மட்டுமேதான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

நட்பு தந்த வாய்ப்பு

இசை ஞானமும் ஆர்வமும் நாளுக்கு நாள் வளர்த்தபடியே நண்பர்களின் குறும்படங்களுக்கு இசையமைத்தார். ஒரு நாள் எதேச்சையாக வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் தொலைபேசி எண்ணை அழைத்துச் சந்திக்க வாய்ப்பு கேட்டார். நிவாஸின் பியானோ வாசிக்கும் திறன் ராஜேஷ் வைத்யாவைக் கவர, மேடைக் கச்சேரிகளில் அவரோடு இணைந்து வாசிக்க ஆரம்பித்தார். அடுத்த திருப்புமுனை சைந்தவியின் நட்பால் ஏற்பட்டது. பாரதியார் பாடல்களுக்கு நிவாஸ் நவீனமாக இசையமைக்க, சைந்தவி குரலில் ‘கண்ணம்மா’ ஆல்பம் வெளியாகித் திரை வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்தது.

முதலில் ‘வில்லா’ படத்தில் கை நழுவிப்போன வாய்ப்பு ‘தெகிடி’யில் நிறைவானது. விறுவிறுப்பான துப்பறியும் கதை என்பதால் பின்னணி இசையிலும் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. ‘விண்மீன் விதையில்’ பாடல் மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் புகழ் சத்தியப் பிரகாஷ் குரலில் ‘யார் எழுதியதோ’, ஷங்கர் மகாதேவன் பாடிய ‘நீதானே’ இப்படிப் பல மெலடிகள் அணிவகுத்தன. பின்னணி இசையில் சரியான இடங்களில் மவுனம் சஞ்சரித்தது நிவாஸின் முதிர்ச்சியைக் காட்டியது. படத்தின் பிஜிஎம் தனியாகப் பேசப்பட்டது. இந்திய இசை வெளியீட்டு முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘திங் மியூசிக்’ தெகிடி பாடல்களை வெளியிட்டது.

கேலியோ கிண்டலோ இல்லை!

இப்போதெல்லாம் திரைக்கதை சொல்லும் விதத்திலேயே கேலி, கிண்டல் தலை தூக்குகிறது. அதற்கேற்ற மாதிரி இசையிலும் நையாண்டித்தனம் மிதமிஞ்சுகிறது. காதல், ஒப்பாரி, ரவுடித்தனம் என சீரியசான விஷயங்களைக்கூட அடித்து நொறுக்கிக் கிண்டல் செய்யும் இசை ஜாலங்களை சந்தோஷ் நாராயணன், ஷான் ரால்டன், அனிருத் ஆகியோரின் இசையமைப்புகளில் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் நிவாஸ் பிரசன்னா இசையில் காதல் இன்னமும் உன்னதமான உணர்வாகவே இருக்கிறது. ‘சேதுபதி’யில் ‘கொஞ்சிப் பேசிட வேண்டாம்’, ‘ஹவ்வா ஹவ்வா’ போன்ற பாடல்களில் மட்டுமல்லாமல் அனிருத்தையே காதலில் கசிந்துருகி ‘உயிரே உன் உயிரென நான் இருப்பேன்’ என ‘ஜீரோ’-வில் பாடவைத்திருக்கிறார். இப்படத்தின் பின்னணி இசையும் திரைக்கதைக்குப் பலம் சேர்த்தது.

சேதுபதியில் வரும் ‘மழை தூறலாம் வெயில் வாட்டலாம்’ பாடல் படத்தின் ஆன்மாவை வெளிப்படுத்தும் பாடல். பாடல் வரிகளின் மூலம் நா.முத்துக்குமார் உயிரூட்டியிருப்பார். ஆனால் காதல் டூயட்களையும் குத்துப் பாட்டுகளையும் 100 முறை ஒளிபரப்பும் இசை சானல்களும், எஃப்எம்களும் ஏனோ இத்தகைய பாடல்களைப் போடுவதில்லை. இதைத்தான் இசைப் பிரியர்கள் குறிப்பாக இளைஞர்கள் கேட்பார்கள் என அவர்களே சில வகை பாடல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறார்கள். மீண்டும் மீண்டும் அவற்றை மட்டுமே ஒளிபரப்ப அவை ‘ஹிட்’ஆனாதாக அறிவிக்கப்படுகின்றன.

கரைந்துபோகாத இசை

நிவாஸினுடைய இசையின் கருவைப் பியானோவும் புல்லாங்குழலும் தாங்கி நிற்கின்றன. அதில் டிஜிட்டல் பிராசஸிங் இருந்தாலும் 80-களின் இன்னிசையை ஞாபகப்படுத்துவதற்குக் காரணம் அவருடைய இசையில் பியானோவும் புல்லாங்குழலும் முன்னேறி நடைபோட எலக்ட்ரிக் கித்தாரும் டிரம்ஸூம் அனுசரணையாகவே பின்தொடருகின்றன. எந்தக் கருவியின் ஒலியும் மற்றவை மீது மோதுவதும் இல்லை; நம் காதுகளை அறைவதும் இல்லை. பாடகர்களின் குரலையும் இசை அமிழ்த்துவதில்லை.

இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் மெலடி மீது அபாரமான நம்பிக்கை வைத்திருப்பவர் நிவாஸ். காற்றில் கலந்து உருவாகும் இசை காற்றில் கரைந்துபோகாமல் காலங்காலமாக ஒலிக்க வேண்டுமானால் அதில் நாதம் நிரம்பி இருக்க வேண்டும் அல்லவா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x