Published : 24 May 2022 06:43 PM
Last Updated : 24 May 2022 06:43 PM

துடிக்கும் தோழன் 5 | புகை பிடிப்பதால் மாரடைப்பு வரலாம்

தயத்துக்கு வேண்டிய ரத்தம் கிடைக்காததுதான் மாரடைப்பு வருவதற்குக் காரணம் என்று பார்த்தோம். கொரோனரி ரத்த நாளங்கள் குறுகினாலோ அடைப்பு ஏற்பட்டாலோ இதயத்துக்குச் சரிவர ரத்தம் செல்லாது என்றும் பார்த்தோம். ஆனால், ஏன் இந்த அடைப்பு ஏற்படுகிறது, காரணங்கள் என்னென்ன, இதற்குப் பின்னணியில் எவையெல்லாம் இருக்கின்றன என்று பார்க்கலாமா?

புகை பிடிப்பது மிக முக்கியமான காரணம். சிகரெட்டில் உள்ள நிகோடின் என்னும் விஷப்பொருள் உடலுக்கு ஏற்படுத்தும் பாதக விளைவுகளைச் சொல்லி முடியாது. ஒருவேளை நீங்கள் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ என்னவோ. சுத்தமான நிகோடின் ஒரு துளியை நாவில் வைத்தால் 30லிருந்து 60 விநாடிகளுக்குள் அதாவது ஒரே நிமிடத்தில் இதயம் நின்றுவிடும்.

உயிரைப் பறிக்கும் நிகோடின்

தீவிரவாதிகள் பிடிபட்டுவிட்டால் சயனைடு சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டுவிடுவார்கள் என்று செய்தியில் படித்திருப்போம். அடர்ந்த சுத்த நிகோடினும் சயனைடைப் போல் ஒரு நிமிடத்தில் உயிரைப் போக்கக் கூடியது. ஒருதுளி நிகோடின் 32 சிகரெட்டுகளில் இருக்கிறது. ஒவ்வொருமுறை சிகரெட் பிடிக்கும்போதும் அந்த நபர் இறப்பை நோக்கி நகர்கிறார். ஒரே நாளில் 40-50 சிகரெட் பிடிப்பவர்களைக்கூட எனது மருத்துவப் பணியில் கண்டிருக்கிறேன். இவர்களது நுரையீரலில் புகை சேர்ந்து புற்றுநோயாலோ மாரடைப்பாலோ இவர்கள் இறப்பது 95 சதவீதம் உறுதி என்று நான் நிச்சயமாகச் சொல்வேன்.


செயின் ஸ்மோக்கர்ஸ் வீட்டில் புகைக்கும்போது சுற்றியிருக்கும் குடும்பத்தினரும் அந்தப் புகையைச் சுவாசிக்கிறார்கள். வெளியில் நிறைய மனிதர்கள் கும்பலாக இருக்கும் இடத்தில் புகை பிடிக்கும்போது பாசிவ் ஸ்மோக்கிங் காரணமாகச் சுற்றியிருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அந்த அளவுக்குப் புகை உடல்நலத்துக்குப் பகை.

கருவில் இருக்கும் சிசுவைப் பாதிக்கும் புகை

கர்ப்பிணியை ஸ்கேன் செய்யும்போது சிலரது கருவிலிருக்கும் சிசுவின் இதயத் துடிப்பு சீராக இருக்காது. அந்தக் கர்பிணியிடம் நீங்கள் புழங்கும் இடத்தில் யாராவது புகை பிடிக்கிறார்களா என்று கேட்பேன். ஆமாம் என்று தலையசைப்பார்கள். மனைவி புழங்கும் இடத்தில் கணவரைத் தவிர யார் புகைபிடிக்க முடியும்? அந்தக் கணவரைக் கூப்பிட்டு ஸ்கேனில் தெரியும் சிசுவின் சீரற்ற இதயத் துடிப்பைக் காண்பிப்பேன். பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். தனது வாரிசு பிறக்கும் முன்பே உடல் நலம் கெடுவதற்குத் தனது புகை பிடிக்கும் பழக்கம் காரணம் என்பதை உணர்ந்து அவர் திருந்திவிடுவார். புகைக்கு அடிமையான கணவர்கூட மனைவி, குழந்தைகளுடன் இருக்கும்போது புகைபிடிக்க மாட்டார்.

புகைபிடிப்பது ஒருவிதமான பழக்கத்துக்கு அடிமையாவதுதான். மது, கஞ்சா போல் நிறுத்தினால் உடலைப் பாதிப்பதில்லை. ஏன் இவ்வாறு உறுதியாகச் சொல்கிறேன் தெரியுமா? நான் கவனித்துக்கொண்டிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவில், ஒருநாளில் 50, 60 சிகரெட் பிடிப்பவர்கள்கூடச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் 10 - 15 நாட்களில் ஒரு சிகரெட்கூட அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களும் வேண்டுமென்று கேட்க மாட்டார்கள். நிறுத்துவதால் ஏற்படும் எந்தவொரு வித்ட்ராயல் (Withdrawal) அறிகுறிகளும் ஏற்படுவதில்லை. ஆனால், மற்ற போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள், அது கிடைக்காவிட்டால் தவித்துப் போய்விடுவார்கள். அந்தத் தவிப்பு வலிப்பைவிடக் கடுமையானதாக இருக்கும். மதுவுக்கு அடிமையானவர்களுக்குச் சில நேரம் நாங்களே கொஞ்சம் மதுவைக் கொடுத்திருக்கிறோம். போதைப் பழக்கம் இருப்பவர்களுக்குச் சிகிச்சையின்போது அவர்களைத் தூங்கச்செய்ய நாங்கள் அளிக்கும் எந்த மருந்தும் வேலைசெய்யாது. அனால், சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு இது நடப்பதில்லை. குணமாகி வீடு திரும்பும் சிலர் புகை பிடிப்பதை நிறுத்திவிடுவார்கள். சிலர், “டாக்டர் நான் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிடுகிறேன்” என்று சொல்வர்கள். அவர்களுக்கு நான் ஒரு உத்தி சொல்லிக் கொடுப்பது வழக்கம். அதாவது சிகரெட் பெட்டியைச் சட்டைப் பையிலோ எடுக்க வசதியாக மேசை மீதோ வைக்கதீர்கள். நீங்கள் சிரமப்பட்டு எழுந்து சென்று எடுக்கக்கூடிய இடத்தில் அதாவது பீரோ போன்ற இடத்தில்கூட வைக்கலாம். அதேபோன்று தீப்பெட்டி, லைட்டர் இவற்றைக்கூடச் சட்டென்று எடுக்க முடியாதபடி வேறொரு இடத்தில் வைக்கவேண்டும். முயற்சியின்றி எடுக்க முடியாத சூழ்நிலையில் சிகரெட் குடிப்பதைத் தள்ளிப்போட ஆரம்பித்துவிடுவீர்கள்.

சிகரெட் பிடிக்கும் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால்கூட இங்கிதமாக, “நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டேன்” அல்லது “நிறுத்த முயன்றுவருகிறேன்” என்று சொல்லிவிடுங்கள். அதையும் மீறி அவர் உங்கள் எதிரில் புகை பிடிக்க முயன்றால் கறாராக வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். உங்களுக்குத் தயக்கமாக இருந்தால் உங்கள் மனைவி சொல்லட்டும். அப்போதுதான் அவர் பழைய ஞாபகத்தில் உங்கள் எதிரில் சிகரெட் பெட்டியை எடுத்து உங்கள் ஆவலைத் தூண்ட மாட்டார்.

பிடிவாதத்தைக் கைவிட்ட கணவர்

புகைபிடிப்பதைப் பற்றி நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்றால் எனது குடும்ப வாழ்விலும் மருத்துவத் தொழிலிலும் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களே காரணம். எனக்குத் திருமணமான புதிதில் என் கணவர் ஒருநாளைக்குக் குறைந்தது 5 சிகரெட்டுகளாவது புகைப்பார். இதை நிறுத்த முடியாதா என்று நான் கேட்டபோது அவர் விளையாட்டாக சிரித்துக்கொண்டே, “நீ என்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டால் நான் நிறுத்த முயல்கிறேன்” என்றார். நானும் பதிலுக்கு லேசான கோபத்துடன், “உங்களுக்கு இப்போது முப்பது வயது. நான் பார்த்து உங்களை வளர்க்கவில்லை. நீங்கள்தான் உடல் நலனில் அக்கறைகொண்டு முடிவெடுக்க வேண்டும். உங்களுக்கு இந்தப் பழக்கம் காரணமாக நுரையீரல் புற்றுநோய் வந்தால் ஒரு மருத்துவராக நான் வலி மருந்துகள் கொடுப்பேன் அல்லது மரடைப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளித்துக் காப்பாற்றுவேன். அல்லாமல் எதற்காக நான் உங்களிடம் கெஞ்ச வேண்டும்?” என்று கேட்டு அவரைத் திகைக்க வைத்தேன்.

அடுத்து ஒருவாரத்தில் தற்செயலாக நடந்த ஒரு விஷயம் அவரை மாற்றியது. ஒரு முக்கியமான கலந்துரையாடலுக்காக அவர் மும்பைக்குச் சென்றார். அங்கே இவர் வழக்கமாகப் புகைக்கும் சிகரெட் அவர் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் எங்கும் கிடைக்கவில்லை. வேறொரு பிராண்ட் புகைத்திருக்கிறார். மறுநாள் தொண்டை பாறையாகக் கட்டிக்கொண்டுவிட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரே தவிர உரையாட முடியவில்லை. அன்று சிகரெட்டை விட்டவர்தான். அதன்பிறகு அவர் வாழ்ந்த 52-க்கு மேலான ஆண்டுகள் வரையிலும் அவர் சிகரெட்டைத் தொடவே இல்லை. 85 வயதுக்குப் பின் அநாயசமாக அவர் இறைவனடி சேர்ந்தார்.

டாக்டர். கல்யாணி நித்யானந்தன்

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு) தொடர்புக்கு: joenitya@yahoo.com

(தற்போது 87 வயதாகும் டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.)
முந்தைய அத்தியாயம் > விதிமீறச் செய்யும் அன்பு

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x