Last Updated : 27 May, 2016 12:41 PM

 

Published : 27 May 2016 12:41 PM
Last Updated : 27 May 2016 12:41 PM

லைக்ஸ் அள்ளும் வலைத் தொடர்கள்

‘சீரியல்’ என்றாலே அழுது வடியும் ‘மாமியார் - மருமகள்’ கதைதான் என்ற பிம்பத்தை மாற்றியிருக்கின்றன வலைத் தொடர்கள் (Web series). கடந்த ஆண்டு ‘யூடியூபில்’ வெளியாகியிருக்கும் சில வலைத் தொடர்கள் இன்றைய நவீன இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெகு இயல்பாகப் பதிவுசெய்துள்ளன.

இந்தத் தொடர்கள் எல்லாமே இரு பாலருக்கும் பொதுவானதாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ‘ஸ்டார்ட் அப்’ தொடங்குவதில் இருக்கும் சவால்கள், லாங்-டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பிலிருந்து திருமணம் வரையிலான பயணம் எனப் புதுமையான, யதார்த்தமான கதைக்களங்களை இந்தத் தொடர்கள் கொண்டிருக்கின்றன. குறைவான நேரம், இயல்பான திரைக்கதை, நடிகர்கள் தேர்வு போன்றவற்றால் இந்தத் தொடர்கள் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலான தொடர்கள் இந்தியில் எடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கான ஆங்கில ‘சப்-டைட்டிலுடன்’ வெளியிடப்பட்டிருக்கின்றன. இதுவரை, வெளியான பிரபலமான சில வலைத் தொடர்கள்:

பெர்மனெண்ட் ரூம்மெட்ஸ் (Permanent Roommates)

யூ டியூபில் 1,532,392 பார்வையாளர்களைக் கொண்ட ‘தி வைரல் ஃபீவர்’ (The Viral Fever) தயாரிப்பில் வெளியான முதல் தொடர் இது. கடந்த ஆண்டு, உலக அளவில் அதிகமாகப் பார்க்கப்பட்ட வலைத் தொடர்களில் இரண்டாவது இடத்தை இந்தத் தொடர் பிடித்திருந்தது.

2014 அக்டோபர் மாதம் யூ டியூபில் வெளியான இந்தத் தொடர் ‘தி வைரல் ஃபீவர்’ தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெரிய அங்கீகாரத்தை உலகளவில் பெற்றுத்தந்திருக்கிறது.

மூன்று ஆண்டுகளாக ‘லாங் - டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்’பில் இருக்கும் மிகேஷ் (சுமீத் வியாஸ்), தான்யா (நிதி சிங்) என இரண்டு பேரின் காதல் வாழ்க்கையை யதார்த்தமாகப் பதிவுசெய்கிறது இந்தத் தொடர்.

மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் மிகேஷும், மும்பையில் வசிக்கும் தான்யாவும் ‘ஸ்கைப்பில்’ காதலிக்கிறார்கள். இந்தியா வந்தவுடன், முதல் வேலையாகத் தான்யாவிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ‘ப்ரோபோஸ்’ செய்கிறான் மிகேஷ்.

ஆனால், தான்யாவுக்கோ அவசரமான இந்தத் திருமணத்தில் உடன்பாடில்லை. இந்த ‘லாங் - டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்’ திருமணத்தில் முடிந்ததா இல்லையா என்பதுதான் ‘பெர்மனெண்ட் ரூம்மெட்ஸ்’. ஐந்து எபிசோட்களில் ‘லாங் - டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்’ மற்றும் ‘லிவ்-ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நன்மைகளையும் சவால்களையும் நாடகத்தனம் இல்லாமல் நகைச்சுவையுடன் அலசுகிறது.

இந்தத் தொடருக்கு மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த ஆண்டு வெளியான ‘பெர்மனெண்ட் ரூம்மெட்ஸ்’ - ‘சீசன் - 2’வும் இதே வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது. இந்தத் தொடருக்குக் கிடைக்கும் வரவேற்பு, ஒருவிதத்தில் இந்தியர்களின் திருமணம் பற்றிய பார்வை மாறிவருவதைக் காட்டுகிறது. இந்தத் தொடரைப் பார்க்க:>https://tvfplay.com/category/1/series/3

பிட்சர்ஸ் (Pitchers)

‘தி வைரல் ஃபீவர்’நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ‘பிட்சர்ஸ்’, தொழில்முனைவோர் கனவில் இருக்கும் இளைஞர்களின் ‘ஃபேவரட் சாய்ஸ்’. செய்யும் வேலை பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதைக்கூட யோசிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய தொடர் இது. நவீன் (நவீன் கஸ்தூரியா), ஜித்து (ஜிதேந்திர குமார்), யோகி (அருணப் குமார்), மண்டல் (அபய் மஹாஜன்) என நான்கு பேரும் நண்பர்கள்.

நவீனின் அலுவலகத்தில் அவனுக்குக் கிடைக்க வேண்டிய புரொஜக்டை அவனுடைய ‘பாஸ்’ வேண்டுமென்றே வேறு ஒருவருக்குக் கொடுத்துவிடுகிறார். இந்த விஷயம் நவீனை மிகவும் பாதிக்கிறது. வாழ்க்கையில் அவன் என்ன செய்ய விரும்புகிறான் என்பதைப் பற்றி யோசிக்க வைக்கிறது. அவனுடைய நண்பர்களும் கிட்டத்தட்ட இதே நிலைமையில் இருக்கிறார்கள். அதனால், நான்கு நண்பர்களும் சேர்ந்து ஒரு ‘ஸ்டார்ட் அப்’ தொடங்குகிறார்கள்.

ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதில் இருக்கும் சவால்களைக் கச்சிதமான திரைக்கதையில் பதிவுசெய்கிறது இந்தத் தொடர். நடிகர்களின் தேர்ந்த நடிப்பும் இந்தத் தொடர் பெரிய ஹிட்டாக ஒரு முக்கியக் காரணம். இந்தத் தொடரின் பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.

காதல் கதையை மட்டுமே இளைஞர்கள் விரும்புவார்கள் என்ற பிம்பத்தை உடைத்த வலைத் தொடர் இது. தொடரைப் பார்க்க:>https://tvfplay.com/category/1/series/1

மேன்’ஸ் வேர்ல்டு (Man's world)

‘யஷ் ராஜ் ஃபிலிம்ஸின்’ இளைஞர் பிரிவான ‘ஒய் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பாக ‘மேன்’ஸ் வேர்ல்டு’ வலைத் தொடர் வெளியானது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தவதற்காக எடுக்கப்பட்ட இந்த வலைத் தொடருக்கும் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆண்கள், பெண்களை எப்படி நடத்துகிறார்களோ, அதேமாதிரி பெண்கள் அவர்களை நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை நையாண்டியாகப் பதிவுசெய்கிறது இந்தத் தொடர்.

கிரணுக்கு (கவுரவ் பாண்டே) இந்த உலகம் ஏன் பெண்களுக்கே ஆதரவாக இருக்கிறது என்ற ஆதங்கம். அந்த ஆதங்கத்தைக் கடவுளிடம் சொல்லி, உலகத்தைத் தலைகீழாக மாற்றச் சொல்கிறான். உலகம் தலைகீழாக மாறிவிடுகிறது. பெண்கள் செய்துவந்த எல்லாவற்றையும் ஆண்கள் செய்கிறார்கள். கிரணின் கதாபாத்திரத்தின் மூலமாகப் பெண்களின் பிரச்சினைகளை அலசுகிறது இந்த வலைத் தொடர்.

பாலிவுட் பிரபலங்களான பரிணிதி, கல்கி, ரிச்சா போன்றோரும் இந்தத் தொடரில் நடித்திருந்தார்கள். தொடரைப் பார்க்க:> https://www.youtube.com/watch?v=8NgvxN9RJSg

ஹேப்பி டு பி சிங்கிள் (Happy to be single)

சோனி மியூசிக்கின் தயாரிப்பில் வெளியான முதல் தமிழ் வலைத் தொடர் ‘ஹேப்பி டு பி சிங்கிள்’. வினய் ( கார்த்திக்), தான்யா (தீக்ஷிதா), உதய் (அபிநவ்) என மூன்று பேரின் நட்பையும் காதலையும் அலசுகிறது. நண்பர்களாக இருக்கும் வரை எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கும் தான்யாவும் உதயும் காதலர்களாக மாறியவுடன் ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். காதலைவிட நட்பே சிறந்தது என்பதை வலியுறுத்தும் தொடர் இது. சில குறைகள் இருந்தாலும் தமிழில் வெளியான முதல் வலைத் தொடர் என்பதால் தமிழ் நெட்டிசன்களிடம் இந்தத் தொடருக்கு வரவேற்பு இருந்தது. தொடரைப் பார்க்க:>https://www.youtube.com/watch?v=Z93U9kZeUO4

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x