Last Updated : 10 May, 2016 11:51 AM

 

Published : 10 May 2016 11:51 AM
Last Updated : 10 May 2016 11:51 AM

அடுத்தது குவாண்டம் ஸ்மார்ட்போன்தானா?

கடந்த சில ஆண்டுகளாக கணினிகள், கைபேசிகள் போன்றவற்றுக்கான திரைகளை உற்பத்தி செய்பவர்களின் மனதை ஆக்கிரமித்திருப்பவை குவாண்டம் புள்ளிகள். இந்த நுண்ணிய படிகங்களை வைத்து குறைந்த செலவில் மிகவும் துல்லியமான, பிரகாசமான உருவங்களை தொலைக்காட்சி, கைபேசித் திரைகளில் வழங்க முயற்சிக்கிறார்கள். குவாண்டம் புள்ளித் திரையுடன் ஐமேக்கை ஆப்பிள் வெளியிடப்போகிறது என்ற பேச்சு கடந்த ஆண்டு அடிபட்டது. ஆனால் நுண்படிகங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கக்கூடியவை எனச் சொல்லி வேறு தொழில்நுட்பத்தை ஆப்பிள் தேர்ந்தெடுத்துவிட்டது. சாம்சங் தனது ‘எஸ்.யூ.எச்.டி’ டிவியை சுற்றுச்சூழலுக்கு இயைந்த குவாண்டம் புள்ளித் தொழில்நுட்பத்தில் உருவாக்கி வழங்குகிறது. ஆனால், அது மலிவான விலையில் கிடைப்பதில்லை.

அடங்காத பாக்டீரியா

எளிய முறையிலும் சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுத்தாத வகையிலும் குவாண்டம் புள்ளிகளை உருவாக்கும் வழிமுறையை லீஹை பல்கலைக்கழக வேதிப்பொறியிய லாளர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டார்கள். பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு நொதிக்கு (enzyme) குறிப்பிட்ட உலோகத்தை ஊட்டுவதுதான் அந்த வழிமுறை. செலவு பிடிக்காத இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு லீஹை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கிய நுண்புள்ளிகள் நிரம்பிய வண்ணமயமான குப்பிகளைத்தான் இங்கு காண்கிறீர்கள். மின்சாரத்தையும் வண்ண ஒளியையும் உருவாக்கக்கூடிய இந்த நுண்படிகங்கள் எல்.இ.டி வெளிச்சத்தில் ஜொலிக்கின்றன. நுண்புள்ளிகளை உருவாக்குவதற்கான மாற்று வழிமுறைகளைத் தேடித் துழாவிக்கொண்டிருந்தார் இந்த ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியரான பிரையன் பெர்கர். எதிர்பாராத சில சம்பவங்களின் விளைவாக இந்த வழிமுறையை அவர் கண்டறிந்தார். பென்சில்வேனியாவின் மருத்துவமனையில் உள்ள ஊழியர் ஒருவர், உலோகப் பரப்புகள் மீதும் ஒரு வகை ‘சூரக்கிருமி’ வளர்வதைக் கண்டறிந்ததிலிருந்து தொடங்குகிறது இந்தக் கதை. (சூரக்கிருமி = Superbug ஆன்டிபயாடிக்குகளுக்கும் அடங்காத பாக்டீரியா).

இது குறித்து மருத்துவர்களும் செவிலியர்களும் கவலை கொண்டனர். ஸ்டெனோட்ரோஃபோமோனாஸ் மால்ட்டோஃபிலா (Stenotrophomonas maltophila) அல்லது சுருக்கமாக ஸ்டெனோ என்று அழைக்கப்படும் இந்த பாக்டீரியா, நோய்த்தடுப்பு சக்தி குறைந்த நோயாளிகளுக்கு மோசமான தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியவை. இந்த பாக்டீரியாவை அழிக்கக் கூடிய நோயுயிர்முறிகள் (Anti-biotic) இல்லை. ஆகவே, உலோகப் பரப்பில் அந்த பாக்டீரியா பல்கிப்பெருகுவதன் காரணத்தைக் கண்டறிய டாக்டர் பெர்கரை அணுகினார்கள்.

உலோகமே உணவு

தான் கண்டறிந்த விஷயம் டாக்டர் பெர்கரையே திகைக்க வைத்துவிட்டது. அந்த நுண்ணுயிரி, மின்னூட்டத்தை உட்கொள்வதுபோல் தோன்றியது; அநேகமாக உலோகப் பரப்புகளிலிருந்து அது இப்படி மின்னூட்டத்தை உட்கொண்டு, நுண்ணிய உலோகத் துகள்களின் கொத்துகளைத் துப்பிக்கொண்டிருக்கலாம் என்று தெரிந்தது. அந்த சூரக்கிருமிக்கு முட்டுக்கட்டை போடுவது எப்படி என்று டாக்டர் பெர்கருக்குத் தெரியவில்லை; என்றாலும் அவர் கண்டறிந்த விஷயம் அவரது கற்பனையில் பொறியைப் பறக்கச் செய்தது. உலோகத்தை மென்று துப்பும் இதே பாக்டீரியாவை நுண்படிகத்தை உருவாக்கும் இயந்திரம்போல் மறுவடிவமைப்பு செய்யலாமா? செய்யலாம் என்பதுதான் இதற்கான பதில்.

“ஒரு பொறியாளராக இது உண்மை யிலேயே பரவசமூட்டக்கூடியதுதான். ஆனால், ஒரு மருத்துவ அறிவியலாளராக இந்த விஷயம் எனக்கு மிகவும் திகிலூட்டக் கூடியது” என்றார் டாக்டர் பெர்கர்.

காட்மியம் என்ற உலோகத்தை அந்த ஸ்டெனோ பாக்டீரியாவுக்கு ஊட்டிய சில நிமிடங்களில் பூம்- அந்த பாக்டீரியா குவாண்டம் புள்ளிகளை உருவாக்கியதை டாக்டர் பெர்கரும் அவரது சகாக்களும் கண்டறிந்தார்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கடந்த ஆண்டு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டனர். புள்ளிகளை உருவாக்குவதற்காக அவர்கள் பயன்படுத்தியது தொற்றுக்களை உண்டாக்கக்கூடிய கிருமி என்பது இந்த வழிமுறையில் காணப்பட்ட பெரும் பிரச்சினை. ஆனால், அவர்களின் புதிய ஆய்வில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் குவாண்டம் புள்ளிகளை உருவாக்குவதற்கு அந்த பாக்டீரியா தேவையே இல்லை என்று டாக்டர் பெர்கரும் அவரது சகாக்கள் ஸ்டீவ் மேகின்டாஷ், கிறிஸ் கீலி ஆகியோரும் கண்டறிந்ததுதான். அந்த பாக்டீரியாவின் உள்ளே இருக்கும் ஒற்றை நொதியே இந்தப் புள்ளிகளை உருவாக்கப் போதுமானது.

குறைந்த செலவில் நுண்படிகங்கள்

எல்.இ.டி, திரைகளைப் போல குவாண்டம் புள்ளித் திரைகள் பரவலாக ஆவதற்கு இன்னும் வெகு காலம் பிடிக்கும். அவற்றை உருவாக்குவதென்பது தற்போது மிகவும் செலவு பிடிப்பதாகவும் சிக்கலாகவும் இருப்பதுதான் இதற்குக் காரணம். தற்போதுள்ள மற்ற வழிமுறைகளில் 300 டிகிரி செல்சியஸ் அளவிலான அதிகமான வெப்பநிலை தேவைப்படுகிறது; அவற்றில் பயன்படுத்தப்படும் எண்ணெய்த் தன்மைக் கொண்ட கரிமக் கரைப்பான்கள் (organic solvents) சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடியவை; கூடுதலாக இவை எல்லாவற்றுக்கும் நிறைய செலவாகும்.

அப்படியிருக்க, டாக்டர் பெர்கரும் அவரது சகாக்களும் அறை வெப்பநிலையில் தண்ணீருக்குள் ஒரே ஒரு நொதியை வைத்துக்கொண்டு பல வடிவ நுண்படிகங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இது மிகவும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதது, மேலும் முந்தைய வழிமுறைகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே செலவு பிடிப்பது என்று அவர்கள் சொல்கிறார்கள். படிகங்களின் அளவுதான் அவற்றின் ஒளியின் நிறத்தைத் தீர்மானிக்கிறது. படிகங்களின் அளவைத் தீர்மானிப்பதும் சாத்தியம்.

அப்படியென்றால் கூடிய விரைவில் விலை குறைவான குவாண்டம் புள்ளித் தொலைக்காட்சிகள் பரவலாகக் கிடைக்க ஆரம்பிக்குமா?

குறிப்பிட்ட இந்தப் புள்ளிகளைக் கொண்டு அது சாத்தியமாகாது என்கிறார் டோரன்டோ பல்கலைக்கழகத்தின் உயிரிமருத்துவப் பொறியாளர் வாரன் சான். ஆனாலும் மருத்துவத் துறை முதற்கொண்டு எத்தனையோ துறைகளில் குவாண்டம் புள்ளிகள் வேறு வகைகளில் பயன்படுகின்றன.

சரி, மருத்துவமனையில் என்ன நடந்தது? உலோகப் பரப்புகளில் குடியேறாமல் அந்த சூரக்கிருமியை எப்படித் தடுத்து நிறுத்துவதென்று டாக்டர் பெர்கர் இன்னும் தலையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

� நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x