Published : 29 Jun 2014 12:52 PM
Last Updated : 29 Jun 2014 12:52 PM

ஃப்ளாஷ் பேக் - இயக்குநர் பாண்டிராஜ் எழுதும் தொடர்: இது எங்க சாமி!

இன்றும் எங்களின் அனைத்து சுப நிகழ்ச்சி பத்திரிக்கைகளும், ‘சின்னம்மாள் தொட்டிச்சி துணை, ஸ்ரீமது அடைக்கலம் காத்த அம்பாள் துணை’ என்ற வார்த்தைகளை கொண்டுதான் தொடங்கியிருக்கும். சின்னம்மாள் தொட்டிச்சி எங்கள் குல தெய்வம், ஸ்ரீமது அடைக்கலம் காத்த அம்பாள் ஊர் காவல் தெய்வம்.

பெண் தெய்வங்களை போற்றி வணங்குவதை எங்களூரில் ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறோம். கம்மாய்க்கு அருகில், கோரைகளுக்கு நடுவில், ஆகாசமே கூரையாய் வேய்ந்திருக்க, வீற்றிக்கும் சக்தி வடிவம்தான் சின்னம்மாள் தொட்டிச்சி. அதற்கு கோயில் கட்ட முடிவெடுத்து குறி பார்த்த போதெல்லாம் வெட்ட வெளியில் மழையில் நனைந்தபடிதான் இருக்கவேண்டுமென உத்தரவு கொடுக்க மறுத்துவிட்டது. இந்த சின்னம்மாளுக்கு ஒரு காதல் வரலாறே இருக்கிறது.

மலையாள மண்ணில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே தங்கையாக பிறந்த பெண்தான் சின்னம்மாள். அவர்கள் வீட்டின் வேலையாள் ஒருவரை சின்னம்மாள் விரும்பவே, அண்ணன்களுக்கு தெரிந்தால் என்னாகுமென பயந்து காதலனும் காதலியுமாய், யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு கிளம்பிவிடுகிறார்கள். அவர்களின் பயணம் தெய்வாதீனமாக விராச்சிலைக்கு அருகிலுள்ள மருத்தவக்குடிபட்டியை நோக்கி அமைந்திருக்கிறது. வந்தால் தங்கையோடு வாருங்கள் இல்லையென்றால் ஒருவரும் ஊர் திரும்பாதீர்களென அம்மா உத்தரவிடவே, குதிரைகளை பூட்டிக்கொண்டு வெள்ளையன் எனும் நாயையும் கூட்டிக்கொண்டு ஏழு அண்ணன்களும் மருத்தவக்குடிபட்டியை நோக்கி வருகிறார்கள். அண்ணன்கள் பின்தொடர்வதை உணர்ந்த சின்னம்மாளும், அவரின் காதலனும் எங்கு மறைவது எனது தெரியாமல், கத்தாளை, கோரை, கிளுவை என முள்ளும் புதருமாய் மண்டி கிடந்த கம்மாய் பகுதிக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். ஆனால் வெள்ளையன் மோப்பம் பிடித்து கோரைக்குள் புகுந்து அவர்களை நெருங்கிவிடுகிறான். இனி அண்ணன்கள் கையிலிருந்து தப்ப முடியாதென உணர்ந்த சின்னம்மாளும் காதலனும், அண்ணன்கள் கையால் சாவதை விட நாமே ஒருவரை ஒருவர் கொன்றுவிடலாம் என முடிவெடுக்கிறார்கள். கத்தாளை, கிளுவை என கையில் கிடைத்த கூரான பொருளால் அடுத்தவரை குத்திக் கொன்று ரத்த வெள்ளத்தில் சரிகிறார்கள்.

வெள்ளையன் அந்த ரத்தத்தில் கிடந்து புரண்டு, குரைக்கத் தொடங்க வெளியில் நின்றிருந்த அண்ணன்கள் கோரைக்குள் நுழைந்து பார்த்தால் ஆசை தங்கை பிணமாய் கிடக்கிறாள். வந்தால் தங்கையோடு வாருங்கள், இல்லையென்றால் வராதீர்களென அம்மா சொன்னது நினைவுக்கு வர, ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டும் வெட்டிக்கொண்டும், அதே இடத்தில் பிணமாய் சரிகிறார்கள். இப்படி ஒரு காதல் காவிய வரலாற்றை கொண்ட சின்னம்மாள் தெய்வமாய் எழுந்தருளிய அந்த இடம்தான் இன்று எங்கள் குலதெய்வம் கோயிலாக இருக்கிறது.

அந்த இடத்தில் ஏழு அண்ணன்கள் மற்றும் வெள்ளையன் காவல் நிற்க சின்னம்மாள் தொட்டிச்சி சிலை இருந்துவந்தது. ஆனால் சில வருடங்கள் முன்பு ஊரில் நடந்த ஒரு தகராறில், அந்த சிலைகளை சிலர் அடித்து உடைத்துவிட இன்று அந்த சிலைகளை புனரமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. என்னதான் ஆயிரம் கோயில்களுக்கு போனாலும், நம் குலதெய்வ கோயிலுக்குள் அடியெடுத்து வைக்கும்போது உணரும் அதிர்வு, நம் உயிர் முடிச்சோடு இணைந்தது.

இப்படி என் குலதெய்வத்துக்கு இணையான பற்றுதல் கொண்டு நான் வணங்கும் மற்றொரு தெய்வம், மது அடைக்கலம் காத்த அம்பாள். இந்த அம்பாளின் பார்வை எப்போதும் ஊரின் மயானத்தை பார்த்தபடிதான் இருக்கும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசியில் பிரமாண்டமாகத் திருவிழா நடத்துவோம். ‘செவ்வாய் திருவிழா’ எனப்படும் இந்த விழாவில் கிட்டத்தட்ட மூவாயிரம் கிடாக்களை நேர்ந்துகொண்டு வெட்டி, ஊர் முழுக்க விருந்து வைப்போம். பல வருடங்களுக்கு பிறகு ஊர்ப்பக்கம் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக இவ்வருட திருவிழா தடைபட்டுவிட்டது.

யாருக்கு என்ன கூலி கொடுக்க வேண்டும் என்பதில் இந்த அம்பாளுக்கு நிகரே இல்லை. செவ்வாய் திருவிழா நடக்கும்போது, யார் இறந்தா லும் அவர்களுக்கு எந்த ஒரு இறுதி மரியாதையும் கிடைக்காது. யாரும் அந்த துக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார்கள். திருவிழா நேரத்தில் இறப்பவர்கள், கூடுமானவரையில் மற்றவர்களின் சாபங்களை வாங்கிக்கட்டி கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். இப்படி அநியாயமாய் ஆடியவர்களை எல்லாம், இந்த அம்பாள் அடக்கும் விதமே அழகு.

‘பசங்க’ தொடங்கி இப்போது ‘இது நம்ம ஆளு’ வரை என் அனைத்து படங்களுக்கும் முதல் பூஜையை இங்குதான் போடுவேன். ஒரு சந்தன காப்பு கொடுத்து அம்பாளை அழகாய் அலங்கரித்து பார்க்கும்போது உள்ளுக்குள் வரும் சிலிர்ப்பு, வார்த்தை வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. ‘பசங்க’ படத்தின் திரைக்கதையில், நான்கு பருவநிலைகளும் வருவது போல எழுதிவிட்டேன். ஆனால் மொத்தப்படமும் மூன்று மாதத்தில் எடுத்து முடிக்கவேண்டும். எப்படி சாத்தியம்? ஷூட்டிங் பண்ண ஊருக்குள் நுழையும்போதே, மழை கொட்டித் தீர்த்திருந்தது. ஆனால் எனக்கோ காட்சிகள்படி மழை வேண்டும். ஷூட்டிங் கிளம்பும் முன் மழை கேட்டு அம்பாளிடம் வேண்டுகிறேன். ஷூட்டிங் தொடங்கி பத்து நாட்கள் தொடர்ந்து மழை இருந்து கொண்டே இருந்தது என்றால் நம்ப முடியுமா?

‘வம்சம்’ படத்தில் எனது ஊரையும் செவ்வாய் திருவிழாவையும் பதிவு செய்துவிட்டு நான் சம்பாதித்தது பணத்தையல்ல, பகையைத்தான். வில்லனுக்கு எங்க அப்பா பேரை வச்சிட்டாங்க, அது இதுனு ஆளாளுக்கு ஒவ்வொரு பிரச்சினையை கிளப்ப, நான் நேராக ஊருக்குள் சென்று அடைக்கலம் காத்த அம்பாளிடம் முறையிடுகிறேன். “என்னோட நோக்கம் நம்ம ஊர, திருவிழாவை பதிவு பண்ணனும், மத்தபடி நான் தப்பு பண்ணிருந்தா என்னை தண்டிச்சுக்கோ தாயே.. இல்லை யாருக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ கொடு” என வந்துவிட்டேன். அவ்வளவுதான், அந்த பிரச்சினை பஞ்சாய் பறந்துவிட்டது.

மேலும் ‘மெரினா’ படம் வெளிவந்தபோது எழுந்த பிரச்சினையிலும், என் பக்கம் எந்த தவறும் இல்லையென கோர்ட் சொல்லும் முன்னரே, அந்த தீர்ப்பை கொடுத்தது அம்பாள்தான். சுமார் பத்து வருடம் முன்பு இந்த அம்பாள் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது நான் உதவி இயக்குநராய் இருந்தேன். கோயிலின் கும்பாபிஷேக வீடியோ கவரேஜை நான்தான் எடுத்தேன். அப்போது பலரும் நக்கலும் நையாண்டியுமாய், “என்னய்யா... சினிமா டைரக்டர் இங்க வீடியோ எடுத்துக்கிட்டு இருக்க?”னு கிண்டல் செய்தார்கள். சமீபத்தில் என்னுடைய கடைசி மச்சான் பேசும்போது சொன்னார், “அன்னைக்கு உங்களை வீடியோ எடுக்கிறவன்னு கிண்டல் செஞ்சாங்க.. பார்த்தீங்களா மாமா.. இன்னைக்கு அதே கோயில் திருவிழால உங்களோட படத்த போடுறாங்க... உங்க பட பாட்டுக்கு ஆடுறாங்க” என்றபோது, கண்கள் கலங்கிவிட்டது.

இன்றும் எந்த ஒரு சுப காரியம் என்றாலும் அம்பாளின் சன்னதியில் வைத்துதான் பேச்சைத் தொடங்குவோம். முதல் முடி இறக்குவது, காது குத்துவது, என்று எல்லாமே இந்த கோயிலில்தான். ‘பசங்க’ படத்திற்காக சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் தங்க யானை விருது வாங்கியதும், நேராய் அதை கொண்டு சென்று அம்பாளின் பாதத்தில் வைத்துதான் வணங்கினேன். நம்மைத் தாண்டி ஒரு சக்தி இருக்கிறது என்பதை உறுதியாய் நம்புபவன் நான். அந்த சக்தி வடிவங்கள்தான் இந்த சின்னம்மாள் தொட்டிச்சியும், மது அடைக்கலம் காத்த அம்பாளும். அடுத்த சந்ததிகளுக்கும் இவர்களை அறிமுகம் செய்து வைத்து, நாமெல்லாம் வெறும் விழுதுகளே, நம் ஆணி வேர்கள் இந்த தெய்வங்கள் தான் என்று அழுத்தமாய் சொல்லித்தருவோம்...!

தொடர்புக்கு: pandirajfb@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x