Published : 21 Apr 2022 04:14 PM
Last Updated : 21 Apr 2022 04:14 PM

சென்னை ஐஐடி-இல் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான உயர்கல்வி அறிமுக நிகழ்ச்சி

கிருஷ்ணா

சென்னை ஐஐடி-இல் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான உயர்கல்வி அறிமுக நிகழ்ச்சி

மத்திய அரசு நிதியில் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (Centrally Funded Research Institutes) நடப்பு கல்வி ஆண்டில் பி.டெக்., எம்.டெக் இறுதியாண்டு பயிலும் பட்டியல் சாதி (எஸ்.சி), பழங்குடி (எஸ்.டி) மாணவர்கள் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தில் (ஐஐடி சென்னை) ஆய்வு முதுநிலை அல்லது முனைவர் பட்ட வகுப்புகளில் இணைவதை அதிகரிப்பதற்கான எக்ஸ்ப்ளோர்@ஐஐடிஎம் (EXPLORE@IITM) நிகழ்வுக்கு ஐஐடி சென்னை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து பேசிய ஐஐடி சென்னை கல்விசார் ஆய்வுப் பிரிவின் தலைவர், பேராசிரியர் சாந்தி பவன், “சென்னை ஐஐடி வழங்கப்படும் அறிவியல் முதுநிலை (எம்.எஸ்), முனைவர் பட்ட வகுப்புகளில் சேரும் பட்டியல் சாதி, பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. அவர்களில் பலருக்கு ஐஐடி-இல் உள்ள உயர்கல்வி வாய்ப்புகளும் அவற்றில் இணைவதற்கான வழிமுறைகளும் தெரிந்திருப்பதில்லை. எடுத்துக்காட்டாக மத்திய அரசு நிதிபெறும் கல்வி நிறுவனங்களில் எம்.டெக் பட்டம்பெற்றவர்கள் ஐஐடி-யில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்வதற்கும் பி.டெக் பட்டதாரிகள் 8.0க்கு மேற்பட்ட சி.ஜி.பி.ஏ மதிப்பெண்ணைப் பெற்றுள்ள நிலையில் நேரடி முனைவர் பட்டப்படிப்பில் சேர்வதற்கும் ‘கேட்’ தகுதித் தேர்வு மதிப்பெண் தேவையில்லை என்பது பலருக்குத் தெரியவில்லை. எனவே பி.டெக் மற்றும் எம்.டெக் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஐஐடி சென்னை வளாகத்தில் உள்ள அறிவியல் ஆய்வு முதுநிலை (Master of Sceince by Research), பொறியியலில் முனைவர் பட்டம் உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்சிதான் எக்ஸ்ப்ளோர்@ஐஐடிஎம்” என்கிறார்.

எக்ஸ்ப்ளோர்@ஐஐடிஎம் மே 10 முதல் 12வரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஐஐடி சென்னை வளாகத்தில் வழங்கப்படும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விரிவாக அறிமுகப்படுத்தப்படும். ஆய்வகம், தங்குமிடம் உள்ளிட்ட மாணவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள், குறிப்பிட்ட பொறியியல் துறை ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்களின் பயணக் கட்டணம், தங்குவதற்கான செலவுகளை ஐஐடி-சென்னை ஏற்றுக்கொள்கிறது.

மத்திய அரசு நிதியைப் பெறும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் நடப்பு கல்வியாண்டில் பி.டெக். எம்.டெக் பட்டப்படிப்பை நிறைவுசெய்யவுள்ள பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் 7.5க்கு மேற்பட்ட சி.ஜி.பி.ஏ மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும். தற்போதைக்கு இயந்திர அறிவியல் பாடப்பிரிவுகளைச் (இயந்திர்ப பொறியியல், கட்டுமானப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவுகள்) சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

எக்ஸ்ப்ளோர்@ஐஐடிஎம் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் (https://forms.gle/8tMYXihP7AQULq119) இந்த இணைய இணைப்புக்குள் சென்று விண்ணப்பிக்கலாம். 2022 ஏப்ரல் 26 மாலை 5க்குள் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பித்திட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x