Published : 18 Apr 2016 11:42 AM
Last Updated : 18 Apr 2016 11:42 AM

வட்டியைக் குறைக்காத வங்கி

இந்த தலைப்பைப் பார்த்தவுடன் வட்டியை குறைக்காத ‘வங்கிகள்’ என்றுதானே தலைப்பு இருந்திருக்க வேண்டும் என்று அதெப்படி ‘வங்கி’ என்று வரலாம் என்ற கேள்வி நியாயமானதே. ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை தொடர்ந்து குறைத்து வரும் நிலையில் பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை பெரிதும் குறைக்கவில்லை. இந்த கட்டுரை அதைப்பற்றி அல்ல. சேமிப்பு கணக்கில் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு கோடக் மஹிந்திரா வங்கி வட்டியைக் குறைக்கவில்லை.

பெரும்பாலான வங்கிகளில் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் தொகைக்கு 4 சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்பட்டு வருகிறது. யெஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, ஆர்பிஎல் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகைக்கு 4 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்குகின்றன.

வட்டி விகிதம் குறைந்திருந் தாலும், கடனுக்கான வட்டியை நாங்கள் குறைத்திருந்தாலும் சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வழங்கப்படும் வட்டியைக் குறைக்கவில்லை என்று கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக் தெரிவித்தார்.

தற்போது ஒரு லட்ச ரூபாய்க்குள் இருக்கும் தொகைக்கு 5 சதவீத வட்டியும், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் தொகைக்கு 6 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. சேமிப்பு கணக்குக்கு தற்போதைய வட்டி விகிதமே தொடர்வதால் எங்களுடைய நிகர வட்டி வரம்பில் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் உதய் கோடக் தெரிவித்திருக்கிறார். சில சதவீதம் வட்டி வரம்பு குறைந்தாலும் எங்களுடைய காசா விகிதத்தை (current account and savings account - CASA) உயர்த்த வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்று கூறினார்.

டிசம்பர் 30 வரையிலான கால கட்டத்தில் நிகர வட்டி வரம்பு 4.3 சதவீதமாக இருக்கும். சேமிப்பு கணக்குகளுக்கு பழைய வட்டி விகிதம் தொடர்ந்தால் கூட நிகர வட்டி வரம்பு 4 சதவீதத்துக்கு கீழ் செல்லாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

காசா விகிதம் என்பது நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை. இந்த விகிதம் உயரும் பட்சத்தில் வங்கியின் நிகர வட்டி வரம்பு உயரும். அதாவது சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கு குறைந்த வட்டி கொடுத்து, அதிக வட்டியை கடன் கொடுத்து வசூலிக்க முடியும் என்பதால் காசா விகிதத்தை அதிகளவில் வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வங்கிகள் எடுக்கும்.

தற்போது கோடக் மஹிந்திரா வங்கியின் காசா விகிதம் 35 சதவீதமாக இருக்கிறது. இதை அடுத்த 12-18 மாதங்களில் 40 சதவீதமாக உயர்த்த வங்கி திட்டமிட்டிருக்கிறது. ஏற்கெனவே நிகர வட்டி வரம்பு நன்றாக இருப்பதால் இதே வட்டி வழங்க முடியும் என்ற துணிவான முயற்சியை வங்கி எடுக்கிறது. மற்ற தனியார் வங்கிகளும் காசா விகிதத்தை உயர்த்தவே சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி வழங்குகின்றன.

சேமிப்பு கணக்குக்கு (ஒரு லட்ச ரூபாய்க்கு மேல்) 6 சதவீதம் வட்டி விகிதம் இருந்தாலும் ஒரு வருட டெபாசிட்டுக்கு 7.75 சதவீத வட்டி வழங்குகிறது கோடக் மஹிந்திரா வங்கி.

லாபம் குறையும் என்ற போதிலும் துணிந்து இத்தகைய முடிவை எடுத்துள்ள கோடக் மஹிந்திராவின் நடவடிக்கை சேமிப்புக்கு ஊக்குவிப் பாக நிச்சயம் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x