Published : 08 Apr 2022 10:45 AM
Last Updated : 08 Apr 2022 10:45 AM

திரைப் பார்வை: காயல் | அழுக்குகளைக் கரைக்க ஒரு பயணம்!

சுயாதீனத் திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் தமயந்தி, ‘தடயம்’ என்கிற படத்தைத் தொடர்ந்து, எழுதி, இயக்கியிருக்கும் புதிய படம் ‘காயல்’.

புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் தேன்மொழியும் (காயத்ரி சங்கர்), மீனவர்களின் வாழ்க்கை குறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆதியும் (லிங்கேஷ்) காதலிக்கிறார்கள். மகள் மீது மிகுந்த அன்பும் முற்போக்கு சிந்தனையும் கொண்டவர் என்பதால் மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார் தேன்மொழியின் தந்தையான (ஐசக் வர்கீஸ்). ஆனால் தாய் (அனு மோள்), ஆதியின் சாதியைக் காரணம் காட்டி மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அன்னையின் பிடிவாதத்தை மீற முடியாமல் உறவுக்கார இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் தேன்மொழி திடீரென்று தற்கொலை செய்துகொள்கிறார். அவரது பெற்றோரிடையே ஆழமான விரிசலை உருவாக்குகிறது அவருடைய மரணம். பெற்றோரின் மணமுறிவைத் தடுக்க, அவர்களுடைய மகன் தர் (ஆர்ஜே பரத்), ‘தேன்மொழியின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து வருவோம்’ என்று கூறி அவர்களைக் கடலோர நகரங்கள் வழியே ஒரு நீண்ட பயணம் அழைத்துச் செல்கிறார். அந்தப் பயணத்தில் இணையர் இருவரும் என்னவாகிறார்கள் என்று படம் செல்கிறது.

மரபான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட முடியாத அம்மாவுக்கும் நவீன சிந்தனைகள் கொண்ட மகளுக்கும் இடையில் ஏற்படும் முரண்களை அடிநாதமாகக் கொண்ட கதை. பெற்றோர் அல்லது குடும்பத்தின் வற்புறுத்தல் காரணமாக காதலைக் கைவிட்டு பெற்றோர் தேர்ந்தெடுத்தவரை கணவராக ஏற்கும் பெண்களின் நிலை என்ன ஆகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

பெண்களிடமும் பிறப்பின் அடிப்படையிலான ஆதிக்க உணர்வு மேலோங்கியிருப்பதை அனு மோள் கதாபாத்திரம் அழுத்தமாகக் காட்டியிருக்கிறது. தேன்மொழியின் தாய் போன்ற பெண்களின் மனநிலையை வடிவமைப்பதில் உறவினர்கள், சமூகம் ஆகியோர் குறித்த அச்சம் உள்ளிட்ட புறக் காரணிகள் செலுத்தும் தாக்கத்தைப் படம் அலசியுள்ளது.

தேன்மொழியை மறக்க முடியாத தவிப்புடன், தன்னுடைய அன்றாடத்தில் கவனம் செலுத்தும் ஆதியின் பணி, வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றின் சித்தரிப்பில், புத்தர் சிலை, அம்பேத்கர் படம் என வாழ்வியல் கூறுகள் அழகாக இணைக்கப்பட்டுள்ளன. காதல் கைகூடாத நிலையிலும் துளியும் வெறுப்புக்கு ஆட்படாமல் தன்னை வெறுப்பவர் மீதும் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் அக்கதாபாத்திரம் பார்வையாளர் மனங்களில் உயர்ந்து நிற்கிறது.

ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினை, தனிநபர்களின் உறவுகளுக்குள் ஏற்படுத்தும் சிக்கல்களை பேசும் இப்படத்தை, புதுச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் கடல் சார்ந்த ஊர்களின் இயற்கை அழகுடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியம். ஜஸ்டின் கெனன்யாவின் இசையில் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளன.

ஆதிக்க மனோபாவமும் மகளின் இழப்புக்குப் பிறகான நாட்களில் மனநிலையில் பெறும் மாற்றங்களோடும் கூடிய தனது கதாபாத்திரத்தை தேர்ச்சியுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் அனு மோள். ஐசக் வர்கீஸ், காயத்ரி சங்கர், லிங்கேஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் குறையின்றி நடித்திருக்கிறார்கள். வசனங்கள் இயல்பான உரையாடலாகப் பதிவாகியுள்ளன.

இரண்டு மணி நேரப் படத்தின் திரைக்கதையைத் தொய்வின்றி நகர்த்துவதற்கு அழுத்தமான காட்சிகளும் திருப்பங்களும் போதுமான அளவுக்கு இல்லாததால் படம் தேவைக்கதிகமாக நீளும் உணர்வைத் தருகிறது. ஆதியை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் சக ஊழியராக ஸ்வாகதாவை வைத்து உருவாக்கப்பட்டுள்ள சில காட்சிகள் செயற்கையாக உள்ளன.

இந்தக் குறைகளைக் கடந்து பார்த்தால், ஒரு சமூகப் பிரச்சினை தனிநபர்கள், அவர்களுக்கிடையிலான உறவுகள் மீது செலுத்தும் தாக்கம் ஆகியவற்றை முன்வைத்து நிதானமான அணுகுமுறையுடன் மாறுபட்ட திரை அனுபவத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள் தமயந்தியும் அவருடைய படக்குழுவினரும்.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x