Published : 27 Mar 2022 11:28 AM
Last Updated : 27 Mar 2022 11:28 AM

பெண் எழுத்து: லக்ஷ்மி | மனதில் ஏந்திய மலர்கள்

மதுமிதா

எழுத்தாளர் லக்ஷ்மியின் பிறந்தநாள் நூற் றாண்டு நிறைவடைந்த நிலையில் அவரது நாவல் களை நினைத்துப் பார்ப்பதும் மீள்வாசிப்பில் ஈடுபடுவதும் காலச்சக்கரத்துக்குள் நுழைந்து திரும்புவதைப் போல இருக்கிறது.

லக்ஷ்மி எழுதிய, ‘கையில் அள்ளிய மலர்கள்’ வாசிக்கையில் உடலும் மனமும் சிலிர்க்கும். மருத்துவராக தான் பிரசவம் பார்த்து கையில் ஏந்திய குழந்தைகளைப் பற்றி இதில் அவர் விரிவாக எழுதியதை வாசிக்கையில் கண்கள் ஊற்றெடுத்துப்பொழியும். இவர் பிரசவம் பார்த்த தாயும் குழந்தைகளுமாக இவரைச் சந்திக்க வரும் நிகழ்வுகளில் மனம் நெகிழ்ந்துபோகும். எப்போதேனும் இவரைச் சந்திக்க நேர்ந்தால் அந்தக் கரங்களைப் பற்றிக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொள்ளவே தோன்றும். மருத்துவராகவும் இருந்து, தான் கையில் ஏந்திய குழந்தைகளைப் பற்றி எழுத்தாளராகவும் தமிழில் முதலில் எழுதியவர் இவரே.

நான் பதினோராம் வகுப்புப் படித்தபோது மருத்துவராகும் விருப்பத்தில் அறிவியல் பிரிவு எடுத்திருந்தாலும், அது நிறைவேறாத கனவாக மாறியது. அதன் பிறகு, மருத்துவர்களைக் கண்டால் ஒருவித அன்பும், மரியாதையும் ஊற்றாகப் பெருகி எழும். அதுவே எழுத்தாளர் லக்ஷ்மியிடம் ஒரு அணுக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். டாக்டர் திரிபுரசுந்தரி, லக்ஷ்மி என்னும் பெயரில் எழுத்தாளராக வெளிப்பட்டார். திரிபுரத்தை எரித்தவரின் மனைவி திரிபுரசுந்தரி. சிவனின் மனைவியாகிய சக்தியே திரிபுரசுந்தரி. இவருக்கு என்ன அழகான பெயரை வைத்திருக்கிறார்கள் என்று ரசித்ததுண்டு.

உண்மையைச் சொல்லும் துணிவு

சிறு வயதில் பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த அனுபவத்தில் எழுத்தின் மீதான ரசனை வளர்ந்து எழுத்து இவரை ஈர்த்ததாம். பாட்டியால் வளர்க்கப்பட்டவர்கள் என்றும் சோடைபோனதில்லை. தமிழ்நாட்டில் அரசு மருத்துவராகவும், தென்னாப்பிரிக்காவில் அரசு மருத்துவராகவும் இருந்ததால் மக்களை அதிகமாகச் சந்திக்க நேர்ந்த இவரின் அனுபவங்கள், சந்தித்த பலரின் அனுபவக் கதைகள் புனைவாக இவரது படைப்புகளில் விரவி இருக்கும்.

அவர் கொஞ்சம் மாநிறமாக இருந்ததால், சிறுவயதில் சற்றே தாழ்வு மனப்பான்மையுடன் இருந்ததாகவும், பிறகு அதிலிருந்து தானே முயன்று வெளிவந்ததாகவும் அவரே எழுதியதை வாசித்தபோது வியப்பாக இருந்தது. ஒன்று, எழுத்தாளர் இப்படி வெளிப்படையாகத் தன் மன உணர்வுகளை எழுதலாம் போலும் என்று தோன்றியது. இரண்டாவது, இப்படி எழுதும்போது வாசிப்பவரின் மனத்தில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையைத் துடைத்தெறிய முடியும் என்பது. எந்த விஷயத்திலும் பெண்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது என்பதைத் தன் எழுத்தின் மூலம் வாசகர்களின் மனத்தில் பதிய வைத்தவர்.

அவருடைய முதல் சிறுகதை, ‘தகுந்த தண்டனையா?’ ஆனந்த விகடனில் 1940-ல்வெளிவந்தது. 1962-ல் வெளிவந்த, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்துக்கு இந்தக் கதை விதையாக இருந்திருக்கலாம் என்று தோன்றும் அளவில் அதே கருவைக் கொண்ட கதை. சற்றே மாறுபட்ட கதாபாத்திரங்கள். இந்தக் கதையில் பெண் மருத்துவராக இருப்பார்; கைம்பெண்ணாக இருப்பார்; காதலித்தவரின் மனைவியைக் காப்பாற்றுவார். திரைப்படத்தில் ஆண் மருத்துவர்; காதலித்தவரின் கணவனைக் காப்பாற்றுவார். ஆனால், கடைசியில் இறந்துவிடுவார்.

காலத்துக்கேற்ற கரிசனம்

தானே எழுதி அந்த வருமானத்தில் மருத்துவம் படித்து, அந்தக் காலத்தின் சிறந்த மருத்துவராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் லக்ஷ்மி. பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இவரை வாசித்தே அடுத்த வாசிப்புக்கு முன்னேறியவர்கள். லட்சக்கணக்கான வாசகிகளைப் பெற்றவர் இவர். குடும்பக் கதைகளையும், பெண் முன்னேற்றத்துக்கான கதைகளையும் எழுதியவர். சில கதைகளில் பிற்போக்கான விஷயங்களாக இருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், அவை பிரசாரக் கதைகளாக இல்லை. அன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கதைகளாகவே இருந்தன.

இவரின் நாவல்களான ‘காஞ்சனையின் கனவு’, ‘பெண் மனம்’ ஆகியவை முறையே ’காஞ்சனா’ , ‘இருவர் உள்ளம்’ ஆகிய திரைப்படங்களாக வெளிவந்தன. ‘இருவர் உள்ளம்’ படம் வெளிவந்து பத்து வருடங்களுக்குப் பிறகு படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்து, பிறகு படம் பார்த்து அதன் பிறகே பெண் மனம் நாவல் வாசிக்க அமைந்தது. நாவலுக்கும் திரைப்படத்துக்குமான ஒற்றுமை வேற்றுமை நுட்பங்களை அறியும் நுண்ணுணர்வு அந்தச் சிறுவயதில் இல்லை.

ஆயிரக்கணக்கான கதைகள், 150-க்கும் மேலான நாவல்கள், கட்டுரை நூல்கள், மருத்துவ நூல்கள் எனத் தம் இறுதிக்காலம் வரையில் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தவர் லக்ஷ்மி. தமிழக அரசின் விருதையும், ‘ஒரு காவிரியைப் போல’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதையும் பெற்றவர்.

பல்வேறு மனிதர்களின் கதை

இவருடைய முதல் நாவல் ‘பவானி’. இந்த நாவலில் பவானி கதாபாத்திரம் முதன்மையாக இருந்தாலும், சிற்றன்னை, இரண்டாம் திருமணம், குழந்தைகள் மனநிலை, தன்னுடைமை (Possessive) போன்ற விஷயங்களை விரிவாக எழுதி இருப்பார். இவரது கதைகளில் நட்பு, காதல், சந்தேகம், பிரிவு, இணைவு என்று அனைத்து உணர்வுகளுடன் வெளிப்படும். பல சிறுகதைகளிலும், நாவல்களிலும் வெளிவந்தாலும், சில வரிகள், உணர்வுகள் தவிர கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது போன்ற தோற்றம் இருந்தாலும், அடுத்து என்ன என்று வாசிக்கும்படி திருப்பங்களுடன் இருக்கும். பெண்களின் பிரச்சினைகள், அதை எவ்விதமாகத் தீர்க்கலாம் என்னும் ஆலோசனைகள் இருக்கும். பெண் சிறப்பாக நிர்வாகம் செய்வது, பெண் பொறுப்பேற்கும் பணிகளை நிறைவாகச் செய்வது, குழந்தை வளர்ப்பு, உறவுச் சிக்கல்கள், ஏழை-பணக்காரர் இவர்களுக்கான வேறுபாடுகள், அவற்றைச் சில நிகழ்வுகளால் சரி செய்வது, மருத்துவர்கள், திருடர்கள், குழந்தைகளைக் கடத்துபவர்கள், போஸ்ட்மாஸ்டர்கள் எனப் பலவகையான கதாபாத்திரங்கள் மூலமாகப் பலவித உணர்வெழுச்சி நிகழும் அளவில் இவரின் படைப்புகள் இருக்கும்.

மதுமிதா

நாவலைவிடச் சிறுகதைகள் இன்னும் கச்சிதமாக உணர்வுகளை வெளிப்படுத்தும். ‘காதல் காதல் காதல்’ சிறுகதை நமக்களிக்கும் மனவெழுச்சியை அந்தக் காலத்திலேயே எழுதி இருப்பது போற்றுதலுக்குரியது. மறைந்த கணவனின் நினைவும், வாழ்ந்த வீட்டை வறுமையினால் விற்க நேர்ந்த அவலமும், தள்ளாத வயதில் நினைவில் வாழும் கணவனின் மீதான காதலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும். ‘காஷ்மீர் கத்தி’ ஒரு கிரைம் திரில்லர் போலவே ஆரம்பிக்கும். மீன் கருவாட்டுச் சந்தை காட்சிப்படுத்தப்படும்.

லக்ஷ்மியின் அனைத்துப் படைப்பு களுமே அவ்வளவு துயரங்களுக்குப் பிறகும் முடிவில் ஒரு நன்மையைச் சொல்பவையாக இருக்கும். ஆறுகள், காவிரி நதி, சிந்து நதி போன்ற பல நீர்நிலைகள் ஆங்காங்கே இயற்கை யுடன் இயைந்து வாழ்ந்த அந்தக் காலத்தின் சூழலைக் காட்சிப்படுத்தும். மொத்தத்தில் இவரின் நாவல் அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் குடும்பம், உறவுகள், வாழ்க்கை நிலைகளைப் படம்பிடித்துக்காட்டும் ஆவணமாகவும் உள்ளன. மனத்தில் ஏந்திய அந்தப் படைப்பு மலர்களின் வாசம் என்றும் நம் நினைவைவிட்டு அகலாது.

கட்டுரையாளர் எழுத்தாளர், கவிஞர்.

தொடர்புக்கு: madhumithaa2016@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x