Last Updated : 22 Mar, 2022 07:00 AM

 

Published : 22 Mar 2022 07:00 AM
Last Updated : 22 Mar 2022 07:00 AM

செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னை!

சென்னை ‘செஸ் ஒலிம்பியாட்’ என்பது சாதாரணமாகக் கடந்து போகும் ஒரு நிகழ்வல்ல. இது ஒரு சர்வதேசத் திருவிழா. நூறாண்டு வரலாறு கொண்ட ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி இந்தியாவில் நடப்பது இதுதான் முதல் முறை. இந்தியாவில் செஸ் மாஸ்டர்கள் அதிக அளவில் உருவாகும் தமிழகத்தில் இப்போட்டி நடப்பது தமிழர்களுக்குப் பெருமைமிகு தருணம்.

செஸ் விளையாட்டின் தாயகம் இந்தியாதான். இந்த விளையாட்டு சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது. முந்தைய காலத்தில் பின்பற்றப்பட்ட போர் முறைகளுக்கு இணையானதுதான் செஸ் விளையாட்டின் காய் நகர்த்தல்கள். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செஸ் விளையாட்டு, 12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் மேற்கத்திய நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது. 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு வேகம் பிடித்த செஸ் விளையாட்டிலிருந்து பிரபலமான வீரர்கள் ஐரோப்பிய நாடுகளில் உருவாயினர். நவீன செஸ் விளையாட்டுப் போட்டிகள் 1800-களில் தொடங்கப்பட்டன. இதன் பின்னர் உலகில் செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் வரிசையாக உருவாகத் தொடங்கினர்.

செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் என்பது சர்வதேச செஸ் சம்மேளனம் (FIDE), வீரர்களுக்கு வழங்கும் பட்டமாகும். செஸ் உலக சாம்பியன்ஷிப்பைத் தவிர்த்து, கிராண்ட்மாஸ்டர் என்பது ஒரு செஸ் வீரர் அடையக்கூடிய மிக உயர்ந்த பட்டமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை செஸ் பல நூற்றாண்டுகளாக விளையாடப்பட்டாலும், இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டராக 1987ஆம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் உருவான பிறகே, அந்த விளையாட்டு பிரபலமாகத் தொடங்கியது. இன்று இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னை என்று சொல்லும் அளவுக்கு இந்த நகரம் அதிக அளவில் கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில் 73 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள சூழலில், தமிழகத்திலிருந்து மட்டும் 26 கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியிருக்கிறார்கள். இதில் பெரும்பாலோர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச அளவில் மிகச் சிறந்த செஸ் வீரராக உருவான பிறகே, சென்னை நகரமும் பேசப்படத் தொடங்கியது. இந்தியாவில் மிகப் பெரிய செஸ் தொடர்கள் நடைபெறவே இல்லை என்கிற ஏக்கம் பல காலமாகவே இருந்தது. 2000ஆம் ஆண்டில்தான் அந்த ஏக்கம் தீர்ந்தது. ஈரானின் டெஹ்ரானிலும் இந்தியாவின் டெல்லியிலும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான இத்தொடர், இந்தியாவில் முதன் முறையாக நடைபெற்றது அப்போதுதான். அன்று இத்தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிறகு 2013ஆம் ஆண்டில் இந்தியாவில் இரண்டாவது முறையாக சென்னை நகரம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. அப்போது நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தைத் தோற்கடித்தார். இப்போது சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள 44-வது ‘செஸ் ஒலிம்பியாட்’டும் நீண்ட வரலாறு கொண்டதுதான். ஒலிம்பியாட் என்கிற பெயர் இருந்தாலும், ஒலிம்பிக் போட்டிகளோடு எந்தத் தொடர்பும் கிடையாது. 1924ஆம் ஆண்டு முதல் அரங்கேறி வரும் ‘செஸ் ஒலிம்பியாட்’ இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச செஸ் தொடராகும். சோவியத் யூனியனும், அது உடைந்த பிறகு ரஷ்யாவும் அதிக முறை இந்தத் தொடரை நடத்தியுள்ளன. இந்தியாவில் இதற்கு முன்பு இந்தத் தொடர் நடைபெற்றதில்லை.

கரோனா தொற்று காரணமாக 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் ஆன்லைன் வழியாக இத்தொடர்கள் நடைபெற்றன. இரு ஆண்டுகள் கழித்து நேரடியாக நடைபெறும் இத்தொடர், முதன் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னைக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இத்தொடரில் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா -உக்ரைன் போராலும் அதன் விளைவாலும் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தற்போதைய சூழலில் சென்னையில் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நடைபெறுவதே பெருமையான நிகழ்வு. அதை மட்டும் இப்போதைக்குக் கொண்டாடுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x