Published : 22 Mar 2022 07:30 AM
Last Updated : 22 Mar 2022 07:30 AM

ஆற்றலைச் சேமியுங்கள்!

நஸ்ரின்

வேலை செய்யும் திறனே ஆற்றல். அது வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தைப் போன்றது. நாம் பயன்படுத்தும்போது அதன் அளவு குறையும். சில நேரங்களில் நாம் சோர்வாக இருப்பதற்கும், சோர்வாக உணர்வதற்குமான காரணம் இதுவே. ஆற்றலை முறையாகப் பயன்படுத்தினால், நம்முடைய செயல்திறன் அதிகரிக்கும்.

இந்த ஆற்றலை நம்முடைய சில அன்றாடப் பழக்கவழக்கங்கள் தேவையில்லாமல் விரயமாக்குகின்றன. அந்தப் பழக்கவழக்கங்கள் நம்முடைய ஆற்றலைச் சுரண்டி, செயல்திறனைக் குறைத்து, மகிழ்ச்சியற்ற நிலைக்கு நம்மைத் தள்ளுகின்றன. அந்தப் பழக்கவழக்கங்கள் எவை என்பதை அறிவது, ஆற்றல் விரயத்தைத் தவிர்ப்பதோடு, நம்மை மேம்படுத்தவும் உதவும்.

பிறரைத் திருப்திப்படுத்துதல்

உங்கள் பெற்றோரோ, ஆசிரியரோ யாராக இருந்தாலும், அவர்களிடம் உங்களை நிரூபிக்கத் தொடர்ந்து முயன்றால், அது உங்கள் ஆற்றலை முற்றிலும் களவாடி, சோர்வடையச் செய்துவிடும். அவர்களிடம் நல்ல பெயர் எடுத்து, அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கும்போது, நீங்கள் உங்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து நிற்பீர்கள்.

என்ன செய்ய வேண்டும்?

முதலில் உங்கள் வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள்; தெளிவான எல்லைகளை வரையறுத்துக்கொள்ளுங்கள்; பின்னர் அவற்றைப்பிறரிடம் முறையாகவும் உறுதியாகவும் தெரிவித்துவிடுங்கள். உறவுகள் எப்போதும் ‘கொடுக்கல் வாங்கல்’ அடிப்படையிலானவை என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்.

சுயவிமர்சனம் வேண்டாம்

அதிகப்படியான சுயவிமர்சனமும் சுயமதிப்பீடும் உங்களுக்குச் சோர்வை ஏற்படுத்தும். கடுமையான சுயமதிப்பீடு உங்கள் பலவீனத்தையே மிகைப்படுத்தும். உங்களைப் பற்றி நேர்மறையான எதையும் நீங்கள் உணரவில்லை என்றால், உங்களால் எப்படி உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்?

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மீது பரிவு காட்டிப் பழகுங்கள். உங்கள் வெற்றிகளைக் கொண்டாடுங்கள்; உங்கள் முயற்சிகளைப் பாராட்டுங்கள். முக்கியமாக, உங்கள் தோல்விகளில், சறுக்கல்களில் கனிவாக இருங்கள்.

கோபமும் வெறுப்பும்

நஞ்சு என்பது நீங்கள் உண்பதாகவோ அருந்துவதாகவோ மட்டும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது உங்களுடைய உணர்ச்சியாகவும்கூட இருக்கலாம். உங்களிடம் இருக்கும் நச்சு உணர்ச்சிகளில் கோபமும் மனக்கசப்புமே பிரதானமானமவை. பெரும்பாலும், இந்த உணர்வுகள் கடந்த கால நினைவுகளிலிருந்தே எழுகின்றன. நீங்கள் முன்னேற விரும்பினால், கடந்த காலத்தை விட்டு வெளிவரும் தைரியம் உங்களுக்கு இருக்க வேண்டும்..

என்ன செய்ய வேண்டும்?

நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள். கடந்த காலத்தின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை விட்டு உங்களால் வெளிவர முடியவில்லை என்றால், அதற்கென சிறிது நேரம் ஒதுக்கிச் சிந்தியுங்கள். பின்னர் உங்களுக்குள் எழும் எண்ணங்கள், கவலைகள் அனைத்தையும் எழுதி வைத்துப் பழகுங்கள்.

கவலையும் அபரிமித சிந்தனையும்

எதிர்காலம் குறித்த சிந்தனை உங்களை எப்போதும் கவலைக்கு உள்ளாக்கும். வருங்கால நிகழ்வுகளை ஊகித்து, அதைக் கட்டுப்படுத்த முயல்வது பயனற்ற முயற்சி. அதனால், உங்களுக்குத் துக்கம், அமைதியின்மை, பதற்றம், மனச்சோர்வு போன்ற உணர்வுகள் மட்டுமே மிஞ்சும். அதிகமாகச் சிந்திப்பதும் அப்படிப்பட்டதான்.

என்ன செய்ய வேண்டும்?

உங்களால் கட்டுப்படுத்த முடியாததைத் தவிர்த்து, கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எப்படி வாழ விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டறிய உதவும் ஆற்றலை அது உங்களுக்கு அளிக்கும்.

சமூக ஊடகங்களின் பயன்பாடு

சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கும் உங்களுடைய மனநிலை பாதிப்புக்கும் நேரடித் தொடர்பு உண்டு. சமூக ஊடகங்களில் நீங்கள் கடக்கும் செய்தி உங்களுக்கு உத்வேகம் அளிக்கலாம் அல்லது உங்களை முட்டாள்தனமாக உணர வைக்கலாம். வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கச் சமூக ஊடகங்கள் ஒருபோதும் உதவாது.

என்ன செய்ய வேண்டும்?

உத்வேகம் பெறவும், மக்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கிக்கொள்ளவும் மட்டும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள். ஒழுங்காகப் பயன்படுத்தினால், அது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தூக்கம் முக்கியம்

நல்ல தூக்கமே உங்கள் மனத்துக்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும். தூக்கத்தின் போதே, உங்கள் உடல் தன்னைத்தானே பராமரித்துக்கொள்கிறது; மனதும் தன் சமநிலையை மீட்டெடுக்கிறது. இதற்கு நீங்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கமின்மை உங்கள் மன, உடல் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

தினமும் ஒரே நேரத்தில் படுத்து, ஒரே நேரத்தில் எழப் பழகுங்கள். படுக்கைக்குச் சில மணி நேரத்துக்கு முன் காபி குடிக்காதீர்கள், மதுவைத் தவிருங்கள், கொழுப்பு நிறைந்த உணவுவகைகளைச் சாப்பிடாதீர்கள். விருப்பமான புத்தகத்தை வாசியுங்கள், மனத்தை அமைதிப் படுத்தி ஊக்கமளிக்கும் ஆடியோ புக்/பாட்காஸ்டைக் கேளுங்கள்.

மகிழ்ச்சியைப் பெருக்கும் வழி

பொதுவாக, காலை வேளையில் நம்முடைய ஆற்றல் அளவு அதிகமாக இருக்கும். அப்போது நம்மால் விரைவாகவும் தெளிவாகவும் முடிவுகளை எடுக்க முடியும்; சிறப்பாகச் செயல்படவும் முடியும். நேரம் செல்ல, செல்ல நம்முடைய ஆற்றல் குறையத் தொடங்கும். இதனால், உடல் சோர்வடையும்; உணர்வுரீதியாகவும் நாம் களைப்படைவோம். முடிவு எடுப்பதில் தடுமாற்றமும், செயல்புரிவதில் சுணக்கமும் ஏற்படும். எனவே, ஆற்றலை விரயமாகும் பழக்கவழக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது நம்முடைய உற்பத்தித்திறனை அதிகரிக்கும்; மகிழ்ச்சியைப் பெருக்கும்; வெற்றியை உறுதிசெய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x