Published : 09 Mar 2022 06:29 AM
Last Updated : 09 Mar 2022 06:29 AM

கதை: பப்புவும் பிறந்தநாள் பரிசும்! :

அன்று தான் பிறந்திருந்தது யானைக் குட்டி. ‘பப்பு’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது தாய் யானை. பப்பு பிறந்த சில நிமிடங்களில் தட்டுத் தடுமாறி எழுந்து தாய் மடியைத் தஞ்சமடைந்தது.

தாய்ப்பால் அருந்திய உற்சாகத்தில், கூடி நின்ற மற்ற யானைகளின் கால்களுக்கிடையில் புகுந்து சுற்றிச் சுற்றி விளையாடியது. ‘பப்பு’ பிறந்த விஷயம் தெரிந்து பல விலங்குகள் வாழ்த்துத் தெரிவிக்க வந்தன.

தன்னைப் போன்று முக அமைப்பு இல்லாத விலங்குகளைக் கண்டு, பயந்த பப்பு, தாயுடன் ஒட்டிக்கொண்டது.

“அம்மா, யார் இவங்க? எதுக்காக இங்கே வந்திருக்கிறார்கள்?” என்று அச்சத்துடன் கேள்வி எழுப்பியது.

சுற்றிலும் நின்ற மான், முயல், குரங்கு, நரி, சிங்கம், காகம், குருவிகள் அனைத்தும் இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்துவிட்டன.

“நாங்க எல்லாம் உன் உறவினர்கள். பப்புக் குட்டியை வாழ்த்த வந்திருக்கிறோம்” என்ற புள்ளிமான் தனது குட்டியுடன் புல் கட்டு ஒன்றைப் பரிசாகக் கொடுத்தது.

குரங்கு தன் பங்கிற்கு வாழைத்தார் ஒன்றை அளித்தது. கரடி தேனடையும், சிங்கம் கரும்புகளையும், முயல் கேரட்டுகளையும் கொடுத்தன.

“பப்பு, உனக்கு என்ன விருப்பமோ எடுத்துச் சாப்பிடு” என்றது தாய் யானை.

“எனக்குப் பால் போதும். இந்த விலங்குகள் எதற்காக இத்தனை உணவு வகைகளைக் கொண்டு வரவேண்டும்?” என்று கேட்டது பப்பு.

சிரித்த தாய் யானை, “புத்திசாலி, எவ்வளவு கேள்விகளைக் கேட்கறே! இந்த உணவு வகைகள் உனக்காக மட்டும் வழங்கப்படவில்லை. உன்னை ஈன்றதில் என் உடல் சோர்வுற்று இருப்பதால், இவற்றை நான் சாப்பிடுவதற்காகவும் கொண்டுவந்து கொடுத்துள்ளனர். இந்தக் காட்டில் யார் குழந்தை பெற்றாலும் மற்றவர்கள் உணவு வழங்குவது வழக்கம். அடுத்த மாதம் மான் அத்தைக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. நாமும் ஒரு புல்கட்டைப் பரிசாகக் கொடுப்போம்” என்றது தாய் யானை.

“அம்மா, என்னால் கரும்பைக் கடிக்க முடியவில்லை.”

“கொஞ்ச நாள் ஆகும். இந்தத் தேனடையைச் சாப்பிட்டுப் பார்.”

தேனடையைச் சுவைத்துப் பார்த்த பப்பு, “எனக்குப் பிடிக்கவில்லை அம்மா. பாலே போதும்” என்று சொல்லிவிட்டது.

மாதங்கள் கழிந்தன. சற்று வளர்ந்த பப்பு, இலை தழைகளை உண்ண ஆரம்பித்துவிட்டது. அன்று உணவு தேடி தனியாகச் சென்றது.

வழியில் குரங்கு குட்டி ஒன்று தனியாகத் தவிப்பதைக் கண்டது. “உன் அம்மா எங்கே? ஏன் இப்படித் தவிக்கிறாய்?” என்று கேட்டது பப்பு.

மிரண்ட குரங்கு குட்டி அழ ஆரம்பித்தது.

“பயப்படாதே செல்லம்... நானும் உன்னைப்போல் குட்டி தான். என் அம்மா பக்கத்தில் இருக்கும் மூங்கில் காட்டில் இருக்கிறார். உன்னை உன் அம்மாவிடம் ஒப்படைக்கிறேன்” என்று சமாதானப்படுத்தியது பப்பு.

“மரத்திற்கு மரம் தாவி விளையாடுவேன். இன்று விளையாடும் போது பிடி நழுவியதால் தவறி விழுந்துவிட்டேன். எங்கள் இனத்தில் இவ்வாறு விழுந்தால், அம்மா தனித்து விட்டுவிடுவார். இனிமேல் சுயமாக உணவு தேடி அலைய வேண்டும். இன்று எனக்கு முதல் பிறந்தநாள்” என்றது குரங்கு குட்டி.

பப்புவுக்குச் சந்தோஷம். “உனக்கு என்ன பிடிக்கும்?” என்று கேட்டது பப்பு.

“வாழைப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவேன்.”

“இங்கேயே இரு, பழத்துடன் வருகிறேன்” என்று ஓடியது பப்பு. சிறிது நேரத்தில் வாழைப் பழங்களுடன் வந்தது.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உனக்கு என்னோட அன்புப் பரிசு” என்று பழங்களை நீட்டியது பப்பு.

குரங்கின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பழங்களை எடுத்துக்கொண்டு கிளம்பப் பார்த்தது.

“கொஞ்சம் இரு, நம் நண்பர்களையும் உன்னை வாழ்த்த அழைத்திருக்கிறேன்.”

சில நிமிடங்களில் முயல் குட்டி, மான் குட்டி, கரடி குட்டி என்று பலவும் பரிசுகளோடு வந்து சேர்ந்தன.

மகிழ்ச்சியில் குரங்கு குட்டிக்குப் பேச்சே வரவில்லை.

“இனிமேல் நாம் எல்லோரும் குட்டிகளின் முதல் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்” என்ற பப்புவின் பேச்சைக் கேட்டு, சற்றுத் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தாய் யானை மகிழ்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x