Published : 15 Feb 2022 11:31 AM
Last Updated : 15 Feb 2022 11:31 AM

பேரிடரிலிருந்து மீட்கும் படிப்புகள்!

 பேராசிரியர் முகமது அப்துல்காதர்

சமூகச் சேவைக்கு உதவும் படிப்புகள் பல உள்ளன. அதில், குறிப்பிடத்தக்கது, ‘பேரிடர் மேலாண்மைக் கல்வி’. புயல், மழை-வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு, தீ விபத்து உள்படப் பல்வேறு அசம்பாவிதங்கள் எதிர்பாராத வகையில் நடைபெறுவதுண்டு. இதுபோன்று மக்கள் சற்றும் எதிர்பாராத வகையில் நிகழும் பேரிடர்களையும், அதனால் ஏற்படும் சவால்களையும் சந்திக்கும் வழிமுறைககளைக் கற்றுக்கொடுக்கும் கல்விதான், ‘பேரிடர் மேலாண்மைப் படிப்பு'. நவீனத் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இத்தகைய ஆபத்துகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பது எப்படி என்பதை இந்தப் படிப்பின் மூலம் அறிந்துகொள்ள முடியும். புத்தகக் கல்வியுடன், களப்பயிற்சியும் பேரிடர் மேலாண்மைப் படிப்பில் வழங்கப்படுகின்றன.

பேரிடர் வகைகள்

பேரிடர்கள் என்பது இயற்கையால் ஏற்படலாம், விபத்துகளால் வரலாம், மனிதர்கள் மூலம் ஏற்படும் ஆபத்துகளாலும் உருவாகலாம். பேரிடர் மேலாண்மை இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று, இயற்கையால் உருவாகும் பேரிடர்கள்; அடுத்தது, மனித தவறுகள் மற்றும் பிற நாசவேலைகளால் ஏற்படும் பேரிடர்கள். வறட்சி, சூறாவளி புயல், வெள்ளம், கடல் அலைகள், சுனாமி, எரிமலை, பனிப் புயல், பூகம்பங்கள் போன்றவை இயற்கையாக நிகழும் பேரிடர்கள். பல்வேறு வகையான தீ விபத்துகள், நச்சு ரசாயனங்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், அணு உலைகள், அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றில் ஏற்படும் விபத்துகள், குண்டுவெடிப்புகள், பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவை மனிதர்களால் ஏற்படும் பேரிடர்கள்.

மேலே குறிப்பிட்டது போல ஆபத்தான நிகழ்வுகளில் நாம் எவ்வாறு செயல்பட்டு உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைப் படிப்பில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. வகுப்பறைக் கல்வி மற்றும் களப்பயிற்சி என இரண்டும் இணைந்ததாகவே இந்தப் படிப்பு அளிக்கப்படுகிறது.

தகுதிகள்

பேரிடர் மேலாண்மைப் படிப்பு, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிலை வரை கற்றுக்கொடுக்கப்படுகிறது. இளநிலை பேரிடர் மேலாண்மைப் பட்டப் படிப்பில் சேர, 12-ம் வகுப்புத் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பைப் படிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில், ஏதேனும் ஒரு துறையில், இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர விரும்புவோர், முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையைப் பெரும்பாலான கல்லூரிகள் நடத்துகின்றன.

வேலை வாய்ப்புகள்

பேரிடர் மேலாண்மைப் படிப்பைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஆளுமைத் திறன், விரைந்து செயல்பட்டு உடனடியாக முடிவெடுக்கும் திறன், உடல் மற்றும் மன வலிமை, மருத்துவ முதலுதவிப் பயிற்சி, நெருக்கடியான சூழ்நிலைகளில் சகிப்புத்தன்மை, பொறுமையுடன் செயல்படும் பண்புகள் இருப்பது மிக அவசியம். பேரிடர் மேலாண்மைப் படிப்பில் தேர்ச்சி பெறுவோர் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும். அரசு நிறுவனங்கள், தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம், தீயணைப்புத் துறைகள், வறட்சி மேலாண்மை துறைகள், சட்ட அமலாக்கத் துறைகள், நிவாரண முகவர் காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் (ரசாயனம், சுரங்கம், பெட்ரோலியம்) மற்றும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு மேலாண்மைப் பிரிவில் பணியாற்றலாம்.

இவை தவிர இந்தத் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆலோசகர், ஆவணம் சரிபார்த்தல், சமூகப் பணிகள், தன்னார்வ சேவை நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.நா. நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.

எங்கே படிக்கலாம்?

பேரிடர் மேலாண்மைப் படிப்பை இந்திய அளவில் சில முன்னணி கல்வி நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோ இன்பர்மெடிக்ஸ் (புனே); நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் (டெல்லி); டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (மும்பை); டாடா சென்டர் ஆஃப் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட், டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட் (போபால், அகமதாபாத்); குரு கோபிந்த் சிங் இந்திர பிரஸ்தா பல்கலைக்கழகம் (டெல்லி); அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (சிதம்பரம்- தமிழ்நாடு); பஞ்சாப் பல்கலைக்கழகம் (சண்டிகர்); சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஹைதராபாத்); அமிட்டி இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் (நொய்டா) ஆகிய கல்வி நிறுவனங்களில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் சேரும் முன்பு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், அங்கே கற்பிக்கப்படும் படிப்புகள் அரசு மற்றும் கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்றவையா என்பதைக் கவனித்துக்கொள்வது அவசியம்.

கட்டுரையாளர்: முதல்வர், தனியார் பொறியியல் கல்லூரி. கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்.
தொடர்புக்கு: dean@ccet.org.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x