Published : 22 Apr 2016 01:07 PM
Last Updated : 22 Apr 2016 01:07 PM

திரை வெளிச்சம்: தரகர்களின் கையில் தமிழ் சினிமா!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் பொதுச்செயலாளர், இயக்குநர் ஆர்.கே.செல்மணி, திரையுலக நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய பேச்சு, கோலிவுட்டில் அனல் வீச்சை கிளப்பியிருக்கிறது. “ தமிழ் சினிமாவின் சூழல் மாறிவிட்டது. சினிமா தற்போது இடைத்தரகர்களின் கைக்குப் போய்விட்டது. அவர்கள்தான் நம்மை ஆண்டு வருகிறார்கள். உற்பத்தி செய்பவர்கள் வாழ முடியவில்லை, விற்கிறவர்களும் வாழ முடியவில்லை. இது விவசாயத்தில் மட்டுமல்ல சினிமாவிலும் வந்து விட்டது. தயாரிப்பாளர்கள் அடைய வேண்டிய லாபத்தை இடைத்தரகர்கள் எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள்” என்று பேசியிருக்கிறார். அவர் இடைத்தரகர்களாக யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை அறிய அவரைத் தொடர்புகொண்டபோது குமுறித் தள்ளிவிட்டார்.

யார் இவர்கள்?

“விநியோகஸ்தர்கள் என்கிற பாரம்பரியமான வியாபார சமூகம் இருந்தவரைத் தமிழ் சினிமா நன்றாக இருந்தது. 75 ரூபாய் போட்டு ஒரு படம் தயாரித்து 100 ரூபாய்க்கு விநியோகஸ்தர்களிடம் விற்றால் தயாரிப்பாளருக்கு 25 ரூபாய் லாபம் என்பது வெளிப்படையான வியாபாரமாக இருந்தது. விநியோகஸ்தர்களும் தங்களுக்கு ஒரு நியாயமான லாபத்தை வைத்து திரையரங்களுக்கு விற்கும்போது அங்கேயும் வெளிப்படைத் தன்மை இருந்தது. அதேபோல் திரையரங்குகள் குத்தகை மாபியாவின் கைகளுக்குப் போகாமல், அவற்றின் உரிமையாளர்களிடமே இருந்தவரைத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவர்களாக மிக நேர்மையாக நடந்துகொண்டார்கள்.

ஆனால் தற்போது கையில் பணமே இல்லாமல் ஒரு படத்தை வாங்கி விற்கவும், பட வெளியீட்டுக்குத் திரையரங்குகளை அமர்த்தித்தரவும் நாங்கள் இருக்கிறோம் என்று கூறிக்கொண்டு அணி அணியாகக் கிளம்பியிருக்கும் இடைத்தரகர்கள் கூட்டத்தின் கையில்தான் தற்போது தமிழ் சினிமா வசமாகச் சிக்கியிருக்கிறது. படத்தை வெளியிட்டுத்தருகிறோம் என்ற போர்வையில் அதன் வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றை எழுதிவாங்கிக்கொள்ளும் இந்தத் தரகர்களிடம் சிக்கித் தவித்து வருகிறார்கள் பல தயாரிப்பாளர்கள்.

இவர்கள் போதாதென்று கார்ப்பரேட் சினிமா நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் அல்லது இன்சார்ஜுகள் என்ற போர்வையில், ஒரு படத்துக்கான பட்ஜெட்டை ஓவர் பட்ஜெட்டாக ஏற்றிவிட்டு, அதில் கமிஷன் பெற்றுக்கொண்டு, படத்தின் லாப, நஷ்டம் பற்றி கண்டுகொள்ளாத கும்பலின் ஆதிக்கமும் கோலிவுட்டில் தொடர்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.300 கோடியாக இருந்த தமிழ் சினிமாவின் மொத்த வருடாந்திர வருவாய் ரூ.300 கோடியாக இருந்தது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், இன்று அது ஆயிரம் கோடி ரூபாயாக ஆகிவிட்டது என்று கொள்ளலாம். ஆனால் இந்த ஆயிரங்கோடியில் ரூ.700 கோடி ரூபாய் கறுப்புப் பணமாக மாறிவிடுகிறது. இது உண்மையில் சினிமாவின் வளர்ச்சி அல்ல; வீக்கம். காரணம், இந்தக் கறுப்பு பணத்துக்குள்தான் நடிகர்களுக்கு அதிகாரபூர்வமற்ற முறையில் போய்ச் சேரும் தகுதிக்கு மீறிய சம்பளம், எரியும் வீட்டில் பிடுங்கிச் செல்லும் இடைத்தரகர்களின் கொள்ளை ஆகியவை ஒளிந்திருக்கின்றன.

இந்த ரூ.700 கோடியும் பிளாட் டிக்கெட் என்ற பெயரில் ரசிகர்களின் பாக்கெட்டிலிருந்து அடிக்கப்பட்ட கொள்ளை” என்று கொதிக்கும் செல்வமணி “ இப்படி இடைத்தரகர்களால் சூதாட்டமாக தமிழ்சினிமா மாறிப்போய்விட்டதால், ஒழுங்கான விநியோகஸ்தர்கள், ஒழுங்கான தயாரிப்பாளர்கள், நேர்மையான திரையரங்கு உரிமையாளர்கள் சினிமாவை விட்டே விலகி நிற்கிறார்கள்.

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் தமிழ் சினிமா தொழிலின் விற்றுவருவாய் சதவிகிதம் எவ்வளவு, வருடாந்திர கேளிக்கை வரி வருவாய் எவ்வளவு ஆகிய இரண்டு முக்கியமான கேள்விகளுக்கும் விடை தெரிந்தால் இங்கே விளையாடும் கறுப்புப் பணத்தின் முகத்தை நாம் தெளிவாக அடையாளம் காணமுடியும்” என்ற சூட்சுமத்தையும் எடுத்துச் சொல்கிறார் ஆர்.கே. செல்மணி.

எது சரியான வியாபாரம்?

இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவின் வியாபார முறையைச் சீர்திருத்தம் செய்யாமல் இடைத்தரகர்கள் உள்ளிட்ட எந்த ஆபத்தையும் சமாளிக்க முடியாது என்கிறார் ‘சினிமா வியாபாரம்’உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும் இயக்குநருமான கேபிள் சங்கர்.

தற்போது திரையரங்க உரிமையாளர்கள் பெரிய படங்களை எம்.ஜி. கொடுத்து(மினிமம் கியாரண்டி) வாங்கி வெளியிடத் தயங்குவதற்கு காரணம்; எத்தனை பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குமேல் ப்ளாட் ரேட்டில் டிக்கெட் விற்கமுடியாத சூழ்நிலை இருப்பதுதான். மினிமம் கியாரண்டி அடிப்படையில் பெரிய படத் தயாரிப்பாளர்கள் கேட்கும் முன்பணத்தை, பத்து நாட்கள் ப்ளாட் ரேட்டில் டிக்கெட் விற்றாலும் எடுக்கமுடியாது என்பதுதான் தற்போதைய வியாபார யதார்த்தம். ஆனால் தயாரிப்பாளர்கள் ப்ளாட் ரேட் என்ற மாயை பத்து நாட்களுக்குமேல் நீடிப்பதாக நினைத்துக்கொண்டு, படம் ரூ.50 கோடி வசூல் ரூ.100 கோடி வசூல் என்று ஊக அடிப்படையில் அறிக்கை வெளியீட்டு போலியாக வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். இதை உண்மை என்று நம்பும் பெரிய ஹீரோக்கள், தங்களுக்கு ரூ.50 கோடி நூறுகோடி மார்க்கெட் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு தங்களது சம்பளத்தை ரூ.25 கோடி ரூ.30 கோடி என்று நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இத்தனை சம்பளம் கொடுக்க முடியாமல்போனதால்தான் பல தயாரிப்பாளர்கள் சினிமா தொழிலில் இருந்தே ஒதுங்கிக்கொண்டனர். இதனால்தான் ஹீரோக்களே சொந்தமாக படநிறுவனம் தொடங்கி, தங்கள் படங்களை பினாமி தயாரிப்பாளர்களைக் கொண்டு தயாரிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.” என்று கூறும் கேபிள் சங்கர், ப்ளைன் டேர்ம்ஸ் எனப்படும் விகிதாசார அடிப்படையில் படங்களை விநியோகம் செய்தால் திரையரங்கில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விற்று ரசிகன் பாக்கெட்டிலிருந்து பணத்தை திருட வேண்டிய அவசியமே இருக்காது. இதை மல்டி ப்ளெக்ஸ் மற்றும் மால் திரையரங்குகள் சரியாக செய்து கொண்டிருக்கின்றன” என்கிறார்.

இந்தியா முழுவதும் ஒரே முறை

மல்டி ப்ளெக்ஸ் மற்றும் மால் தியேட்டர்கள் 120 ரூபாய்க்கு மேலே டிக்கெட் விலையை ஏற்றி விற்பதில்லை. அவர்களது லாபத்தின் முக்கிய பகுதி என்பது கேண்டீன் மற்றும் பார்க்கிங் வியாபாரத்தில்தான் அடங்கியிருக்கிறது. இதனால் பெரிய படங்களை அவர்கள் 50:50 என்ற விகிதச்சாரத்தில் திரையரங்கு உரிமையாளரும் பட உரிமையைப்பெற்றவரும் வசூலை பிரித்துக்கொள்ளும் முறையில் படங்களைத் திரையிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இரண்டு வாரங்கள் தாண்டி படங்கள் ஓட ஆரம்பித்தால், வசூலில் 30 சதவிகிதம் திரையரங்கிற்கும் 70 சதவிகிதம் பட உரிமையாளருக்கும் என்று கொடுத்து விடுகிறார்கள். மல்டி ப்ளெக்ஸ் திரையரங்குகளின் இந்த வியாபாரமுறை இந்தியா முழுவதும் ஓரே சீராக பின்பற்றப்படுகிறது.

எனவேதான் மல்டி ப்ளெக்ஸ் அல்லாத திரையரங்க உரிமையாளர்களும் இதேபோல் வசூலைப் பிரித்துக்கொள்ளும்(ப்ளைன் டேர்ம்ஸ் முறை) விகிதாச்சார முறையில் படங்களை எங்களுக்குக் கொடுப்பதில் என்ன பிரச்சினை என்று பெரிய படங்களின் தயாரிப்பாளர்களைப் பார்த்து கேட்கிறார்கள். மினிமம் கியாரண்டியில் படத்துக்கு பணத்தைக்கொடுத்து வாங்கும்போது போட்ட பணத்தை எடுக்க அதிக விலைக்கு டிக்கெட் விற்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரேநேரத்தில் தயாராகும் ஒரு படம் தமிழ்நாட்டில் தோல்வியும் ஆந்திராவில் வெற்றியும் அடைவதற்கு அங்கே ப்ளைன் டேர்ம்ஸ் வியாபார முறை நடைமுறையில் இருப்பதுதான் காரணம்” என்கிறார் கேபிள் சங்கர். சமீபத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான ‘தோழா’ படத்தின் ஆந்திர வியாபார வெற்றியும் இதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x