Published : 09 Feb 2022 11:57 AM
Last Updated : 09 Feb 2022 11:57 AM

ஆப்பிள் ஏன் தண்ணீரில் மிதக்கிறது? - டிங்குவிடம் கேளுங்கள்!

ஏன் மருத்துவர்கள் வெள்ளை கோட்டையும் வழக்கறிஞர்கள் கறுப்பு கோட்டையும் அணிகிறார்கள், டிங்கு?

- வி. ஹேம வர்ஷினி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

வெள்ளை என்பது சுத்தம், தூய்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் எளிதில் மருத்துவர்களை அடையாளம் காண, வெள்ளை கோட் உதவுகிறது. வெள்ளை கோட் மீது ரசாயன மருந்துகளோ ரத்தமோ பட்டால் உடனே சுத்தம் செய்துவிடவும் முடியும். ஆனால் அண்மைக் கால ஆய்வு முடிவுகளிலோ, வெள்ளை கோட் என்பது கிருமிகள் அதிகமாகக் குடியிருக்கும் இடமாகக் கருதப்படுகிறது. அதனால், வெள்ளை கோட் போட்டிருப்பவர்களிடமிருந்து சற்றுத் தள்ளி நின்றுகொள்வது நல்லது என்று சொல்லும் அளவுக்கு நிலைமையாகிவிட்டது!

நெடுங்காலமாக நீதித் துறையில் பணியாற்றுபவர்கள் கறுப்பு கோட்டைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். கம்பீரம், அதிகாரம் ஆகியவற்றின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது கறுப்பு. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கறுப்பு கோட் அமல்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு, 1961ஆம் ஆண்டு வழக்கறிஞர்களுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், துணை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகிய இடங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கண்ணியமான உடையை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது, ஹேம வர்ஷினி.

பறக்கும் மீன்கள் உண்டா, டிங்கு?

- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

64 வகையான பறக்கும் மீன்கள் இருக்கின்றன. மற்ற மீன்களைவிட இவற்றின் துடுப்புகள் நீருக்கு மேல் குறிப்பிட்ட தொலைவுக்கு தாவிச் செல்வதற்கு ஏற்ற வகையில் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன. வேகமாகச் செல்ல வேண்டும் என்று நினைத்தால், தண்ணீரின் மேல் பகுதிக்கு வந்து, இறக்கைகளைப் படபடவென்று அசைத்து, தாவிச் செல்கின்றன. ஆனால், இந்த மீன்களால் பறவையைப் போல் நீண்ட நேரம் காற்றில் செல்ல இயலாது. சுமார் 200 மீட்டர் தொலைவு வரை மட்டுமே தண்ணீருக்கு மேல் தாவிச் செல்ல முடியும் மஞ்சரி.

ஆப்பிள் பழம் தண்ணீரில் மிதப்பது ஏன், டிங்கு?

- தா. லோகேஸ்வரி, 11-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.

பழுத்த ஆப்பிளில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கிறது. தண்ணீரைவிட ஆப்பிளின் அடர்த்தி குறைவாக இருக்கிறது. அதனால், ஆப்பிள் தண்ணீரில் மிதக்கிறது. ஆப்பிள் சரி. அவ்வளவு பெரிய கப்பல் எப்படி மூழ்காமல் மிதந்துகொண்டே செல்கிறது? பொருளின் எடை, மிதப்பு விசையைவிடக் குறைவாக இருந்தால், அந்தப் பொருள் மிதக்கும். பொருளின் எடை மிதப்பு விசையைவிட அதிகமானால் அந்தப் பொருள் மூழ்கும். கடலில் கப்பல் செல்லும்போது அதன் எடைக்கு நிகரான தண்ணீர் அந்த இடத்திலிருந்து இடம்பெயராதபடி, கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், கப்பலின் எடையைவிட மிதப்பு விசை அதிகமாக இருப்பதால் கப்பல் மூழ்காமல் மிதக்கிறது, லோகேஸ்வரி.

பெண்களின் முகத்தை ஏன் நிலாவோடு கவிஞர்கள் ஒப்பிடுகிறார்கள், டிங்கு?

- என். கார்த்திகேயன், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

கவிஞர்கள் அழகியலுக்காக உயர்வாகக் கற்பனை செய்து எழுதுவார்கள். பூமியிலிருந்து பார்க்கும்போது நிலா மிக அழகாக ஜொலிக்கிறது அல்லவா! அது போன்று பெண்களின் முகங்களும் ஜொலிப்பதாக ஒப்பீடு செய்து எழுதுகிறார்கள். நிலாவில் இறங்கியவர்களுக்குத்தான் தெரியும், அது எப்படிக் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது என்று! ஒருவேளை வஞ்சப்புகழ்ச்சியாக இருக்குமோ, கார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x