Last Updated : 01 Mar, 2016 11:42 AM

 

Published : 01 Mar 2016 11:42 AM
Last Updated : 01 Mar 2016 11:42 AM

இப்படியும் பார்க்கலாம்: சொந்த ஊரை நினைத்து ஏங்குகிறீர்களா?

கடிதம் எழுதும் கலையும் கரங்களும் உயிரோடு இருந்த 80களின் சித்தியையும் அத்தையையும் கேட்டால், தாங்கள் வாழ்க்கைப்பட்டிருந்த ஊரின் தபால்காரரைத் தெய்வமாகப் பார்த்த கதைகளைச் சொல்லுவார்கள். காரணம், அந்தத் தூதர் வழங்கும் காகிதங்கள் சொந்த ஊரைச் சுமந்துவருகின்றன.

திருவல்லிக்கேணி சிற்றறை நண்பர் ஒருவர் சொல்லுவார்: “அவன் வள்ளியூர்க்காரன். என்னோட சொந்த ஊர் திருநெல்வேலிக்கு அவனைவிட முக்கால் மணிநேரம் முன்னாடியே போயிருவேன்ங்கறதுல எனக்கு ஒரு அல்பத்தனமான சந்தோஷம்!”

இன்னொரு வெளியூர்வாழ் நண்பர், “சொந்த ஊர்ல எங்க தாத்தா வாழ்ந்த மாதிரி ஒரு தோப்பு, நடுவுல வீடுன்னு அமைதியா வாழணும்...”

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் “சொந்த ஊரை நீங்க வேண்டும்” என்ற நிபந்தனை அவற்றின் நாயகர்களுக்கு விதிக்கப் படுவதிலிருந்து சொந்த ஊரைப் பிரிதல் என்பது ஒருவித தண்டனையாகவும் பின்னடைவாகவும் கருதப்பட்டிருகிறது என்றே சொல்லலாம்.

சொந்த ஊரிலிருந்து வருகிற துரும்பைக்கூட அவ்வளவு சீக்கிரம் யாரும் குப்பைக்கு அனுப்பிவிட மாட்டார்கள்.

மேற்கண்ட ஏதாவது ஒன்றுக்கு “ஆமாங்க” என்று ஒப்புக்கொண்டால் நீங்கள் வெளியூரில் இருந்துகொண்டு, சொந்த ஊர் நினைவுகளில் வதைபடுகிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த ஏக்கங்கள் தவிர்க்க முடியாதவை என்பதால், அவை அளவோடு இருக்கிற பட்சத்தில் பிரச்சினைகள் இல்லை. ஆனால், மனம் அடிக்கடி “சொர்க்கமே என்றாலும், அது நம்மூரு போல வருமா?” என்று அழும்போது நீங்கள் நிகழ்காலத்தில் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். தற்காலிக சோப்புக் குமிழ் ஆறுதல் தேடித்தான் இரவல் ஊருக்கு “குட் பை” சொல்கிறோம்; சொந்த ஊரின் தோல்வியடையாத, அடைந்தாலும் கவலைப்படாத நம் பால்யத்தைத் தேடிக் கிளம்புகிறோம்!

இது சற்று மிகையாக, முகத்தில் அறைகிற அதிர்ச்சியாக இருந்தாலும் அதில் துளி உண்மையாவது இருக்கிறதா என்பதை ஆராயுங்கள். காரணம், இந்தத் தெளிவு பல நண்பர்களிடம் விசாரித்ததிலிருந்து கிடைக்கப்பெற்றது.

“சொந்த ஊர், சொந்த ஊர் என்கிறாயே, ஊரில் இருக்கிற அப்பா, அம்மாவிடம் அவ்வளவு பாசமா?”

“அவங்க என்னோடதான் இருக்காங்க”

“இதர சொந்தக்காரங்க மீது அவ்வளவு பாசமா?”

“பொறாமை புடிச்சவங்க. அவங்க முகத்துல அளவுக்கு அதிகமா விழிக்கறதுகூட நல்லதுக்கில்ல...”

“சொந்த ஊர்ல விவசாயம்?”

“அதுல இப்போ ஃப்ளாட் முளைச்சிருக்கு!”

“சொந்த ஊர்த் திருவிழா சண்டைல முன்னுக்கு நிக்கறது? குறைந்தபட்சம் பஞ்சாயத்துல ‘சட்டுப்புட்டுன்னு தீர்ப்பைச் சொன்னா அடுத்த வேலையைப் பாக்கப் போகலாம்’னு சொல்ற சமூக வாழ்க்கையாவது உண்டா?”

“அந்த வம்பு தும்புக்கெல்லாம் போறதே இல்ல...”

நூற்றுக்கு 90 பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். பின் எதற்காக சொந்த ஊர்ப் பயணம்? இருக்கிற ஊரின் மண்ணில் வேரூன்ற முடியாமல் திணறல்?

திரும்பிப் போகத் தயாரா?

மேற்கண்ட கருத்தை இன்னொரு கோணத்திலும் சரி பார்க்கலாம். தற்போது இருக்கிற ஊரிலேயே சகல வசதிகளுடன் நிறைவாக இருக்கிறீர்கள் என்றால், எத்தனை பேர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நிரந்தரமாகச் சொந்த ஊர் மீளுவார்கள்? “இப்பல்லாம் முன்ன மாதிரி ஊருக்குப் போக நேரமே கிடைக்கறதில்லீங்க” என்று சாக்குப்போக்கு சொல்லத் துவங்குவீர்கள். ஆக, சொந்த ஊர்ப் பாசம் என்பது வரையறைக்கு உட்பட்டதே.

விதிவிலக்காகச் செல்லும் சிலருக்கும் இப்போது இருக்கிற சொந்த ஊர் ஏமாற்றத்தையே தரும். ஏனென்றால் அவர்கள் விட்டுச் சென்ற ஊராக அது இருக்காது. பால்ய நண்பர்கள், அப்போது வாழ்ந்த வாழ்க்கை, பழைய சுவடுகள் எல்லாவற்றையும் காலம் கலைத்திருக்கும்.

ஊரைப் பிரிதல் மனிதருக்கு மட்டும் விதிக்கப்படவில்லை. நீங்களோ, நானோ வடக்கு ஐரோப்பாவிலுள்ள குருவியாகப் பிறந்திருந்தால், ஆப்பிரிக்காவை நோக்கி 11,000 கி.மீ இடப்பெயர்ச்சி செய்திருப்போம். பாலைவன வெட்டுக்கிளியாக இருந்திருந்தால் பிழைப்புத் தேடி நகரும் சுமார் 50,000 மில்லியன் வெட்டுக்கிளிகளுள் ஒன்றாக பயணித்துக்கொண்டிருப்போம். வடஅமெரிக்காவிலுள்ள பாரன்மைதான மானாக கண்ணாடியில் நம் முகம் தெரியுமானால், 5,000 கி.மீ. கடந்து புல், பூண்டைத் தின்று உயிர்பிழைத்திருப்போம்.

தாவரங்கள்கூட மறைமுகமாகத் தங்கள் சந்ததிகளை வெளியூருக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவை யாவும் கண் கலங்கி அழுது புலம்புவது மாதிரி தெரியவில்லை. வலசை போகாவிட்டால் வாழ்க்கை போய்விடும் என்பது அவற்றுக்குத் தெரியும்!

பிற உயிரினங்களுக்கு வாழும் ஆசை தவிர எதுவும் கிடையாது. அவையே தங்களது ‘இருப்பிடச் சான்றிதழ்’ பெற வேறு ஊர் வி.ஏ.ஓ.க்களிடம் அலையும்போது சகல விதமான ஆசைகளையும் தன்னுள் கொண்ட மனிதனை, அந்த ஆசைகளும், தேவைகளும் துரத்தாமல் என்ன செய்யும்?

கல்விக்காக, வாய்ப்புகளுக்காக, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைக்காக, கணவனுக்காக, மனைவிக்காக, குழந்தைகளுக்காக, குழந்தைகளின் குழந்தைகளுக்காக, சாதனை என்ற சில விஷயங்களுக்காக...

இவை எல்லாமே சொந்த ஊரிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், அது உச்சக்கட்டப் பேராசையாகத்தான் இருக்க முடியும்.

தெரிந்த நண்பர்கள், உறவுகளை ஆராய்ந்ததில் இப்போதைய காலகட்டத்தில் அதிகபட்சம் 5 வருடங்களுக்கு மேல் ஒரே ஊரில் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அப்படி ஒரே ஊரில் இருந்தாலும், ஒரே முகவரியில் இருதற்கான வாய்ப்பு குறைவு. அப்படி இருக்கிற பட்சத்தில் உங்களின் குடும்ப உறுப்பினர்களில் யாரோ ஒருவர் அல்லது பலர் உங்கள் பொருட்டு வேறு எங்கோ இருக்கிறார்.

பரந்து விரிந்த வானம்

வானம் உங்களூரைத் தாண்டியும் பறந்து கிடக்கிறது. உங்களது சிறகுகளை சந்தோஷமாக விரியுங்கள். விரிக்காத சிறகுகளிலும் வாழ்க்கையிலும் சீழ் பிடிக்கும்! பயணங்கள்தான் ஒருவரைப் பண் படுத்துகின்றன; வளர்ச்சி தருகின்றன; அதை விரும்பிச் செய்யுங்கள்.

கிணற்றுத் தவளைகள் அனுபவங் களை விரும்பாததால், வாழ்க்கையும் அவர்களை விரும்புவதில்லை.

யதார்த்தம் இப்படியெல்லாம் இருந்தாலும், மனிதனுக்கு இரும்பு இதயம் இல்லைதான். சொந்த ஊருக்கு ஏன் போகிறோம் என்று தெரியாமல் போவதும், போகாமல் நினைவுகளில் சித்திரவதை பெறுவதும் வாழ்வின் அர்த்தமாகக்கூட இருக்கக்கூடும். எனவே செவ்வாய்கிரகத்தில் வேலை கிடைத்தாலும் “மாரியம்மன் கோவில்ல கொடை” என்று லீவ் கேட்டு, எதிர்கால மனிதனும் தத்காலில் பறந்து வந்தே தீருவான்.

ஆனால், அளவுக்கதிகமாக அர்த்தம் தேடும் முயற்சிகள் புதிய இடத்தில் நாம் உருவாக்கியுள்ள வாழ்வை அபத்தமாக்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x