Last Updated : 28 Dec, 2021 12:58 PM

Published : 28 Dec 2021 12:58 PM
Last Updated : 28 Dec 2021 12:58 PM

சோதனை ஆண்டில் பேசப்பட்டவை!

2021ஆம் ஆண்டு விடைபெற இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த ஆண்டில் டிரெண்டிங், வைரல் ஆனவர்கள், பேசப்பட்டமனிதர்கள், விஷயங்களைப் பார்ப்போம்.

யூடியூப் உச்சம்!

இதுவரை உலக அளவில் எந்த யூடியூப் அலைவரிசையும் அடையாத உச்சத்தைப் அடைந்திருக்கிறது இந்தியஅலைவரிசையான ‘டி சீரீஸ்’ (T Series). முதன்முறையாக 200 மில்லியன் (20 கோடி)பேர் பின்தொடரும் அலைவரிசையாகி இருக்கிறது. பல ஆண்டுகளாக ‘பியூடிபை’ (PewDiePie) என்கிற ஸ்வீடன் நாட்டு அலை வரிசைதான் நம்பர் ஒன்னாக இருந்தது. அதை இந்தியாவின் ‘டி சீரீஸ்’ அலைவரிசை இந்த ஆண்டு முறியடித்திருக்கிறது. கடந்த 2006ஆம் ஆண்டில் இசையை மையப்படுத்தி இந்த அலைவரிசை தொடங்கப்பட்டது.

வைரல் வைபோகம்

பரிதாபங்கள் வீடியோக்கள் எதுவும் புதிதல்ல. ஆனால், கோவையைச் சேர்ந்த ஐந்துவயது சிறுவனான ரித்விக்கின், ரிப்போர்ட்டர்ஸ் கலாட்டா அலப்பறை தமிழகத்தைக் குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்தது. சரண்யா, தன்ராஜ், வேல்ராஜ் என மூன்று முகங்களில் கலாட்டா செய்திருந்தான் சிறுவன் ரித்விக். இந்த வீடியோவுக்குப் பிறகு ரித்விக்கின் ‘ரித்து ராக்ஸ்’ அலைவரிசைக்குப் பார்வையாளர்கள்எகிறினர். யூடியூப், விளம்பரம், சினிமா என ரித்விக் காட்டில் இப்போது அடை மழை.

ஒரு படகு பயணம் இந்திய உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டது. இவ்வளவு அழகான நதியா என்று கூறும் அளவுக்கு நதியின் அடியில் உள்ள கற்கள், மணல் என அனைத்தும் தெளிவாகவும் அழகாகவும் இருந்த நதியின் புகைப்படத்தை மத்திய ஜல்சக்தி துறை வெளியிட்டிருந்தது. மேகாலயாவில் உள்ள ‘உம்ங்கோட்’தான் அந்த அழகான நதி.

ஜார்வோ என்கிற பிரபல பிராங்க் ஸ்டார் இங்கிலாந்தைத் தாண்டி இந்தியாவிலும் பிரபலமானார். இந்திய - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது அவ்வப் போது மைதானத்துக்குள் புகுந்தும், இந்திய வீரர் களுக்குள் ஒருவர் போல் உடையணிந்து வந்தும் இந்திய ரசிகர்களையும் ஈர்த்து டிரெண்டிங் ஆனார்.

ஒருசில விநாடிகள் மட்டுமே ஒருவர் செய்த செயல்,உலகம் முழுவதும் பேசு பொருளானது. அதன் காரண கர்த்தா, போர்ச்சுக்கலைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஐரோப்பியக் கால்பந்து போட்டி ஒன்றுக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மேசையின் மீது இருந்த குளிர்பானத்தை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலைக் காட்டி ‘தண்ணீர் குடியுங்கள்’ என்று சொன்னது உலக அளவில் டிரெண்டானது. சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்துக்கு ஒரே நாளில் ரூ.29 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் குவிந்தன.

தேசத்தின் நாயகன்!

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குத் தடகளம் எப்போதுமே தடு மாற்றம்தான். ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் ஹரியாணாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, உலக சாம்பியன்களை எல்லாம் ஓரங்கட்டி, 87.58 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்தார். இதன்மூலம் இந்தியச் சுதந்திர வரலாற்றில் தடகளத்தில் தங்கப் பதக்கத்தை ஈட்டி, தேசத்தின் நாயகனானார். அவர் எய்த ஈட்டி ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வென்றெடுத்தது.

கரோனா ஹீரோ

கரோனா இரண்டாம் அலை இந்தியாவை புரட்டிப்போட, ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் சேவைக்குத் திண்டாட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் விழிபிதுங்கினர். உதவிக்குத் தன்னார்லவர்கள் நான்கு திசைகளில் இருந்தும் ஓடோடி வந்தார்கள். இவர்களில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஏழை ஆட்டோ ஓட்டுநர் ஜாவேத் கான் நாட்டு மக்களின் இதயங்களை வென்றார். தன்னுடைய ஆட்டோவில் ஆக்சிஜனைப் பொருத்தி, மினி ஆம்புலன்ஸ் போலவே மாற்றி கரோனா நோயாளிகளை இலவசமாக அழைத்துச் சென்று சேவை செய்தார். இவரைப் போல பல ஆக்சிஜன் மனிதர்கள் பலர் இந்த ஆண்டு டிரெண்டிங் ஆனார்கள்.

நம்பர் ஒன் எமோஜி

வார்த்தைகளைத் துறந்து எமோஜிகள் மூலம் சாட்டிங் செய்யும் காலம் இது. அந்த வகையில் எந்த எமோஜி, 2021ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்டது தெரியுமா? ‘டியர்ஸ் ஆஃப் ஜாய்’ எமோஜியைத்தான் இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது சிரித்துச் சிரித்து கண்களில் கண்ணீர் வரும் அல்லவா? அந்த எமோஜிதான். இரண்டாமிடத்தை ‘ரீட் ஹார்ட்’ எமோஜியும் மூன்றாமிடத்தை ‘ரோலிங் ஆன் ஃப்ளோர் லாஃபிங்’ எமோஜியும் பிடித்துள்ளன. பலரும் அதிகம் பயன்படுத்தும் கைகூப்பும் எமோஜி ஆறாமிடத்தைப் பிடித்துள்ளது. எமோஜிகள் பற்றிய இந்தப் புள்ளிவிவரங்களை யுனிகோட் கன்சார்ட்டியம் என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x