Published : 18 Dec 2021 11:58 AM
Last Updated : 18 Dec 2021 11:58 AM

நல்ல பாம்பு 14: கோரைப் பாம்பு தந்த வெளிச்சம்

மா.ரமேஸ்வரன்

மண்ணியலில் (Geo logy) முதுகலைப் பட்டம் பெற்ற கையோடு நான் சென்ற முதல் வேலை புதிய உப்பளங்களை அமைக்கும் திட்டப் பணி. இதற்காகத் தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை அருகில் தங்கியிருந்தேன். அங்கு எதிரே பரந்த நீர்ப் பரப்போடு சமூகக் காடுகள் சூழ ஒரு கம்மாய் இருந்தது. நீர்ப் பறவைகள் பல அங்கே வரும். அவற்றைக் காண சில முறை சென்றிருக்கிறேன். பின்பு வேலைப் பளு காரணமாகக் கம்மாயை மறந்திருந்தேன்.

மார்ச் மாதம், காலையில் வேலைக்குப் புறப்பட்டபொழுதே வெயில் கொளுத்தியது. தோட்டங்களுக்கான நீர்த் தேவை கருதி நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலமாகக் கம்மாயி லிருந்து நீரை உறிஞ்சி, பாய்ச்சிக்கொண்டி ருந்தார்கள். அதற்காகச் சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த பெரிய குழாயை தாண்டிய பொழுது அங்கே பல பாகங்களாகச் சிதறிக் கிடந்த ஒரு பாம்பைப் பார்த்தேன். அது கோரைப் பாம்பு (Olive Keelback– Atretium schistosum).

இந்த நன்னீர்ப் பாம்பை நான் அங்கே எதிர்பார்க்கவில்லை. ‘நாட்ரிசிடே’ குடும்பத்தில் தனித்த பேரினமாக உள்ளது. இந்தியாவில் பல வகையான நன்னீர்ப் பாம்புகள் இருந்தாலும் இதுவும், கண்டங்கண்டை நீர்க்கோலியும்தான் (Checkered Keelback – Fowlea piscator) பரவலாகக் காணப்படக்கூடியவை. ஆனால், கோரைப் பாம்பைப் பார்ப்பது சற்று கடினம்.

மேலும் இரண்டு

அங்கிருந்தவர்களிடம் பேச்சு கொடுத்த போது, அருகிலிருந்த ஒரு முட்புதரைக் காண்பித்து இதே போன்ற பாம்புகளை அதனுள் தூக்கி எறிந்ததாகச் சொன்னார்கள். இவை பகலாடிகள். நீர் உறிஞ்சும் பொழுது குழாய்களில் உண்டாகும் அதிக அழுத்தத்தில் உள்ளிழுக்கப்பட்டு இயந்திரத்தில் மாட்டிச் சிதைகின்றன. மீண்டும் பார்த்தால் தகவல் கொடுக்க முடியுமா எனக் கேட்டேன். கம்மாயில் நீர் வற்றும்வரை இங்கேதான் இருப்போம், வந்தால் எடுத்து வைக்கிறோம் என்றார். அன்று வேலையை முடித்துக் கருக்கலில் திரும்பியபொழுதும் இயந்திரம் ஓடிக்கொண்டிருந்தது. மேலும் இரு பாம்புகளைக் காண்பித்தார்கள். அவை பெரிதாகச் சேதமடையவில்லை. அதில் ஒன்றுக்கு வயிறு லேசாகக் கிழிந்து மஞ்சள் நிறத்தில் கரு முட்டை வெளிவந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இப்பாம்பின் இனப்பெருக்கக் காலமாக இருக்க வேண்டும்.

தண்ணீர் நன்றாக வற்றிவிட்டது. நாளை காலையிலே வந்தால் இயந்திரம் ஓடும், மக்களும் மீன்களுக்கு வலை போடுவார்கள். வாய்ப்பிருந்தால் உயிரோடு பாம்பைப் பார்க்கலாம் என்றார்கள். மேலுடல் முழுவதும் அடர் பச்சை நிறத்தில் மேடுடைய செதில்களைக் கொண்டிருந்தன அந்தப் பாம்புகள். ஒரு பாம்புக்கு அடிப்பகுதி மஞ்சளாகவும் மற்றொன்றுக்கு இளஞ்சிவப்பாகவும் காணப்பட்டது. உடல் சற்று நீண்டும், பெருவிரலைவிடச் சற்று கூடுதல் பருமனுடனும் இருந்தன. தெளிவான தலையில் வட்ட வடிவக் கண்கள், கருநிற வட்டப் பாவையைக் கொண்டிருந்தன.

நீர்வாழ் பாம்பு

காலையில் கம்மாய்க்கு விரைந்தேன். சிறிது நேரத்தில் இயந்திரம் ஓட மக்களும் ஆங்காங்கே வலைகளாலும் துணிகளாலும் மீனைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். வலைகளில் மாட்டிய சில பாம்புகளையும் நீர் ஆமைகளையும் உயிரோடு மீட்டுப் பாதுகாப்பாக விட்டோம். சில பாம்புகள் கண் முன்னே தப்பி ஓடின. சில மக்களிடம் அடிபடவும் நேர்ந்தது. இவை கடித்தால் தோலில் பாதிப்பு வரும் என்கிற மூடநம்பிக்கையே காரணம். நஞ்சற்ற இப்பாம்பினால் எவ்விதப் பாதிப்புமில்லை.

சில பாம்புகள் இயந்திரத்தில் சிக்கின. இறந்த பாம்பு ஒன்றின் வயிற்றில் நன்கு வளர்ச்சியடைந்த 36 முட்டைகளையும் சராசரியைத் தாண்டி அதிக நீளமான (116 செ.மீ.) ஒரு பாம்பையும் பார்த்தேன். அதன் வால், மொத்த நீளத்தில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. பாம்பின் அதிகபட்ச வளர்ச்சி அவை அதிகமான இளம் உயிரிகளை உருவாக்க வாய்ப்பளிக்கிறது.

நீர்வாழ்வியாக இருப்பதால் பெரும்பாலான நேரம் நீரிலேயே வாழ்க்கையைக் கழிக்கிறது. மீன்களைப் போல இவற்றால் நீந்த முடிந்தாலும் சுவாசிப்பதற்காகக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நீரின் மேற்பரப்புக்கு வந்து செல்கின்றன. நீரில் காணப்படக்கூடிய மீன்கள், நண்டுகள், தவளைகள், பிற சிறு உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. கரையோரங்களில் காணப்படும் பொந்துகள், கற்களின் இடுக்குகளில் முட்டையிடுகின்றன.

சாதனைப் பதிவு

நான் சேகரித்த பாம்புகளைப் பற்றிய குறிப்புகளை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களுடன் ஒப்பிட்டபொழுது பாம்பின் நீளம், முட்டைகளின் எண்ணிக்கை சற்று வேறுபட்டிருந்ததை அறிய முடிந்தது. இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சிறு ஆராய்ச்சிக் கட்டுரையைப் பிரசுரித்தேன். இன்றைக்கும் நான் பதிவுசெய்ததே, இவ்வினத் தின் அதிகபட்ச நீளமாகவும், முட்டைகளின் அதிக எண்ணிக்கையுமாக உள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கிடைக்காத தகவலை இந்தக் கம்மாய் பெற்றுத்தந்ததற்கு அங்கிருந்த நீர், கரிசல் மண், இயற்கை சூழல் போன்றவையே காரணம்.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x