Published : 19 Mar 2016 11:47 AM
Last Updated : 19 Mar 2016 11:47 AM

நலம் நலமறிய ஆவல்: தாழ்வு மனப்பான்மையைத் தள்ளி வையுங்கள்

எனக்கு 22 வயது. நான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த எட்டு வருடங்களாக, ‘Stuttering அல்லது Stammering' என அறியப்படும் ‘திக்குவாய்' பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறேன். இதனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில நண்பர்களைத் தவிர, பெரும்பாலோரிடம் சரிவரப் பேச முடியாமல் தவிக்கிறேன். இது ஒரு நோயா அல்லது உளவியல் குறைபாடா? இதற்கு என்ன சிகிச்சை?

- செபாஸ்டின், தூத்துக்குடி

இந்தக் கேள்விக்குத் திருநெல்வேலியைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஜி. ராமானுஜம் பதிலளிக்கிறார்:

திக்குவாய் ஏன் ஏற்படுகிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மூளை நரம்புகளின் இணைப்புச் சுற்றுகளில் (Circuit) ஏற்படும் பிரச்சினைகளாலேயே திக்குவாய் ஏற்படுகிறது என்பதுதான் பொதுவான கருத்து. ஒருவர் பேசுவது அவருக்கே திரும்பக் கேட்டு, அதை வைத்துப் பேச்சின் வேகத்தை முடிவு செய்யும் பின்னூட்ட (feed back) செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுகளாலேயே இது ஏற்படுகிறது.

திக்குவாய் ஏற்பட்டவர்களில் சில வகைகள் உண்டு. சில குழந்தைகளுக்குச் சிறு வயதில் திக்குவாய் இருக்கும். பின்னர் சரியாகிவிடும். சிலருக்குப் பதற்றம் அடையும்போது மட்டும் திக்குவாய் ஏற்படும். வேறு சிலருக்குக் கூட்டத்தில் பேசும்போது, உயர் அதிகாரிகளிடம் பேசும்போதும் திக்குவாய் ஏற்படும்.

நாளடைவில் வெளியிடங்களுக்குச் செல்வது, பேசுவது போன்ற விஷயங்களில் இவர்களுக்குப் பதற்றம் ஏற்படலாம் (social anxiety). இன்னும் சிலருக்கு இயல்பாகப் பதற்றம் இன்றிப் பேசும்போதும்கூடத் திக்குவாய் இருக்கும்.

பொதுவாகவே உடலையும் மனத்தையும் பிரிக்க முடியாது. பதற்றம் அதிகரிக்கும்போது திக்குவாய் அதிகரிக்கும். திக்குவாய் இருப்பவர்கள் பேச்சுப் பயிற்சி நிபுணரிடம் (Speech Therapist) பேச்சுப் பயிற்சி பெற வேண்டும். பதற்றம் அதிகமாக இருப்பவர்கள் மனநல ஆலோசனை பெறவேண்டும். குறிப்பாக மனதைப் பதற்றமில்லாமல் வைத்துக்கொள்ள, முதலில் தாழ்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும்.

அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று நினைத்தாலே பதற்றம் அதிகரிக்கும். திக்கிவிடுமோ என்று பயந்து பேசாமல் இருப்பது, முகத்தைப் பார்த்துப் பேசாமல் இருப்பது, கூச்சப்பட்டு வெளியிடங்களுக்குச் செல்லாமல் இருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பேசும்போது நிறைய நேரம் எடுத்துக்கொண்டு பேச வேண்டும். தன்னம்பிக்கையுடன் இடைவிடாமல் பயிற்சி செய்தால் திக்குவாயை வெல்லலாம்.



மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் முக்கியமான மருத்துவ சந்தேகங்களை தொடர்ந்து அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x