Last Updated : 18 Nov, 2021 03:07 AM

 

Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM

இயேசுவின் உருவகக் கதைகள் 59: இது புதிய கட்டளை!

இவ்வுலக வாழ்க்கை முடியும் முன்னர், முக்கியமான காரியங்களை எல்லாம் தன் சீடர்களுக்குக் கற்பித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இயேசு, தான் இறப்பதற்கு முந்தைய நாள் அவர்களுக்குப் புதிய கட்டளை ஒன்றைத் தருவதாகச் சொன்னார்.

பாஸ்கா விருந்துக்குப் பின் சீடர்களின் பாதங்களைக் கழுவி, ‘நான் செய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யத் தயாராக இருக்க வேண்டும்' என்று கூறிய பின் இயேசு, “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' எனும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றார்.

ஏன் இப்படி ஒரு புதிய கட்டளை?

“நான் உங்களை அன்பு செய்தது போல நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்” (யோவான் 13: 34, 35).

‘எதனைப் போல' என்பது மாறுகிறது. ‘மனிதர் அனைவரும் தங்களை அன்பு செய்கின்றனர். தங்களுக்குத் தேவையானவற்றில் அக்கறை காட்டுகின்றனர். தங்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர். தங்களைத் தாங்களே யாரும் துன்புறுத்திக் கொள்வதில்லை. தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென விரும்பி, அதற்கான வழிகளைத் தேடுகின்றனர்' என்றுதான் நாம் நினைக்கிறோம்.

தம்மையே அன்பு செய்தல்

ஆனால் ‘இது எல்லோருக்கும் உண்மை இல்லை' என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். அவர்கள் சொல்வது உண்மையே என்பதைச் சில வேளைகளில் நாம் நமது அனுபவத்தில் காண்கிறோம். சிலருக்குத் தங்களையே பிடிப்பதில்லை. அடிப்படையிலேயே தங்களிடம் குறைபாடுகள் இருப்பதாக இவர்கள் நினைக்கின்றனர். ‘நான் சரி இல்லை' என்பதே அவர்களின் கணிப்பு.

தங்களைத் தாங்களே அன்பு செலுத்த இயலாதோர் எப்படி இன்னொரு மனிதரை உண்மையாகவே அன்பு செலுத்த முடியும்? தாங்கள் செய்வதை உணர்ந்து வேண்டுமென்றே இன்னொரு சக மனிதனைத் துன்புறுத்துவோர் யாராக இருந்தாலும் அவர்களின் இதயத்தில் இதைத் தூண்டுகிற ‘தன் வெறுப்பு' இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.

எனவே ‘உன்னை நீ அன்பு செய்வதுபோல உன் சக மனிதனை அன்பு செய்' என்று சொல்வது சரியாகாது. எனவேதான் இதனை மாற்றி இன்னொன்றை முன்மாதிரியாகக் கொள்ளச் சொல்கிறார் இயேசு. “நான் உங்களை அன்பு செய்வதுபோல நீங்களும் பரஸ்பரம் அன்பு செய்யுங்கள்” என்று மாற்றுகிறார்.

யாருக்கும் எள்ளளவும் தீங்கு செய்யாத, தீங்கு நினையாத அவரை - நோயுற்றோரைக் குணமாக்கி, பாவிகளை மன்னித்து, ஒதுக்கப்பட்டவர்களோடு சேர்ந்து உணவு உண்டு, நன்மை தவிர வேறு எதுவும் ஒருபோதும் செய்யாத நல்லவரை - அவரின் பகைவர்கள் பொறாமையால், பகைமையால் கைது செய்து, இரவெல்லாம் துன்புறுத்தி, ஏளனம் செய்து, தூணில் கட்டி, கசையால் அடித்த பிறகும் திருப்தி அடையாமல், சிலுவையைத் தோளில் சுமத்திக் கல்வாரி வரை நடக்க வைத்து, அங்கே சிலுவையில் அறைந்து கொல்லவிருந்தார்கள். ஒருவர் மீது கொண்ட அன்பிற்காக தன் உயிரைத் தருவதைவிட மேலான அன்பு ஏதும் இல்லை என்பதை இயேசுவே ஒருமுறை சொல்லியிருந்தார். “தன் நண்பனுக்காகத் தன் உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறில்லை” (யோவான் 15: 13).

கடவுள் மீது கொள்ளும் அன்பு

புதிய கட்டளை என்று இயேசு சொன்னதைக் கேட்டதும் சீடர்களின் மனத்தில் என்ன தோன்றியிருக்க வேண்டும்? அற்ப மனிதர்களாகிய நமக்கு இத்தகைய அன்பு சாத்தியமா? இயேசுவைப் போல நம்மால் அன்பு செய்ய இயலுமா என்று அவர்கள் மலைத்திருக்க வேண்டும்.

இங்குதான் பழைய கட்டளைகள் இரண்டில் முதல் கட்டளையை இயேசு ஏன் விட்டுவிட்டார் என்ற கேள்விக்குப் பதில் இருக்கிறது. இறைவனை முழுமையாக அன்பு செய்யாவிட்டால், இப்படி தன்னையே தரும் அளவுக்கு, உள்ளதெல்லாம் தியாகம் செய்யும் அளவுக்கு, சக மனிதரை அன்பு செய்ய யாராலும் இயலாது. இயல்பாக உள்ள தன்னலத்தை வென்று தியாகங்களுக்குத் தயங்காத அன்பை சக மனிதருக்குக் காட்ட வேண்டுமானால், அதற்கான ஆற்றலை கடவுள் மீது கொண்டிருக்கும் அன்பே தர முடியும்.

எனவே ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

இயேசுவின் அன்பை நிறைவாகப் பெற்ற யோவான் எனும் அவரது முக்கிய சீடர் தான் எழுதிய திருமடலில் இதனைத் தெளிவாக விளக்கினார். “தம் சகோதர, சகோதரிகள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் துன்புறுவதைக் கண்டும் செல்வந்தர்கள் அவர்களுக்குப் பரிவு காட்டவில்லை என்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?” (1 யோவான் 3: 17). “கடவுளை அன்பு செய்வதாகச் சொல்லிக்கொண்டு தம் சகோதரர், சகோதரிகளை வெறுப்போர் பொய்யர்கள். தனது கண் முன்னேயுள்ள சகோதர சகோதரிகளிடம் அன்பு காட்டாதவர்கள் கண்ணுக்குப் புலப்படாத கடவுளை அன்பு செய்ய இயலாது” (1 யோவான் 4 : 20).

எனவே இயேசு தன் சீடர்களுக்குத் தந்த புதிய கட்டளை இறையன்பு, பிறர் மீதான அன்பு என்ற இரு கட்டளைகளையும் உள்ளடக்கி, நாம் சக மனிதருக்குக் காட்ட வேண்டிய அன்புக்கு எடுத்துக்காட்டாக இயேசு நம் மீது காட்டிய அன்பை முன்வைக்கிறது.

இந்தப் புதிய கட்டளைக்கு ஏற்ப வாழ்வது எளிது இல்லை என்றாலும், அதன்படி வாழ முயன்றவர்கள் எப்போதும் இருந்திருக்கின்றனர்.

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x