Last Updated : 18 Mar, 2016 12:00 PM

 

Published : 18 Mar 2016 12:00 PM
Last Updated : 18 Mar 2016 12:00 PM

என்னை நோக்கிப் பாயும் தோட்டா

இது கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிய கட்டுரை அல்ல. ஜேமி கில்ட் என்ற அமெரிக்கப் பெண்ணைப் பற்றியது. ஜேமி கில்ட்டைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு ஈழத் தமிழ்க் கவிஞர் சிவசேகரம் எழுதிய இந்தக் கவிதையை ஒருமுறை படித்துவிடுங்கள்:

துரோகி எனத் தீர்த்து

முன் ஒரு நாள் சுட்ட வெடி

சுட்டவனைச் சுட்டது

சுடக் கண்டவனைச் சுட்டது

சுடுமாறு ஆணை

இட்டவனைச் சுட்டது

குற்றம் சாட்டியவனை

வழக்குரைத்தவனை

சாட்சி சொன்னவனை

தீர்ப்பு வழங்கியவனை சுட்டது

தீர்ப்பை ஏற்றவனை சுட்டது

எதிர்த்தவனை சுட்டது

சும்மா இருந்தவனையும்

சுட்டது.

31 வயது ஜேமி கில்ட், துப்பாக்கி உரிமைச் செயல்பாட்டாளர்! என்னது துப்பாக்கி உரிமையா? துப்பாக்கிக்கு ஏது உரிமை, அதற்கு உயிரை எடுக்கத்தானே தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். சற்று விளக்கமாகச் சொன்னால் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமைக்காகப் போராடும் போராளி ஜேமி கில்ட்.

இந்தியா போன்ற நாடுகளில் உள்ளதுபோல் இல்லை அமெரிக்காவில். அங்கே துப்பாக்கி வைத்திருக்கும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகம். துப்பாக்கி வைத்திருப்பது, துப்பாக்கி வாங்குவது போன்றவற்றில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் சிலபல வேறுபாடுகள் இருந்தாலும் மிதமிஞ்சிதான் அங்கே துப்பாக்கி புழங்குகிறது. பெரியவர்களின் துப்பாக்கிக் கலாச்சாரம் இளைஞர்களிடமும் சிறுவர்களிடமும் மட்டுமல்லாமல் குழந்தைகளிடமும் பரவியிருக்கிறது.

2010-லிருந்து இந்த ஆண்டுவரை அமெரிக்கப் பள்ளிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். 2015-ல் அமெரிக்காவில் பயங்கரவாதிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட (மொத்தம் 19) குழந்தைகளின் கையில் துப்பாக்கி கிடைத்ததால் ஏற்பட்ட உயிரிழப்பு (21) அதிகம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் 13 குழந்தைகள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு இறந்துபோயிருக்கிறார்கள். குழந்தைகளால் சுடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 8.

இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது அமெரிக்காவில் ஊடுருவியிருக்கும் துப்பாக்கிக் கலாச்சாரத்தின் தீவிரம் நமக்குப் புரிகிறதல்லவா! இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறும்போதல்லாம் அவற்றுக்கு எதிராக மனித உரிமைகள் ஆர்வலர்கள் குரல்கொடுப்பார்கள். ஆனாலும், அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான தடை இன்னும் வரவில்லை. எங்கே தடை வந்துவிடுமோ என்ற பயத்தில் ‘துப்பாக்கி எனது பிறப்புரிமை’ என்ற ரீதியில் பலரும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமைக்காகப் போராடிவருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜேமி கில்ட்.

‘துப்பாக்கி உரிமை’க்காக அவர் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி, துப்பாக்கிக்கு ஆதரவாகத் தொடர்ந்து பதிவிட்டுவந்தார். துப்பாக்கியுடன் அவர் நிற்கும் படங்களைப் பார்த்தால் அந்தக் கால ஹாலிவுட் கௌபாய் படங்களின் கதாநாயகி போல இருப்பார். தனது 4 வயது மகனுக்கும் துப்பாக்கியைக் கொடுத்து, ‘துப்பாக்கி வைத்திருக்கும்போது என் மகனுக்கு மிகவும் பாதுகாப்பான உணர்வு ஏற்படுகிறது’ என்று பெருமிதமாக ஒரு புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

சரி, ஜேமிக்கு என்ன நடந்தது? இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு கவிதை வருகிறதல்லவா. அதில் சொல்லப்பட்டிருந்ததுதான் நடந்தது. கடந்த 8-ம் தேதி ஜேமி தனது மகனுடன் காரில் போய்க்கொண்டிருந்தார். பின் இருக்கையில் அவருடைய மகன் உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஜேமியின் .45 காலிபர் கைத்துப்பாக்கியும் இருந்தது. அந்தக் குழந்தை துப்பாக்கியை எடுத்து அம்மாவைச் சுட்டுவிட்டது.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுபோய் ஜேமியைக் காப்பாற்றிவிட்டார்கள் என்றாலும் இன்னமும் அவர் மருத்துவமனையில்தான் இருக்கிறார். இப்போது ஜேமியைக் கிண்டல் செய்து அவரது ஃபேஸ்புக்கில் ஏராளமான பதிவுகளைப் பலரும் இடுகிறார்கள். ஒருவர் இதுபோன்ற நிலையில் இருக்கும்போது கிண்டல் செய்வது மனிதத் தன்மை ஆகாது. எனினும், இந்தச் சம்பவம் ஜேமியை சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டும் என்று பலரும் நம்புகிறார்கள்.

குழந்தைகளுக்கு பொம்மைத் துப்பாக்கி கொடுப்பதே தவறு எனும்போது அமெரிக்காவில் இந்த அளவுக்குக் குழந்தைகளிடம் துப்பாக்கிகளை உலவ விட்டிருப்பதை என்னவென்று சொல்வது? துப்பாக்கி, பாதுகாப்பை அல்ல பாதுகாப்பின்மையைத்தான் ஏற்படுத்துகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையே இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x