Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பூரி உப்புவது ஏன்?

கொடைக்கானலுக்குச் சென்றிருந்தபோது, என் வாயிலிருந்து புகையாக வந்துகொண்டிருந்ததே ஏன், டிங்கு?

- டி. பொன்ராஜ், 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, வத்தலகுண்டு, திண்டுக்கல்.

ஐஸ் போட்டு ஜூஸ் குடிக்கும்போது, டம்ளரின் வெளிப்புறத்தில் முத்து முத்தாக நீர்த்துளிகள் உருவாகி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். காற்றில் உள்ள நீராவி, ஜில்லென்று இருக்கும் டம்ளர் மீது படும்போது, குளிர்ந்து நீராக மாறி முத்து முத்தாகக் காட்சியளிக்கிறது. அதே மாதிரிதான் குளிர்ப் பிரதேசத்தில் வெளிப்புறக் காற்று அதிகக் குளிர்ச்சியாக இருக்கும். நம் வாயிலிருந்து வெளியேறும் இளஞ்சூடான நீராவி, குளிர்க்காற்றுடன் கலந்து நீராக மாறுகிறது. நீராக மாறிய இந்த நுண்ணிய நீர்த்திவலைகள்தாம் நமக்குப் புகை போன்ற தோற்றத்தைத் தருகின்றன, பொன்ராஜ்.

பூரிக்குள் காற்று வந்தது எப்படி, டிங்கு?

- ரா. செந்தில், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நீர் ஊற்றிப் பிசைவதால் மாவில் நீர்ச்சத்து இருக்கிறது. அதிக வெப்பநிலையில் உள்ள எண்ணெய்யில் மாவைப் போடும்போது, மாவில் உள்ள நீர்ச்சத்து ஆவியாக மாறுகிறது. இந்த ஆவி அதிக அழுத்தத்துடன் வெளியேற முயலும்போது, மாவு மேல்நோக்கி உப்புகிறது. மேல் மாவுக்கும் அடி மாவுக்கும் இடையில் காற்று வெளியேற முடியாமல் அப்படியே அடைபட்டுவிடுகிறது. இதனால் பூரி உப்பலாக இருக்கிறது, செந்தில்.

மண்புழு எப்படி விவசாயிகளின் நண்பனாக இருக்க முடியும், டிங்கு?

- சி.சி. விஷ்வ துளசி, 4-ம் வகுப்பு, எம்.ஏ.எம். ஹைடெக் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மேட்டூர் அணை, சேலம்.

மண்புழுக்கள் தாவரங்களின் கழிவுகளைச் சாப்பிடுகின்றன. அவை வெளியேற்றும் கழிவுகளால் மண் சத்துகளைப் பெற்று வளமாகிறது, மிருதுவாகிறது. மண்புழுக்கள் மண்ணைத் துளைத்துச் செல்லும்போது, மண்ணில் காற்றோட்டம் அதிகமாகிறது. தண்ணீரும் மண்ணுக்குள் தங்குவதற்கு ஏற்றச் சூழல் உருவாகிவிடுகிறது. இதனால், தாவரங்களின் வேர்களுக்கு ஏற்ற சத்துகளும் நீரும் காற்றும் போதுமான அளவுக்குக் கிடைத்துவிடுகின்றன. அதனால்தான் மண்புழுக்களை, ‘உழவர்களின் நண்பர்கள்’ என்கிறார்கள் விஷ்வ துளசி.

பைனாப்பிள் மரத்தில் ஏன் ஒரே ஒரு பழம் மட்டுமே கிடைக்கிறது, டிங்கு?

- ஜி. இனியா, 5-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

அன்னாசி மரம் அல்ல. அது ஒரு குத்துச்செடி. ஒரு செடியில் பல பூக்கள் சேர்ந்து, ஒரே காயாக உருமாறும். ஒரு தாய்ச் செடியில் ஒரே ஒரு பழம் மட்டுமே கிடைக்கும். ஆனால், அந்தச் செடியில் பக்கவாட்டில் புதிய குருத்துகள் தோன்றும். அவற்றை வெட்டி, வேறு இடங்களில் நட்டு வைத்தால், புதிய செடிகளாக வளர ஆரம்பிக்கும், இனியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x