Last Updated : 12 Feb, 2016 12:19 PM

 

Published : 12 Feb 2016 12:19 PM
Last Updated : 12 Feb 2016 12:19 PM

மிரயா: D/o பிரியங்கா காந்தி

அந்த 15-ம் எண் ‘ஜெர்ஸி'யை அணிந்திருந்த‌ ஹரியாணா விளையாட்டு வீராங்கனையை ஒரு ஃபோட்டோவாவது எடுத்துவிட அரங்கில் பலரும் குவிந்திருந்தனர். பல‌ரும் தன்னைப் படம் எடுப்பதைப் பார்த்த அவரால் சரியாக விளையாட முடியவில்லை. சிறிது நேரத்தில் ஆட்டக் களத்தில் இருந்து வெளியே வந்து அமர்ந்தார். அவர் வேறு யாருமல்ல. சோனியாவின் பேத்தியும், பிரியங்காவின் மகளுமான மிரயா வதேரா. நேரு குடும்பத்தின் அடுத்த‌ பிரபலம்!

புதுச்சேரியில் கடந்த வாரம் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற‌ '42-வது சப் ஜூனியர் தேசியக் கூடைப்பந்து போட்டி'யில் பங்கேற்கத் தனது அம்மா பிரியங்காவுடன் அவர் புதுவைக்கு வந்திருந்தார்.

இப்போட்டியில் 25 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. சிறுவர் பிரிவில் 23 அணிகளும், சிறுமியர் பிரிவில் 22 அணிகளும் விளையாடின.

இந்தப் போட்டியில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி - காங்கிரஸ் தலைவி சோனியாவின் பேத்தியும், ராபர்ட் வதேரா - பிரியங்கா காந்தி மகளுமான‌ மிரயா பங்கேற்றார். கடற்கரை சாலையொட்டியுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

போட்டி தொடங்குவதற்கு முதல் நாளில் மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்புக்கு மிரயா சென்றார். வரிசையில் நின்று பணிகளை முடித்தார். முதல் நாள் தொடங்கி இறுதி நாள் போட்டிகள்வரை மிரயாவால் இப்போட்டி அதிமுக்கியத்துவம் பெற்றது.

"மிரயாவுக்கு கூடைப்பந்தில் அதிக ஆர்வம். தொடர்ந்து பயிற்சி பெற்றுவருகிறார். 8-ம் வகுப்புப் படிக்கும் இவர் தன‌து பள்ளி அணியில் இடம்பிடித்து மாநில அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளார்” என்கிறார் ஹரியாணா கூடைப்பந்து சங்கச் செயலர் தல்பீர் சிங் ஹராப். மிரயா தற்போது முதல் முறையாக தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கிறார் என்று சொல்லும் தல்பீர் சிங், இதர விளையாட்டு வீரர்களைப் போலவே அவரும் நடத்தப்படுகிறார் என்று தெரிவிக்கிறார். “தினமும் தனது திறனை மேம்படுத்தி வருகிறார். சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வர வாய்ப்புண்டு" என்றும் சொல்கிறார்.

அரங்கம் முழுக்க டெல்லி, புதுச்சேரி போலீஸார் சாதாரண உடையில் அமர்ந்திருக்க, மிரயாவைத் தொடர்புகொள்ள அனுமதி கேட்டபோது, 'பேட்டி வேண்டாம்' என்று உடனிருந்தோர் மறுத்துவிட்ட‌னர். மிரயா தடுப்பாட்டத்தில் விளையாடுகிறார். மீடியாவின் கண்கள் தன் மீது இருப்பதைத் தவிர்க்கவும், இயல்பாக இருக்கவும் மிரயா சிரமப்பட்டார்.

அவரது அம்மா பிரியங்கா இரவிலும், அதிகாலையிலும் கடற்கரையில் ‘வாக்கிங்' சென்றார். அத்துடன் ஆரோவில் அருகேயுள்ள கடைகளுக்கு ‘விசிட்' அடித்து சுற்றுலாப் பயணிகளுள் ஒருவரானார். தனது மகள் விளையாட்டைப் பார்க்க ஒருநாளாவது ஸ்டேடியம் வருவார் என எதிர்பார்த்தவர்களுக்கு மிஞ்சியது ‘எம்ப்டி பாஸ்கெட்!'

இப்போட்டியில் மிரயாவின் அணி 8-வது இடத்தைதான் பிடித்தது. போட்டியில் வெற்றி தோல்வியை விட பங்கேற்புதான் முக்கியம் என்கிறார்கள் இந்த வீராங்கனைகள்.

சரி தமிழ்நாடு அணி..? வெற்றியை நோக்கி ஓடும் ‘ரன்னர்ஸ்'!

அது மேட்டரு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x