Published : 18 Sep 2021 05:11 am

Updated : 18 Sep 2021 05:59 am

 

Published : 18 Sep 2021 05:11 AM
Last Updated : 18 Sep 2021 05:59 AM

சரிந்துவரும் சிறகுகள்

extinction-of-birds
இந்தியப் பாறு, படம்: டி.ஆர். சங்கர்ராமன்

ராம நாராயணன்

நாற்பது வருடங்களுக்கு முன்னர் வரை இந்தியாவில் பரவலாகக் காணப்பட்ட பாறுக் கழுகுகளின் எண்ணிக்கை 1990களில் வெகுவாகச் சரியத் தொடங்கியது.

1998ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள கேலா தேவ் தேசியப் பூங்காவில் இப்பறவையினத்தின் சரிவு முதலில் ஆவணப்படுத்தப்பட்டது. இப்பகுதியில் 1988இல் சுமார் 353 ஜோடி பாறுக் கழுகுகள் இருந்ததாகவும், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பாதியாகச் சரிந்ததும் பதிவுசெய்யப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் தேசியப் பூங்காவில் தென்பட்ட மொத்த பாறுக் கழுகுகளும் முற்றிலுமாக அழிந்துபோயின. இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். வெண்முதுகுப் பாறு, இந்தியப் பாறு ஆகியவற்றின் தொகை 1991 முதல் 2000 வரை 92 சதவீதம் சரிந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


இறந்துபோன கால்நடைகள், மற்ற உயிரினங்களை உண்டு வாழ்பவை இக்கழுகினங்கள். உலகில் அதிக அளவிலான கால்நடைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில், இத்தகைய இறைச்சிக் கழிவுகளை உண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மை யாக வைத்துக்கொள்ள இக்கழுகுகள் பேருதவி புரிகின்றன.

பாறுக் கழுகுகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் சரிவுக்கான காரணத்தைக் கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டன. கால்நடைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட டைக்ளோபினாக் என்கிற வலிநிவாரணியே காரணமெனக் கண்டறியப்பட்டது. தொற்று நோய்களால் உயிரிழந்த கால்நடைகளின் சடலங்களை உண்டபோதுகூட எந்த ஒரு பாதிப்பும் அடையாமல் இருந்த இக்கழுகுகள், வலிநிவாரணிகள் செலுத்தப்பட்ட கால்நடை களின் சடலங்களைத் தின்றபோது இறந்து போயின. இதைத் தொடர்ந்து இந்திய அரசு 2006ஆம் ஆண்டு இந்த மருந்தைக் கால்நடை களுக்குப் பயன்படுத்தத் தடை விதித்து, மாற்று மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன.

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்பட்ட இப்பறவை, தற்போது வனப்பகுதிகளில் மட்டுமே தென்படுகிறது. காட்டுயிர்களின் சடலங்களில் இதுபோன்ற வலிநிவாரணிகளின் எச்சங்கள் இல்லாததால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் இருக்கும் பாறுக் கூட்டங்கள் பேரழிவிலிருந்து தப்பியிருக்கின்றன. தமிழ்நாட்டில் சில நூறு பாறுக் கழுகுகள் சத்தியமங்கலம், மாயாறு பகுதிகளில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்பேரழிவிற்குப் பின் தற்போது இப்பறவையின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் அவற்றின் எண்ணிக்கை பழைய நிலைமைக்குத் திரும்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.

30 ஆண்டுகளுக்கு மேலாகச் சூழலியலா ளர்கள், தன்னார்வலர்கள், அரசுத் துறையினர் எனப் பலருடைய தொடர் முயற்சியாலும், ஒத்துழைப்பினாலும் இப்பறவையினத்தின் அழிவை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளது. பறவை குறித்த கணக்கெடுப்புகளை அவ்வப்போது நடத்தி, அவற்றின் எண்ணிக்கையை மதிப்பிடுவது, அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற மிகவும் அவசியம் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

பறவை ஆராய்ச்சி அறிக்கை

பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதல், காடுகளும் மற்ற இயற்கையான வாழிடங்களும் அழிதல் முதலிய நிகழ்வுகளால் உலகிலுள்ள பல உயிரினங்கள் எண்ணிக்கையில் சரிந்தும், அற்றுப்போயும் வருகின்றன. மனிதச் செயல் பாடுகளால் இயற்கையில் நிகழும் மாற்றங்களை அளவிட, வாழ்விடங்களையும் அவற்றில் வாழும் உயிரினங்களையும் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். பல சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் அவற்றில் வாழும் உயிரினங்களையும் கண்காணிப்பதன் மூலம் அங்கே ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிட்டு, உயிரினங்களின் நிலையை அறிந்து, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, சரியான நேரத்தில் முன்னெடுக்க முடியும். பாறுக் கழுகுகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியாவில் தென்படும் சுமார் 1,300 வகையான பறவைகளின் தற்போதைய நிலை என்ன? அவற்றின் எண்ணிக்கை நிலையாக இருக்கிறதா, சரிந்துவருகிறதா என்கிற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் சமீபத்தில் வெளியான ஒரு ஆராய்ச்சி அறிக்கை அமைந்துள்ளது. இந்தியப் பறவைகளின் பாதுகாப்பு நிலையை மதிப்பிடும் நோக்கில் ‘State of India’s birds’ என்கிற அறிக்கையைப் பல ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு, அரசு சாரா அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கின்றன.

சுமார் 15,000 பறவை ஆர்வலர்கள் ebird இணையதளத்தில் சமர்ப்பித்த ஒரு கோடி அவதானிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ள இவ்வறிக்கையில் 867 பறவை யினங்களின் வாழிடப் பரவல், பாதுகாப்பு நிலை, நீண்ட கால - தற்போதைய எண்ணிக்கையின் போக்கு (Long term and current trend), பாதுகாப்பு நிலை போன்றவை மதிப்பிடப்பட்டுள்ளன.

பறவைகளின் நிலை

சிட்டுக்குருவிகளின் நிலை குறித்து அண்மைக் காலமாக மக்கள் மத்தியில் நிலவுகிற கேள்விகளுக்கு இவ்வறிக்கை விடையளிக்கிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சில நகரங்களில் குறைந்திருந்தாலும், இந்திய அளவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சீராக இருப்பது தெரியவந்துள்ளது. அலைபேசி கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்ய எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தேசியப் பறவையான மயில்களும் எண்ணிக்கையில் அதிகரித்துவருகிறது.

உள்ளூர் / வலசை வரும் நீர்வாழ் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துவருவதாகவும், குறிப்பாக வலசை வரும் கரையோரப் பறவைகளின் (Shorebirds) எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கிறது. உள்ளூர் நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக வெகுவாகச் சரிந்துள்ளது. நீர்வாழ் பறவைகளின் வாழிடங்களான ஏரி, கண்மாய், குளங்கள், சதுப்புநிலங்கள் போன்றவை தொடர்ந்து அழிக்கப்பட்டுவருவதையும், பாதுகாக்கத் தவறியிருப்பதும் இந்த அறிக்கை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

கழுகுகள் உட்பட இரைகொல்லிப் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துவருவதாகவும், அதிலும் குறிப்பாகத் திறந்த புல்வெளி நிலங்களைச் சார்ந்து வாழும் இரைகொல்லிப் பறவையினங்கள் வெகுவாகச் சரிந்துவருவதாகவும் அறிக்கை கூறுகிறது. புழுக்களையும் பூச்சிகளையும் மட்டுமே உண்டு வாழ்ந்துவரும் பறவைகளின் எண்ணிக்கையும் சரிந்துவருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் ஓரிடவாழ் பறவையினங்கள் தொடர் சரிவைச் சந்தித்து வருவதாகவும், பச்சை உள்ளான், சிறிய மின்சிட்டு, வானம்பாடியைப் போன்று பொது வாகக் காணப்படக்கூடிய பறவைகள்கூட எண்ணிக்கையில் குறைந்துவருவதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. 58 வகைப் பறவையினங்கள் நீண்டகாலமாகத் தீவிர சரிவைச் சந்தித்து வருவதாகவும், 77 வகை பறவையினங்கள் மிதமான சரிவைச் சந்தித்து வருவதாகவும், 114 வகை பறவையினங்கள் சீரான நிலையில் இருப்பதாகவும் பட்டியலிடப் பட்டுள்ளது.

இந்தியப் பறவைகள் பலவற்றின் நிலையை, மக்கள் அறிவியல் திட்டங்களில் தொகுக்கப் பட்ட தரவுகளை ஆராய்ந்து இந்த அறிக்கை முதன்முதலாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பலவகைப் பறவைகளின் எண்ணிக்கை குறித்த அடிப்படைத் தரவுகளை (baseline data) இந்த அறிக்கை கொண்டுள்ளதால் ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்போர், அரசுத் துறையினர் பறவை பாதுகாப்புத் திட்டங்களை வகுக்க உதவியாக இருக்கும்.

என்ன செய்யப்போகிறோம்?

பறவைகளைப் பாதுகாக்கத் தனிமனிதர் களாக நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஏரிகள், புல்வெளிகள், சதுப்புநிலங்களை ஒட்டிய பகுதிகளில் பயணித்திருப்போம். ஆனால், அந்த நிலப்பரப்பு களின் இருப்பைப் பெரிதும் கண்டுகொள்ளாமல் பரபரப்பாகக் கடந்திருப்போம். ஐந்து நிமிடம் நின்று அங்கே வாழும் பறவைகளை நிதான மாகப் பார்க்கத் தவறியிருப்போம். பல கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்து வந்து நமது வீட்டருகில் பசியாறிக்கொண்டிருக்கும் தூர தேச விருந்தினர்களைக் கண்டுகளிக்கத் தவறியிருப்போம். முதலில் நம் வீட்டருகில் அமைந்துள்ள பூந்தோட்டங்கள், நீர்ப்பரப்புகள், சதுப்புநிலங்கள், புல்வெளிகள், புதர் காடுகள் போன்ற நிலப்பரப்புகளைத் தெரிந்துகொள் வோம். அடிக்கடி அப்பகுதிகளுக்குச் சென்று அங்கே வரும் பறவைகளை இனங்காணலாம்.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள பறவை ஆர்வலர் குழுக்களுடன் இணைந்து, பறவைகளை இனங்கண்டு தரவுகளை ‘e-bird’ போன்ற இணையதளங்களில் பதிவேற்றலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பறவைகளைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், அவற்றின் வாழிடங்களையும் நாம் கண்காணிப்போம். பறவைகளின் வகைகளும் அவற்றின் எண்ணிக் கைகளும் ஒவ்வொரு நிலப்பகுதிகளின் நிலையையும் நலனையும் வெளிப்படுத்தும். ஆகவே தொடர்ந்து பறவைகளையும் அவற்றின் வாழிடங்களையும் கண்காணித்து, குறிப்பெடுத்து வந்தால் அங்கே ஏற்படும் மாற்றங்களைப் பதிவுசெய்ய முடியும். அந்தப் பதிவுகளை நாமே வைத்துக்கொள்ளாமல் ebird முதலான மக்கள்சார் அறிவியல் திட்டங்களில் நமது அவதானிப்புகளைப் பகிர வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல, நம்முடைய தரவுகள் உயிரினங்களையும் இயற்கைச் சூழலை யும் பாதுகாக்க பல்வேறு வகைகளில் உதவும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: nram.efi@gmail.com
கேலா தேவ் தேசியப் பூங்காபாறுக் கழுகுபாறுக் கழுகுகளின் எண்ணிக்கைவெண்முதுகுப் பாறுஇந்தியப் பாறுExtinction of birdsIndian vulturesபறவை ஆராய்ச்சி அறிக்கைடைக்ளோபினாக்சிட்டுக்குருவி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x