Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

நல்ல பாம்பு 01: ஏன் இந்த வெறுப்பு?

மா. ரமேஸ்வரன்

சிறுவயதில் நண்பர்களோடு விளையாடிவிட்டு ஒரு மரத்தின் அடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தபொழுது, அம்மரத்தின் மெல்லிய கிளையில் அமர்ந்திருந்த ஓணானை என் நண்பன் ஒருவன் பார்த்துவிட்டான். அடுத்த நொடி நாங்கள் அனைவரும் கற்களைப் பொறுக்கி அதன் மீது வீச ஆரம்பித்தோம். அது அங்குமிங்குமாக மறைய முயன்றது. ஆனால், நாங்கள் அதை நாலா பக்கமும் சூழ்ந்துகொண்டோம். கடைசியில் அந்த ஓணான் எப்படியோ எங்கள் கண்களிலிருந்து தப்பியோடியது.

நாங்கள் அதை விரட்டியதற்குக் காரணம் ஓணான் கடித்தால் நஞ்சு என்கிற தவறான நம்பிக்கைதான். அது மட்டுமல்லாமல் கடவுள் தாகத்திலிருந்தபொழுது சிறுநீர் கழித்துக் கொடுத்ததாம். அப்போது பறவைகளைப் போல ஊர்வனவற்றைப் பார்த்தபொழுது மகிழ்ச்சி ஏற்பட்டதில்லை, பயமே மேலோங்கியிருந்தது. அதேபோல் பாம்பு கடித்தால் மரணம் நிச்சயம் என்கிற மூடநம்பிக்கை; ‘பாம்புராணி’ எனப்படும் அரணைக்கு ஏன் அப்படிப் பெயர் வந்தது தெரியுமா? பாம்புக்கே நஞ்சை கொடுத்தவை அவை என்கிற கற்பிதம்; பல்லி தவறுதலாக உணவில் விழுந்து, அதை நாம் சாப்பிட்டுவிட்டால் மயக்கம், வாந்தி எனப் பல உடல் உபாதைகள் வரும் என்கிற ஆதாரமற்ற கருத்து – இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

திருப்புமுனைப் புத்தகம்

சிறுவயதில் ஊர்வன பற்றி இச்சமூகம் என்னிடம் ஏற்படுத்தியிருந்த பிம்பம் இதுதான். என் பாடப்புத்தகங்களில் ஊர்வன பற்றி எதுவுமில்லை.நீதிக்கதைகள், சினிமா, பெரியவர்கள் என அனைவருமே ஒன்றுபோல் ஊர்வனவற்றைப் பழித்தார்கள். அதற்குப் பின்னர் நான் படித்த முனைவர் எம்.வி. இராசேந்திரன் எழுதிய ‘நம் நாட்டுப் பாம்புகள்’ என்கிற புத்தகம் பாம்புகள் மீதான பயத்தைப் போக்கி, அவற்றின் உண்மைநிலையை அறிய உதவியது. பிற்காலத்தில் நான் ஊர்வனவற்றைச் சார்ந்த தேடுதலை மேற்கொள்வதற்கு இந்தப் புத்தகம் எனக்கு உந்துதலாக இருந்தது.

இந்திய ஊர்வனவற்றில் பாம்புகளைத் தவிர வேறு எவற்றுக்கும் நஞ்சு இல்லை. அதிலும் காணப்படும் 330-க்கும் மேற்பட்ட பாம்பினங்களில் 70 இனங்கள் மட்டுமே நஞ்சுடையவை. இவற்றில் நான்கு வகையான பாம்புகளே (நல்ல பாம்பு, கட்டு வரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன்) மனிதர்கள், இதர உயிரினங்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் அளவிற்கான நஞ்சைக் கொண்டிருக்கின்றன. இவை நஞ்சைக் கொண்டிருப்பதற்கான காரணம் இரையைப் பிடிப்பதற்கு, இரையைச் செரிமானம் செய்வதற்கு, தற்பாதுகாப்புக்கு மட்டுமே. பாம்புகள் ஊனுண்ணிகள். இவை உணவுச்சங்கிலியின் முக்கியக் கண்ணியாக இருந்து உயிரினப்பன்மையை நிலைநிறுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன.

அற்புத உலகம்

ஊர்வன எனக்கு அறிமுகமான காலம் தொடங்கி 30 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பாலூட்டிகள், பறவைகள், இதர உயிரினங்கள் மேல் விழுந்திருக்கும் வெளிச்சம், ஏனோ ஊர்வன மீது விழவே இல்லை. இன்றைக்கும் பெட்ரோல் விலை உயர்வு, தீவிரவாதம் போன்றவற்றுக்கு உவமையாகப் பாம்பைக் கேலிச்சித்திரமாக வரைகிறார்கள். ‘மனிதனைப் பழிவாங்கும் பாம்பு’, ‘சாப்பாட்டில் பல்லி விழுந்து குழந்தை கள் மயக்கம்’, ‘அரணை கடித்துச் சிறுமி பலி’ என்பது போன்ற செய்திகளைப் படிக்கும் பொழுதும் கேட்கும்பொழுதும் ஊர்வன குறித்த அறிவும் சிந்தனையும் நம்மிடமே வளரவில்லை என்கிற வருத்தம் மேலோங்குகிறது.

ஊர்வனவற்றின் இயல்பைநாம் அறியாததே, அவற்றின்மீது தேவையற்ற பயம் கொள்வதற்கும், கற்பிதங்களை நம்பி வெறுப்பதற்கும் துன்புறுத்து வதற்கும் அடிப்படைக் காரணம். பாம்பு உள்ளிட்ட ஊர்வனவற்றை நெருங்கி அறியும்போது, அவற்றின் நிலை குறித்த விழிப்புணர்வு மேம்பட்டு நமக்கும் அவற்றுக்கும் இடையிலான இடைவெளி குறையும். அது மட்டுமல்லாமல் ஊர்வன உலகம் எவ்வளவு ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்தது என்பதையும் அறிய முடியும்.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

*****

மா. ரமேஸ்வரன்

திருநெல்வேலியைச் சேர்ந்த ஊர்வன ஆராய்ச்சியாளர் மா. ரமேஸ்வரன். ஊர்வனங்கள் சார்ந்து ஆய்வு மேற்கொள்வதுடன் விழிப்புணர்வுக் கல்வியைப் பரவலாக்குவதற்காக ‘ஊர்வனப் பள்ளி’ என்கிற அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறார். ஒளிப்படங்களாக ஆவணப்படுத்துதல், எழுதுதல், காணொலியாகப் பதிவுசெய்தல் எனப் பல வகைகளில் ஊர்வனவற்றைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டுவருபவர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x