Published : 24 Jun 2014 10:00 AM
Last Updated : 24 Jun 2014 10:00 AM

காட்டுக்கு ஆயிரம் கண்கள்!

கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வனவியல், வனவிலங்கியல் துறை மாணவர்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய வனஉயிர் ஆராய்ச்சி நிறுவனம் (Wildlife Institute of India) வகுப்பு எடுத்துவருகிறது. அதன்படி இந்தியக் காடுகளைப் பாதுகாக்கும் முறை, புலிகள் பாதுகாப்பு செயல்திட்டம் தொடர்பாகக் களவகுப்பு எடுக்க, அந்தப் பல்கலைக்கழக மாணவர்களைப் பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு அழைத்து வந்திருந்தார் இந்தியக் காட்டுயிர் ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த விஞ்ஞானி ரமேஷ்.நமக்கும் அழைப்பு வந்தது.

செயற்கை கண்கள்

காட்டுக்கு ஆயிரம் கண்கள் உண்டு என்பது ஒரு புறம் இருக்க, இந்த முறை செயற்கைக் கண்களும் நம்மைக் கண்காணிப்பதாகச் சொன்னார், உடன் வந்த களப் பணியாளர்: தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள். ஆம், காட்டில் உள்ள ஒவ்வொரு புலியையும் பிரத்யேகமாகக் கண்காணிக்கிறது பெரியாறு புலிகள் சரணாலயம். ஒரு புலி பிறந்தது தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் நடமாடுகிறது என்பதைத் தானியங்கி கேமரா பதிவுகள் மூலம் கண்காணித்துப் புலிகளின் பாதுகாப்பு, இங்கு உறுதி செய்யப்படுகிறது.

புலிக்கு உடல் ரேகை!

ஆரம்பத்தில் புலிகளின் கால் தடங்களை (Pug mark) அடிப்படையாகக்கொண்டு புலி கணக்கெடுப்பு நடந்தது. ஆனால், அந்தக் கணக்கெடுப்பு பெரும்பாலும் தவறான முடிவுகளையே தந்தது. சில இடங்களில் புலியின் எச்சம் (Scat), ரோமம் ஆகியவற்றைச் சேகரித்து மரபணு பரிசோதனை மூலம் புலிகளைக் கணக்கெடுத்தனர். ஆனால், ஒரு சோதனை மாதிரிக்கு ஐந்து முதல் ஏழாயிரம் ரூபாய் வரை செலவானது. மேலும், ஒரே புலி பல்வேறு இடங்களில் எச்சம் இடுவதால் அவற்றைச் சேகரித்துப் பரிசோதிப்பது கூடுதல், வீண் செலவை ஏற்படுத்தியது.

இதனால், 2000-களின் மத்தியில் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் தானியங்கி கேமரா பதிவுகளின் அடிப்படையில் புலிகளைக் கண்காணிக்க முடிவு செய்தது. மனிதர்களின் கைரேகைகளைப் போலவே புலிகளின் தோலில் இருக்கும் வரிகள், ஒவ்வொரு புலிக்கும் வேறுபடும். இதன்மூலம் ஒவ்வொரு புலியையும் தனித்தனியாக அடையாளம் கண்டு கணக்கிடலாம். அவற்றின் செயல்பாடுகள், பழக்கவழக்கங்கள், இருப்பிடம் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கலாம்.

நாங்கள் நுழைந்த காட்டுக்குள் சுமார் 150 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. புலியின் இரு பக்கவாட்டு உடல் பகுதிகளையும் படம் எடுக்க வசதியாக எதிரெதிராக இருக்கும் இரண்டு மரங்களில் பெரும்பாலான கேமராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள். இந்தக் கேமராக்கள் இடையே ஏதேனும் உருவம் கடந்து சென்றால் சென்சார் தொழில்நுட்பம் மூலம் தானியங்கி முறையில் படம் எடுக்கப்படும். அதன்படி, ஒரு புலி இதைக் கடக்கும்போது அதன் உடலின் இரண்டு பக்கவாட்டுப் பகுதிகளும் முழுமையாகப் படம் எடுக்கப்படும். இவை தவிர, வீடியோ கேமராக்களும் இன்னும் சில ரகசியக் கேமராக்களும் மர உச்சிகளிலும் மரப் பொந்துகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றனவாம். யாரும் காட்டுக்குள் சட்டவிரோதமாக நடமாடுவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு.

தொடர் கண்காணிப்பு

இதுகுறித்து பேசிய சரணாலயத்தின் பாதுகாப்பு உயிரியலாளர் பாலசுப்பிரமணியம், “ஒரு புலி இப்படிப் படம் எடுக்கப்பட்டுவிட்டால் ஏற்கெனவே படம் எடுக்கப்பட்ட புலிகளின் படங்களுடன் ஒப்பிட்டு, புதிய புலியாக இருந்தால் அது பட்டியலில் சேர்க்கப்படுகிறது. மேலும், அந்தப் புலியின் படம் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்தியாவில் உள்ள மற்றப் புலி சரணாலயங்களுக்கு அனுப்பப்படுகிறது. இது புலி கணக்கெடுப்புக்கு உதவுவதுடன், அந்தப் புலி தனது இருப்பிடத்தை வேறு சரணாலயங்களுக்கு மாற்றிக்கொண்டாலும், அதைக் கண்காணிக்க உதவியாக இருக்கும்.

அத்துடன் ஒரு புலியின் படத்தை வைத்து, அது எந்தெந்த நாட்களில் எங்கெல்லாம் நடமாடியது? இப்போது எங்கு நடமாடிக் கொண்டிருக்கிறது? கடைசியாக அந்தப் புலி கேமராவில் பதிவானது எப்போது என்பதை எல்லாம் துல்லியமாகப் பதிவு செய்கின்றனர். சில மாதங்கள், சில ஆண்டுகளாக அந்தப் புலி தட்டுப்படவில்லையா? என்ன ஆனது அந்தப் புலிக்கு? வேறு சரணாலயத்துக்கு இடம்பெயர்ந்து விட்டதா? இல்லை, இறந்து விட்டதா? அப்படி எனில், அதன் உடல் எங்கே? இறப்பு இயற்கையானதா? வேட்டையாடப்பட்டதா? விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? எல்லைப் பிரச்சினையில் இன்னொரு புலியால் கொல்லப்பட்டதா? அல்லது இரைவிலங்கு கொன்றுவிட்டதா என்றெல்லாம் விரிவாக விசாரித்து, அறிக்கை தயார் செய்கிறார்கள் அதிகாரிகள். தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஒவ்வொரு புலியையும் கறாராகக் கணக்கு காட்டியாக வேண்டும்” என்றார்.

பாதுகாப்புக்கு உறுதி!

மேற்கண்ட கேமராக்களில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை பதிவுகள் பெறப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பம் மூலம் இதுவரை பெரியாறு புலிகள் சரணாலயத்தில் மொத்தம் 33 புலிகளின் இருப்பு பதிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவை தவிர மேலும் 15 புலிகள் இருக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள்.

கேமரா கண்காணிப்பின் மூலம் புலிகளின் எண்ணிக்கையை மட்டுமல்ல... அவற்றின் பாதுகாப்பை யும் உறுதி செய்யலாம். காட்டில் வேட்டை, மரக் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்பாடுகளையும் கண்காணித்துத் தடுக்கலாம். ஒரு புலி நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது இன்னொரு விலங்கால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாலோ, அந்தப் புலிக்குச் சிகிச்சை அளிக்கவும் மேற்கண்ட முறை பயன்படும்.

இது புலிக் காடு!

நாங்கள் சென்ற காட்டுக்குள் கடமான் (Sambar), காட்டெருது (Indian guar), காட்டுப் பன்றிகள் ஏராளமாக நடமாடிக் கொண்டிருந்தன. மந்தி ஒன்று அத்தி இலைகளைப் பறித்துத் தின்றுகொண்டே, கீழேயும் நிறைய பறித்துப்போட்டது. கடமானுக்கான உணவு அது. அதேபோல் புலியைப் பார்த்துவிட்டாலும் அது பயங்கரமாகக் கத்தி எச்சரிக்கை ஒலி எழுப்பி மானை உசுப்பிவிடும். நட்புணர்வு ஒப்பந்தம் அது.

மேற்கண்ட உயிரினங்கள் இருந்தால்தான், அது புலிக் காடு. புலிக்குப் பிடித்தமான உணவு கடமான். அடுத்து புள்ளிமான். அதுவும் இல்லை என்றால் காட்டு எருது, காட்டுப் பன்றி, மந்தி, இன்ன பிற. ஒரு புலிக்கு வாரத்துக்கு ஒரு கடமான் தேவை. அதுவே கர்ப்பமாக இருக்கும் அல்லது குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் புலி என்றால் வாரத்துக்கு இரண்டு கடமான்கள் தேவை. எனவே, உயிர் வாழ ஒரு புலி கடுமையாக உழைக்கிறது. சில மனிதர்களைப் போலப் புலி ஒருபோதும் உழைக்காமல் பிழைப்பதில்லை!

பின்குறிப்பு: கடந்த பத்தாண்டுகளுக்கு மேலான எனது கானகப் பயணத்தில், வழக்கம்போல் இந்த முறையும் புலி காணக் கிடைக்கவில்லை!

காட்டுக்குள் நுழையும் மனிதர்கள் அநேகமாக எந்த உயிரினத்தையும் உடனடியாக நேரில் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால், நம்மை ஆயிரம் உயிரினங்கள் மறைந்திருந்து பார்த்திருக்கும். அதனால்தான் காட்டுக்கு ஆயிரம் கண்கள் உண்டு என்பார்கள்.

வனத்துக்குள் சென்று வந்த பிறகு, சில கேமரா பதிவுகளையும் வீடியோ பதிவுகளையும் காட்டினார் பெரியாறு புலிகள் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் ஆய்வாளர் வைரவேல். சுவாரசியமான பதிவுகள் அவை. புலி ஒன்று மும்முரமாக ஆங்காங்கே சிறுநீர் தெளிப்பு (Urinal marking) மூலம் தனது ஆதிக்க எல்லையை வரையறை செய்துகொண்டிருந்தது. இதன் மூலம் வேறு எந்தப் புலியும் அதன் எல்லைக்குள் வர முடியாது. வந்தால் கடுமையாக மோதும். தோற்கும் புலி பின்வாங்க வேண்டும், இல்லை இறக்க வேண்டும்.

கரடி ஒன்று பளீர் என்று அடித்த ஃபிளாஷ் வெளிச்சத்தைக் கண்டு பீதியடைந்து, தலைதெறிக்க ஓடியது. ஒன்றும் புரியாமல் குழப்பம் அடைந்து, சந்தேகத்துடன் திரும்பத்திரும்ப வந்து கேமராவைப் பார்த்துச் சென்றது ஒரு சிறுத்தை. ஃபிளாஷை கண்டு சினமுற்ற யானை ஒன்று, கேமராவை உடைத்துத் தூக்கி எறிந்தது. கடந்த காலங்களில் கேமராவை உடைத்துப் பிலிம் ரோலை உருவி எறிந்த யானைகள், சமீபமாகச் சிப்பை உருவி எடுத்துக் கடித்துத் துப்புகின்றன என்று அதிகாரிகள் சொன்னபோது, யானைகளின் நுண்ணறிவை நினைத்து வியப்பாக இருந்தது! இவை தவிர, கருஞ்சிறுத்தை (இது தனி வகையல்ல, நிறமி செயலின்மை (Melanistic) காரணமாகக் கறுப்பாகப் பிறக்கின்றன), காட்டுப் பூனை, சிறுத்தைப் பூனை, கையடக்க அளவிலான சருகு மான் (Mouse deer), கேளை மான் (Barking deer), மர நாய், புனுகுப்பூனை என அரிய உயிரினங்கள் கேமரா பதிவுகளில் காணக் கிடைத்தன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x