Published : 01 Feb 2016 12:03 PM
Last Updated : 01 Feb 2016 12:03 PM

பெயர் சிக்கலில் பாபா ராம்தேவ்!

பாபா ராம்தேவ், இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. யோகாசனப் பயிற்சியை பலருக்குப் பயிற்றுவித்ததன் மூலம் பிரபலமானவர். சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியும் இவரது குழுவோடு இணைந்து யோகா பயிற்சி செய்ததை அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்.

பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு களுக்குப் போட்டியாக சுதேசி முறையில் உள் நாட்டிலேயே பல பொருள்களைத் தயாரித்து அதை சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாபா ராம்தேவ். இத்தகைய முயற்சிக்கு பின்புலமாக செயல்படுபவர் இவரது நம்பிக்கைக்குரிய நபர் பால்கிருஷ்ணன்.

`பதஞ்சலி’ என்ற பிராண்டு பெயரில் நெஸ்லே நிறுவனத்தின் நூடுல்ஸுக்குப் போட்டி யாக இவரது நிறுவனமும் தயாரித்து சந்தைப் படுத்தியுள்ளது. இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு எவ்வித பக்கவிளைவுகளை யும் ஏற்படுத்தாதவை என்ற பிரசாரத்தில்தான் பதஞ்சலி தயாரிப்புகள் சந்தைக்கு வந்துள்ளன.

நூடுல்ஸ் மட்டுமின்றி கார்ன் பிளேக்ஸ், சாக்கோ பிளேக்ஸ் என பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கு போட்டியான தயாரிப்புகளும் அழகு சாதன பொருள்களில் சோப்பு, ஷாம்பூ, கூந்தல் தைலம், முகத்தில் சுருக்கத்தைப் போக்கும் கிரீம் என இந்நிறுவனத் தயாரிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இவை தவிர மூட்டு வலி தைலம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த தைலம் மற்றும் லேகியங்களையும் இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

வெறுமனே விளம்பரம் மூலம் விற்பனை செய்தால் அனைத்து மக்களையும் சென்றடை யாது என்பதால் சங்கிலித் தொடர் நிறுவனமான பியூச்சர் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொண் டுள்ளது பதஞ்சலி. இதனால் இந்நிறுவனத் தயாரிப்புகள் அனைத்தும் பிக் பஜார் விற்பனை யகங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

எல்லாம் சரி, பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக அதேசமயம் பக்கவிளைவு இல்லாத தயாரிப்புகளை மக்கள் வரவேற்பார்கள் என்பதெல்லாம் சரியான அணுகுமுறையே.

ஆனால் இந்நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு பெயர்தான் பெரும் சிக்கலை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிறுவனத்தின் `புத்ரஜீவக்’ எனும் லேகியம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி யுள்ளது. இந்த பெயரே (புத்திரன் என்றால் ஆண் என்று அர்த்தம்) பொய்யான நம்பிக் கையை ஏற்படுத்தக்கூடியது. எனவே பெயரை மாற்ற வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் சுகாதார மற்றும் சட்ட அமைச்சகம் இது தவறான பிரசாரம் என கருத்து தெரிவித்து அது தொடர்பாக முதல்வருக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த லேகியம் தொடர்பாக மாநில சுகாதாரத் துறையும் சட்ட அமைச்சகமும் தீவிர விசாரணையை மேற்கொண்டன. இந்த பிரச்சினை கடந்த ஆண்டு எழுந்தபோது இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மாநில அரசு மருத்துக் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் ஆயுஷ் பி.டி. சமோலி தலைமையில் மூன்று பேரடங்கிய குழுவை அமைத்து இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. இக்குழு இதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது.

பெயருக்கும் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை பிறக்குமா என்பதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது இதில் பயன்படுத்தப் படும் மூலிகையின் தாவரவியல் பெயர் புத்ரஜீவ ராக்ஸ்பர்கி என்றும் அதனால் இதற்கு புத்ரஜீவ லேகியம் என பெயர் சூட்டப்பட்டதாக பாபா ராம்தேவ் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் சமோலி குழு அறிக்கை வெளியான பிறகு சுகாதாரத்துறை மற்றும் சட்டத் துறையிடம் இது தொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசு கேட்டது. ஆனால் இக்குழுவோ இந்த பெயர் தவறு என அறிக்கை அளித்துள்ளது.

இதுவரையில் இப்படி ஒரு லேகியம் விற்பனையாகிறது என்று பலருக்கும் தெரிந் திருக்காது. இதுபோன்ற சர்ச்சை கிளம்பியுள் ளதால் அது மேலும் பிரபலமாகியுள்ளது.

பெயரை மாற்றுவாரா ராம்தேவ். அல்லது சர்ச்சை தொடருமா? பார்ப்போம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x