Published : 15 Aug 2021 07:19 AM
Last Updated : 15 Aug 2021 07:19 AM

பெண்கள் 360: கணவனாக இருந்தாலும் சம்மதம் அவசியம்

ஒலிம்பிக் வீராங்கனைக்குக் காத்திருந்த அதிர்ச்சி

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் இந்தியாவின் சார்பில் 4X400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ரிசர்வ் போட்டியாளராகப் பங்கேற்கச் சென்றார் தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர். போட்டிகள் முடிந்து நாடு திரும்பியவுடன் அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள குண்டூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. சக வீராங்கனை சுபா வெங்கடேசனுடன் ஆகஸ்ட் 7 அன்று திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தபோது இருவருக்கும் பொதுமக்களின் ஆரவார வரவேற்பு கிடைத்தது. அந்த நேரத்தில்தான் தனலட்சுமி தனக்குப் பெரும் துணையாக இருந்த அக்காவின் மரணச் செய்தியைத் தெரிந்துகொண்டார். அங்கேயே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு அவர் அழுத ஒளிப்படம் ஊடகங்களில் வெளியானது. ஜூன் 12 அன்று தனலட்சுமி டோக்கியோவில் இருந்தபோதே அவருடைய அக்கா உடல்நலக் கோளாறு காரணமாக மரணமடைந்தார். ஆனால், தன்னுடைய இளைய மகள் ஒலிம்பிக்கில் கவனத்தைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக மூத்த மகள் மரணமடைந்த செய்தி தனலட்சுமியின் காதுகளுக்குச் சென்று சேராத வண்ணம் தாய் உஷா பார்த்துக்கொண்டார். தந்தை சேகர். தனலட்சுமி சிறுமியாக இருந்தபோதே இறந்துவிட்டார்.

பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி ‘குண்டூர் எக்ஸ்பிரஸ்’ என்று அறியப்படும் அளவுக்கு அதிவிரைவாக ஓடக்கூடியவர். தேசிய அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ஒலிம்பிக்குக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் 23.26 நொடிகளில் 200 மீட்டர் தொலைவு ஓடி பி.டி.உஷாவின் 23 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். 100 மீட்டர் போட்டியில் 11.39 நொடிகளில் ஓடி டுட்டி சந்தைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பங்கேற்றுத் திரும்பிய பெருமிதத் தருணத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் உடன்பிறப்பை இழந்த வலியால் தவித்தார் தனலட்சுமி.

கணவனாக இருந்தாலும் சம்மதம் அவசியம்

திருமண உறவுக்குள் நிகழ்ந்தாலும் பாலியல் உறவுக்குச் சம்பந்தப்பட்ட இருவரின் சம்மதமும் அவசியம் என்று அண்மையில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கேரள மருத்துவர் ஒருவர் தன்னுடைய மனைவியின் கோரிக்கையை ஏற்று விவாகரத்து வழங்கிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார். கேரள உயர் நீதிமன்றம் அந்த விவாகரத்தை உறுதிசெய்து தீர்ப்பளித்தது. “ஒருவர் தன்னுடைய மனைவியை வற்புறுத்திப் பாலியல் உறவுகொள்வதை அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்று கருதி அதன் அடிப்படையில் அவருக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கலாம். இந்தியாவில் திருமண உறவுக்குள் பாலியல் வல்லுறவு குற்றமல்ல என்பது இதற்கான தடை ஆகாது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 375-ம் பிரிவு பெண்ணின் ஒப்புதலைப் பெறாமல் உறவுகொள்வதைப் பாலியல் வல்லுறவு என்று வரையறுக்கிறது அதே நேரம் திருமண உறவில் மனைவியின் ஒப்புதலைப் பெறாமல் உறவுகொள்வது இந்தியாவில் குற்றமல்ல. நீண்ட காலமாகத் திருமண உறவுக்குட்பட்ட பாலியல் வல்லுறவைச் சட்டப்படி குற்றமாக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகளும் பாலினச் சமத்துவச் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்திவருகின்றனர். திருமண உறவில் இருக்கும் பெண்களுக்கும் தம் உடல் மீது உரிமை உண்டு. கணவன் ஒரு பெண்ணின் வாழ்க்கைத்துணைதானே தவிர உடைமையாளர் அல்ல என்பதே பெண்ணியவாதிகளின் வாதம். நீண்ட சட்டப் போராட்டமும் சமூக-அரசியல்ரீதியான சிந்தனை மாற்றமும் தேவைப்படும் இந்த விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை முக்கியமான முன்னகர்வாகப் பார்க்கலாம்.

தலைமுடியா தங்கத்தைத் தீர்மானிக்கிறது?

ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தை வெல்வதே அரிதிலும் அரிதான சாதனை. தென்கொரியாவைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை ஆன் சான் (An San) நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வில்வித்தை வீராங்கனை எனும் சாதனையைப் படைத்துள்ளார்.

போட்டி முடிந்த பிறகு தாய்நாடு திரும்பிய ஆன் சானுக்குக் கிடைத்தவை பாராட்டுகள் மட்டுமல்ல; விமர்சனங்களும்தாம். அவரது குட்டையான தலைமுடியே விமர்சனத்துக்குக் காரணம். பலரும் அவரைப் ‘பெண்ணியவாதி’ என்று சமூக ஊடகங்களில் சாடினர். தென்கொரியாவின் ஆண்கள் பலர் பெண்ணியம் என்பதே ஆண்குலத்துக்கு எதிரானது என்று கருதுகின்றனர். ஒருவரைப் பெண்ணியவாதி என்று அழைப்பதன் மூலம் அவரை ஆண்களை வெறுப்பவர் என்று அடையாளப்படுத்துவதாக நினைக்கின்றனர். குட்டையான தலைமுடியை வைத்துக்கொள்வது பெண்களின் புறத்தோற்றம் சார்ந்த கட்டமைப்புகளுக்கு எதிரான பெண்ணியவாதிகளின் முன்னெடுப்பாக 2018இல் தொடங்கப்பட்டது. இது ஆண்களுக்கு எதிரான செயலாக விமர்சிக்கப்பட்டது. ஆன் சான் தலைமுடியின் அளவு சார்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டதற்கு இந்தப் பின்னணியும் காரணம். அதே நேரம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஆன் சானுக்கு ஆதரவாக, தாங்கள் குட்டையான தலைமுடியுடன் இருக்கும் ஒளிப்படத்தை வெளியிட்டுவருகின்றனர். சிலர் ஆன் சானால் ஈர்க்கப்பட்டு தமது தலைமுடியை வெட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x