Published : 05 Aug 2021 12:15 PM
Last Updated : 05 Aug 2021 12:15 PM

கலீல் ஜிப்ரான் சொன்ன குட்டிக் கதைகள்

தொகுப்பு: ஷங்கர்

முறிந்த சிறகுகள், தீர்க்கதரிசி நூல்களால் உலகம் முழுவதும் புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான கலீல் ஜிப்ரான் இருபதாம் நூற்றாண்டில் எளிய மக்களின் வாழ்க்கைப் பார்வை மீதும் தாக்கம் செலுத்திய மெய்ஞானியாகப் போற்றப்படுகிறார். அவரது முக்கியமான நூல்களில் ஒன்றான The Madman: His Parables and Poems நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட குட்டிக்கதைகள் இவை. எளிமையாகத் தோற்றம் தரும் இந்தக் கதைகள் நாம் காணும் உலகம் குறித்த சிரிப்பை வைத்திருப்பவை. பெரும்பாலும் நம்மால் கண்டுகொள்ளப்படாத இன்னொரு வாழ்க்கை சாத்தியத்தின் வழியை நோக்கிக் கைகாட்டுபவை.

சோளக்கொல்லை பொம்மை

ஒரு நாள் வெயிலில் நின்றுகொண்டிருக்கும் சோளக்கொல்லை பொம்மையைப் பார்த்து, “யாரும் வராத இந்த வயலில் தனியாக நின்றுகொண்டிருப்பது உனக்குச் சிரமமாக இல்லையா" என்று கேட்டேன். இன்னொருவரை அச்சுறுத்துவதென்பது ஆழமான மகிழ்ச்சியை அளிப்பது; அது நீடித்திருக்கவும் கூடியது. அதனால் எனக்கு சலிப்பே வரப்போவதில்லை என்று கூறியது. ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு, ஆமாம் உண்மைதான். அந்த மகிழ்ச்சியை நானும் அறிவேன் என்றேன்.

“வைக்கோலால் திணித்த உடலைக் கொண்டவர்களால்தான் அந்த உண்மையான மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்" என்று சோளக்கொல்லை பொம்மை பதில் அளித்தது.

சோளக்கொல்லை பொம்மை இந்தப் பதிலால் என்னைப் பெருமைப்படுத்தியதா, சிறுமைப்படுத்தியதா என்று புரியாமல் அதைவிட்டு நீங்கினேன்.

ஒரு ஆண்டு கழிந்தது. சோளக்கொல்லை பொம்மை அதற்குள் தத்துவஞானியாகிவிட்டது. நான் அப்போது அதைக் கடந்து போனபோது சோளக்கொல்லை பொம்மையின் தொப்பிக்குக் கீழே இரண்டு காகங்கள் கூடுகட்டத் தொடங்கியிருந்தன.

வெட்டியான்

என்னுடைய இறந்த சுயம் ஒன்றைப் புதைப்பதற்காக இடுகாட்டுக்குப் போயிருந்தேன். அங்கிருந்த வெட்டியான் என்னைப் பார்த்து, இங்கே சடலங்களைப் புதைக்க வருபவர்களில் உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது என்றான். வெட்டியானின் புகழ்ச்சிக்கு நன்றி சொல்லிவிட்டு, ஏன் உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதென்றேன்.

“ஏனென்றால் இங்கே வருபவர்கள் எல்லாம் அழுதபடி வருகின்றனர். அழுதபடி செல்கின்றனர். நீ மட்டும் வரும்போது சிரித்துக்கொண்டே வருகிறாய். போகும்போதும் சிரித்தபடி செல்கிறாய்"

ஏழு முகமூடிகளைத் தொலைத்தேன்

நான் எப்படி பித்து கொண்டவனாக ஆனேன் என்று கேட்கிறாய். இப்படித்தான் அது நடந்தது. ஒரு நாள், கடவுள்களில் நிறைய பேர் பிறப்பதற்கு முன்னால், நான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்தேன். எனது எல்லா முகமூடிகளும் திருடப்பட்டதைக் கண்டுகொண்டேன். நானே செய்த ஏழு முகமூடிகள் அவை; அந்த ஏழு முகமூடிகளை அணிந்துதான் ஏழு வாழ்க்கைகளை வாழ்ந்தேன். முகமூடிகள் திருடுபோனதால் முகமூடி அணியாமல் கூட்டமான தெருக்களில் அலைந்து தேடினேன். திருடர்கள், திருடர்கள், சாபத்துக்குள்ளான திருடர்கள் என்று கத்தித் திரிந்தேன். ஆண்களும் பெண்களும் என்னைப் பார்த்துச் சிரித்தனர். சிலர் என்னைப் பார்த்துப் பயந்து அவர்கள் வீட்டுக்குள் போய்ப் பூட்டிக்கொண்டனர்.

நான் சந்தைப் பகுதியை எட்டியபோது, ஒரு இளைஞன் ஒரு வீட்டின் மீது ஏறி நின்று, அவன் பைத்தியக்காரன் என்று கத்தினான். அவன் முகத்தைப் பார்ப்பதற்காக நான் முகத்தை உயர்த்தினேன். முதல் முறையாக சூரியன் எனது வெறும் முகத்தின் மீது முத்தமிட்டது. சூரியன் மேல் கொண்ட அன்பினால் எனது ஆத்மா பற்றி எரிந்தது. எனக்கு இனி முகமூடிகள் தேவையில்லை. நான் ஆராதனை கிடைத்ததுபோல உரத்துக் கூவினேன். எனது முகமூடிகளைத் திருடிய அந்தத் திருடர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்; ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

இப்டித்தான் நான் பித்தன் ஆனேன்.

எனது பித்தில் நான் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உணர்ந்தேன். அது தனிமையின் விடுதலை மற்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டியதிலிருந்து கிடைத்த விடுதலை. நம்மைப் புரிந்துகொள்பவர்கள் நம்மில் ஏதோ ஒன்றை அடிமைப்படுத்துகிறார்கள். ஆனால், எனது பாதுகாப்பு குறித்து நான் பெருமிதமெல்லாம் கொள்ளக்கூடாது. சிறையில் இருக்கும் ஒரு திருடன்கூட மற்ற திருடனைவிட பாதுகாப்பாக இருக்கிறான்.

நரியின் விருந்து

காலை புலர்ந்தது. ஒரு நரி தனது நிழலைப் பார்த்துப் பெருமிதமாகச் சொன்னது.

‘இன்று மதிய விருந்தாக எனக்கு ஒட்டகம் கிடைக்கும்’.

அப்போதிருந்து ஒட்டகங்களைத் தேடித் தேடி அலைந்தது. பின்மதியமாகிவிட்டது. நினைத்த மாதிரி விருந்து அமையவில்லை. திரும்பவும் நரி தனது நிழலைப் பார்த்துச் சொன்னது.

‘சரி, இப்போதைக்கு ஒரு எலி கிடைத்தால் போதும்.’

இரண்டு அறிஞர்கள்

அஃப்கார் நகரத்தில் இரண்டு கல்விமான்கள் இருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் இகழ்ந்தபடி சமயம் கிடைக்கும்போதெல்லாம் பரஸ்பரம் தாழ்த்துவதில் இன்பம் கண்டனர். ஒருவர் கடவுள் நம்பிக்கையாளர்; இன்னொருவர் இறைமறுப்பாளர்.

ஒருநாள் இரண்டு பேரும் சந்தையில் பார்த்து பேசத் தொடங்கினார்கள். இருக்கும் கடவுளைப் பற்றி ஒரு கல்விமான் பேச, இல்லாத கடவுளைப் பற்றி இன்னொருவர் பேச பெரும் சர்ச்சையாகி நெடுநேரத்துக்குப் பின்னர் பிரிந்துசென்றனர்.

அன்று மாலை, இறைவன் இல்லை என்று மறுத்துப் பேசிய கல்விமான் ஆலயத்துக்கு வந்து சொரூபத்துக்கு முன்னால் முழந்தாள் இட்டு வணங்கினார். அதே மாலை இறை நம்பிக்கையாளரான கல்விமானோ தன்னிடமிருந்த புனித நூல்களை எல்லாம் எரிக்கத் தொடங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x