Published : 25 Jul 2021 03:13 am

Updated : 25 Jul 2021 06:52 am

 

Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 06:52 AM

சமூகத்துக்குச் சிகிச்சை அளித்த முத்துலட்சுமி

muthu-lakshmi

இன்றைய பெண்களுக்குக் கிடைத்தி ருக்கும் சில வசதிகள் குறித்துச் சிலாகித்துப் பேசப்படுகிறது. இந்தச் சொற்ப வசதிகளும் கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் பெண்களுக்கு எட்டாக்கனி யாகவே இருந்தன என்பது நாம் அறியாத நிஜம். சமூகவெளியில் பெண்கள் அனு மதிக்கப்பட்டிராத அந்தக் காலத்தில், தடைகளை எதிர்த்துக் கடுமையாகப் போராடித்தான் பெண்கள் வெளியே வந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் முத்துலட்சுமி.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதுக்கோட்டை போன்ற அதிகம் வளர்ச்சி பெற்றிராத ஊரில் அவர் வளர்ந்தார். பெண்கள் சார்ந்து அன்றைக்கு முற்போக் காகச் சிந்திந்த நாராயணசாமிக்கு மகளாக முத்துலட்சுமி பிறந்திருந்தாலும், அவருடைய தாய் இசைவேளாளர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டார். 1902இல் புதுக்கோட்டை மாகாண அளவிலான மெட்ரிக் தேர்வில் தேறிய பத்துப் பேரில் ஒரே பெண்ணாக இருந்தார். அவருடைய முதல் சாதனைப் பட்டியல் இப்படித்தான் தொடங்கியது.


படிப்புத் தாகம்

பெண்களுக்கான பள்ளிக்கல்வியே சாதனையாகக் கருதப்பட்ட நிலையில், உயர்கல்வி என்பது பெருங்கனவாகவே இருந்தது. இண்டர்மீடியேட் படிக்க அவர் விரும்பினார்.

பெண்களுக்கென இண்டர்மீடியேட் கல்லூரி இல்லாததால், ஆண்களுக்கான கல்லூரிக்கே அவருடைய தந்தை விண்ணப்பித்தார். முதலில் பாலினத்தைக் கூறி மறுக்கப்பட்ட வாய்ப்பு, அடுத்ததாக அவருடைய தாயின் சாதியைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டது. முத்துலட்சுமியும் அவருடைய தந்தையும் அயர்ந்துவிடாமல் மாகாண அரசு அதிகாரிகளிடமும் புதுக்கோட்டை மாகாண அரசரிடமும் விண்ணப்பித்துப் போராடியதன் விளைவாக, அனுமதி கிடைத்தது. கல்லூரியில் ஒரே பெண்ணாக இருந்ததால் மூன்று புறமும் அடைக்கப்பட்ட கூண்டு போன்ற அமைப்பில், மாணவர்களுடன் கலக்காமல் அவர் உட்கார வைக்கப்பட்டார்.

அவருடைய படிப்புத் தாகம் அத்துடன் நிறைவு பெறவில்லை. 1907இல் ‘மதராஸ் மருத்துவக் கல்லூரி’யில் சேர்ந்தார். தங்கள் வகுப்புகளில் பெண்களுக்கு அனுமதி யில்லை என மறுத்த பல ஆங்கிலேயேப் பேராசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்று, சிறப்புத் தகுதியுடன் மருத்துவக் கல்வியை முத்துலட்சுமி நிறைவுசெய்தார். சிறு வயதிலேயே திருமணம் செய்தாக வேண்டுமென்கிற உறவினர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலை மீறியே, அவருடைய கல்விப் பயணம் இவ்வளவு காலம் தொடர்ந்தது.

மருத்துவச் சேவை

‘மதராஸ் மருத்துவக் கல்லூரியில் படித்த முதல் பெண்’, ‘முதல் தென்னிந்தியப் பெண் மருத்துவர்’ என்று தகவல் பிழையுடன் அவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. உண்மையில் அவருக்கு முன்னதாக மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சில பெண்கள் படிப்பை நிறைவுசெய்து, மருத்துவராகப் பணியாற்றியும் இருக்கிறார்கள். அவருக்கு முன்னர் அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் கிறிஸ்தவப் பெண்களாக இருந்தார்கள். முத்துலட்சுமி படித்து முடித்த காலத்தில்தான் மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழக மருத்துவப் பட்டம் வழங்கப்பட்டது. அந்த வகையில் ‘பல்கலைக்கழக மருத்துவப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்’ என்கிற அடைமொழி முத்துலட்சுமிக்குப் பொருந்தும்.

முத்துலட்சுமி மருத்துவராவதற்கும் பிற்காலத்தில் புற்றுநோய் மருத்துவத்துக்கான சிறப்பு மருத்துவ மனையான ‘அடையாறு புற்றுநோய் நிறுவன’த்தை உருவாக்குவதற்கும் இருவர் காரணமாக அமைந்தார்கள். டைஃபாய்டால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முத்துலட்சுமியின் அம்மா சந்திரம்மாளுக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய அமெரிக்க மருத்துவர் வான் ஆலன் முதலாமவர், புற்றுநோயால் இளம் வயதிலேயே காலமான தங்கை சுந்தராம்பாள் இரண்டாமவர்.

முன்னேற்றத்தின் முதுகெலும்பு

மருத்துவராகச் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்த முத்துலட்சுமி பிற்காலத்தில் பல முன்னோடிச் சட்டங்களை இயற்றுவதிலும் பங்களித்தார். நாட்டிலேயே சட்டமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட இரண்டாம் பெண் உறுப்பினர் முத்துலட்சுமி (1927இல்). சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ‘தேவதாசி முறை ஒழிப்பு மசோதா’, ‘குழந்தைத் திருமணத் தடை மசோதா’ போன்றவை அவருடைய முக்கியப் பங்களிப்புகள். கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருந்த காலத்தில், தென்னிந்தியப் பெண்களின் நிலை மோசமாகவும் கேட்பாரற்றும் இருந்தது. அந்தப் பின்னணியில் பெண்களின் சமூக மேம்பாட்டுக்கு இந்தச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்களித்தன.

அடிப்படையில் காந்தியவாதியான முத்துலட்சுமி தன் காலத்தைத் தாண்டி சிந்திப்பவராக இருந்தார். அதேநேரம் தீவிர முற்போக்காளர் என்று அவரை வரையறுத்துவிட முடியாது. சட்டமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மசோதா தொடர்பான விமர்சனங்கள், ஏற்படுத்தச் சாத்தியமுள்ள பின்விளைவுகள் சிலவற்றை அவர் முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருக்க வில்லை. அதேநேரம் பெண்களின் நிலையை முன்னேற்ற தன் வாழ்நாள் முழுக்க அர்ப்பணிப்புடன் அவர் பாடுபட்டார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மதம், சடங்குகளின் பெயரில் பெண்களுக்கு எதிராக வலியுறுத்தப்பட்ட ஒடுக்குமுறைகளைச் சட்டரீதியாகக் களைவதற்காகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருந்தார். பல வகைகளில் தான் ஒரு முதல் பெண்ணாக இருக்கிறோம் என்கிற பெருமையைப் பெரிதாகக் கருதாமல், சமூகத்தை அனைத்துப் பெண்களுக்குமானதாக மாற்றுவதற்காகக் கடைசிவரை மன உறுதியுடன் அவர் செயல்பட்டது முன்னுதாரணம் அற்றது.

மருத்துவர் முத்துலட்சுமியின் 135ஆம் பிறந்த நாள்: ஜூலை 30

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

***

புறக்கணிக்கப்பட்ட போராட்ட வரலாறு

மருத்துவர் முத்துலட்சுமியைப் பற்றி மட்டுமல்லாமல், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களின் போராட்ட வாழ்க்கை குறித்து விவரிக்கிறது ஆங்கில இதழாளர் கவிதா எழுதியுள்ள ‘லேடி டாக்டர்ஸ்’ நூல் (வெஸ்ட்லேண்ட் நான்ஃபிக்ஷன் வெளியீடு). இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான ஆனந்திபாய், இந்தியாவுக்குள்ளேயே மருத்துவம் படித்த முதல் பெண் காதம்பினி, குழந்தைத் திருமணத்திலிருந்து வெளியேறி மருத்துவரான ருக்மாபாய், குழந்தைக் கைம்பெண்ணாக இருந்து பிற்காலத்தில் மருத்துவரான ஹைமாவதி, இந்தியாவின் முதல் பெண் மாநிலத் தலைமை மருத்துவரான மேரி பூனன் லூகோஸ் ஆகியோரின் வாழ்க்கையையும் சாதனைகளையும் இந்த நூல் மூலம் தெரிந்துகொள்ளலாம். இவர்களில் ருக்மாபாயும் முத்துலட்சுமியும் பெண்கள் சந்தித்த ஒடுக்குமுறைகளைத் தாண்டி, சாதி சார்ந்தும் தடைகளை எதிர்கொண்டவர்கள்.
கடந்த நூற்றாண்டின் தொடக்கம்வரை பெண் மருத்துவர்கள் ‘லேடி டாக்டர்’ என்கிற அடைமொழியுடன் சற்று எள்ளல் தொனியுடனே அழைக்கப்பட்டுவந்தனர். அந்த எள்ளல் தொனியைத் துடைத்தெறியும் வகையில் அவர்கள் தகர்த்த தடைகள், முன்னோடி முயற்சிகளை இந்த நூல் பதிவுசெய்துள்ளது. அன்றைக்குப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சில வேலைகளைத் தாண்டி, மருத்துவத் தொழிலிலும் முத்திரை பதிக்க வாசல் திறந்துவைத்தவர்கள் இந்தப் பெண்கள். இந்தியா முதல் பெண் அலோபதி மருத்துவரைப் பெற்று 135 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நம் வரலாற்றிலும் பாடப்புத்தகங்களிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களின் வாழ்க்கையைக் கூறி, இந்தத் தலைமுறைக்கு உத்வேகம் ஊட்டுகிறது இந்த நூல்.

Lady Doctors: The Untold Stories of India's First Women in Medicine, Kavitha Rao, Westland Non fiction


முத்துலட்சுமிMuthu lakshmiமருத்துவச் சேவை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x