Published : 07 Jul 2021 03:30 am

Updated : 07 Jul 2021 17:19 pm

 

Published : 07 Jul 2021 03:30 AM
Last Updated : 07 Jul 2021 05:19 PM

தமிழும் நானும்

tamil-and-me
ஓவியம்: லலிதா

முதன் முதலில் அந்தச் சொல் எனக்கு அறிமுகமானது இங்கிலாந்தில். எங்கே வைத்துக் கேட்டேன் என்று நினைவில்லை. ஏனோ கேட்டவுடன் வந்து என்னோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்துக்கொண்டேன். தமிழ். இப்படியும் ஒரு சொல்லா? இது ஊரின் பெயரா அல்லது ஆளின் பெயரா? ஒருவேளை தின்பண்டமாக இருக்குமோ?

தெரிந்தவர்களிடம் கேட்டபோது அது ஒரு மொழி, போப் என்றார்கள். வியந்துபோனேன். இப்படி ஒரு மொழியா? எந்த நாட்டில் இதைப் பேசிக்கொள்கிறார்கள்? இதைப் பேசும் மக்கள் எப்படிப்பட்டவர்கள்? ஏன் என் பாடப் புத்தகத்தில் இதைப் பற்றியெல்லாம் எதுவுமே இல்லை?


அந்தச் சின்னஞ்சிறிய சொல் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் வளர ஆரம்பித்தது. பெயரிலேயே இவ்வளவு சுவையை, இவ்வளவு ஈர்ப்பை, இவ்வளவு புதுமையைக் கொண்டிருக்கும் ஒரு மொழியை நான் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? இந்த எண்ணம் உருவான பிறகு என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. தமிழ் எங்கே கற்றுக்கொடுக்கிறார்கள் என்று தேடி விரைவில் ஒரு வகுப்பைக் கண்டுபிடித்து, அன்றே அதில் மாணவனாகச் சேர்ந்துகொண்டேன்.

ஆரம்பமே சவால்தான். தமிழ் கற்றுக்கொள்வது இருக்கட்டும், முதலில் தமிழ் என்னும் சொல்லே வாயிலிருந்து வரவில்லை. அந்த ‘ழ’ என்னை ஒரு வழி செய்துவிட்டது. சுழற்றோ சுழற்று என்று நாக்கை மேலும் கீழும் எவ்வளவு சுழற்றினாலும் பலனில்லை. ட்டாமில், ட்டமில், ட்மில். அவ்வளவுதான், அதற்குமேல் முடியவில்லை. நானா சோர்ந்துபோவேன்? நடக்கும்போது, குளிக்கும்போது, பாட்டு கேட்கும்போது, தேவாலயத்தில் கண்களை மூடி அமர்ந்திருக்கும்போது என் உதடுகள் மந்திரம்போல் அந்த ஒற்றைச் சொல்லை உருட்டிஉருட்டி விளையாடிக்கொண்டிருக்கும்.

போப், உனக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு மொழியை உன்னால் கற்றுக்கொள்ள முடியுமா என்று நண்பர்கள் கேட்டபோது, முடியும் என்றேன். சரி, கற்றுக்கொண்டு என்ன செய்யப் போகிறாய் என்று அவர்கள் திருப்பிக் கேட்டபோது, தெரியாது என்றேன்.

எப்போது விடியும், எப்போது வகுப்புத் தொடங்கும் என்று காத்திருப்பேன். உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் என் உயிரோடு மெய்யாக ஒன்று கலந்தன. ஒவ்வோர் எழுத்தும் புத்தகத்திலிருந்து எழுந்து வந்து என்னைத் தழுவிக்கொண்டதைப் போல உணர்ந்தேன். வளைந்தும் நெளிந்தும் இருந்த எழுத்துகளை எழுதிப் பார்த்தபோது எழுதுவதுபோல அல்ல, வரைவது போலவே உணர்ந்தேன்.

எழுத்துகள் ஒன்று சேர்ந்து சொல்லாக மாறுவதை அதிசயமாகப் பார்த்தேன். சொற்கள் ஒன்று சேர்ந்து வாக்கியமாக நீண்டபோது என் மகிழ்ச்சியும் நீண்டு சென்றது. நான் தமிழ் மாணவன். எனக்குத் தமிழ் எழுத வரும். தமிழ் பேச வரும் என்று பார்ப்போரிடம் எல்லாம் உற்சாகமாக அறிவித்துக்கொண்டேன். ஒருவரும் கேட்காவிட்டாலும் நானே முன்வந்து சொன்னேன். உங்களுக்கும் சொல்லிக்கொடுக்கட்டுமா நண்பா?

அதன்பின் எல்லாமே மாறிப்போனது. எல்லோருக்கும் ரிவர் தெரிய, எனக்கு மட்டும் நதி தெரிந்தது. எல்லோரும் டீச்சர் என்று ஒரு குரலில் சொல்லும்போது, நான் ஆசிரியர் என்று ராகம் இழுத்தேன். மம்மியும் டாடியும் அப்பா, அம்மாவாக மலர்ந்துவர, என் ஹவுஸ் அழகிய வீடாக மாறியது. பறவைகளைத் தமிழ்ப் பெயரிட்டு அழைத்தபோது அவை மேலும் அழகாகத் தெரிந்தன. இங்கிலாந்து வானில் தமிழ் மேகத்தையும் தமிழ் நட்சத்திரங்களையும் கண்டு குதூகலம் அடைந்தேன். அதோ கதிரவன். அதோ மாடு. இதோ மக்கள். இதோ உலகம். இதோ என் இதயம். இதோ என் மொழி. ஒரு நல்ல நாளில் என்னுடைய காட், கடவுளாக மாறிப்போனார்.

மாற வேண்டியது ஒன்றுதான். ஜார்ஜ் உக்ளோ (ஜி.யு.) போப் ஆகிய நான் ஒரு தமிழனாக மாற வேண்டும். ஆங்கிலேய ஆசிரியர்களிடம் தமிழ் கற்கும் மாணவனாக இருக்கும் நான், தமிழரிடமிருந்து நேரடியாகக் கற்கும் மாணவனாக உயர வேண்டும். நான் விரும்பும் தமிழ் என் தமிழாக மாற வேண்டும். இது என் மொழி என்று ஒரு தமிழனைப் போல் பெருமிதத்தோடு நான் முழங்க வேண்டும்.

அதற்கு ஒரு வழிதான் உள்ளது. என் காதுகளில் தமிழ் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். என் இதயத்தைத் தமிழ்க் காற்றால் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். இலக்கியத்தில் நான் கண்ட தமிழ்க் காளையை, தமிழ்க் கதிரவனை, தமிழ்க் கிளியை, தமிழ்க் கனியை என் கண்கள் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். தமிழ் நிலத்தைத் தீண்டாமல் தமிழைத் தீண்ட முடியாது.

எங்கிருந்தும் கற்கலாம் என்றாலும், தமிழ் மண்ணில் அமர்ந்து கற்கும்போதுதான் நெஞ்சில் பதியும் திருக்குறள். எங்கிருந்தும் பாடலாம் என்றாலும், தமிழர்களோடு இணைந்து பாடும்போதுதான் நாவெல்லாம் இனிக்கும் திருவாசகம். மணிமேகலையும் புறநானூறும் நாலடியாரும் பழமொழியும் எங்கும் கிடைக்கும் என்றாலும், தமிழ் வாழும் இடத்தில் வாழ்ந்து பாடம் கேட்கும்போதுதான் ஒவ்வொன்றும் உயிர்பெற்று எழும்.

ஒரு பெருங்கனவோடு எனது 19ஆவது வயதில் வந்து இறங்கிய என்னை, ஒரு நண்பனைப் போல் ஆரத் தழுவி வரவேற்றது தமிழ்நாடு. கண்களில் வழியும் நீரோடு தமிழையும் தமிழரையும் தமிழ்நாட்டையும் தழுவிக்கொண்டேன். எங்களை இனி யாரும் பிரிக்க முடியாது.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com


தமிழும் நானும்தமிழ்Tamil and meசின்னஞ்சிறிய சொல்தமிழ்க் காற்றுதமிழ் மண்தமிழ்க் காளைதமிழ்க் கதிரவன்தமிழ்க் கிளிதமிழ்க் கனி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x