Published : 30 Jun 2021 04:15 am

Updated : 30 Jun 2021 10:39 am

 

Published : 30 Jun 2021 04:15 AM
Last Updated : 30 Jun 2021 10:39 AM

கதை: பூக்களை எண்ண முடியுமா?

tamil-story

சூரியன் உதித்து நேரமாகிவிட்டது. பெரிய கிண்ணத்துடன் வெளியே வந்தாள் தன்வி. அவளுடன் வந்த செம்பூனை வானத்தைப் பார்த்து, மியாவ் என்றது. நேற்று இரவு பெய்த மழையில் தெரு முழுவதும் ஈரம். வாசலில் தேங்கிக் கிடந்த நீரில் அரளிச் செடி அழகாகப் பிரதிபலித்தது.

தன்வி அரளிச் செடியைப் பார்த்தாள். செடி சற்று சாய்ந்திருந்தது. பூக்கள் மலர்ந்திருந்தன. இதழ்களின் விளிம்பில் இளஞ்சிவப்பும் கீழ்ப் பகுதியில் சிவப்பும் கொண்ட செவ்வரளிப் பூக்கள். பூக்களிலும் இலைகளிலும் இன்னும் மழைத் துளிகள் பற்றிக்கொண்டிருந்தன; அவ்வப்போது சொட்டிக்கொண்டிருந்தன.

தன்வி பூப்பறிக்க ஆரம்பித்தாள். எட்டாத உயரத்திலிருந்த பூக்களை, லேசாகக் கிளையை வளைத்துப் பறித்தாள். இன்று செடி முழுக்கவும் ஏறத்தாழ நூறு அல்லது நூற்றைம்பது பூக்கள் இருக்கும் என்று தோன்றியது. ‘அட, எண்ணிப் பார்த்துவிட்டால் என்ன’ என்று நினைத்தாள்.

பறிக்கும்போதே ஒவ்வொரு பூவையும் எண்ணி கிண்ணத்தில் போட்டுக்கொண்டாள்.

“ஒன்று, இரண்டு... பத்து... இருபத்து மூன்று...”

சட்டென்று கவனித்தாள். ஒரு பூவைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் பெரிய நீர்த்துளி, சூரிய ஒளிபட்டு வைரம் போன்று பிரகாசித்தது. அடடா! என்ன அழகு! சற்றுக் கூர்ந்து பார்த்தபோது துளியில் தன் முகமும் சுற்றியுள்ள பொருட்களும் பிரதிபலிப்பதைக் காண முடிந்தது! ஆனந்தமாக இருந்தது தன்விக்கு. இந்த நீர்த்துளிதான் எவ்வளவு அபூர்வமாக இருக்கிறது! சற்று நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிறு காற்றசைவில் அந்தத் துளி, பூவைவிட்டுப் பிரிந்து விழுந்தபோது சட்டென்று தன் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டாள். கையில் மென்மையான குளிர்ச்சி பரவி உடல் சிலிர்த்தது.

திடீரென்று அவளுக்கு, தான் பூக்களை எண்ணிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. எந்த எண்ணிக்கையில் விட்டோம் என்று நினைவுகூர முடியவில்லை.

காலை வெயில் அன்று சீக்கிரம் வந்துவிட்டது. அதுவும் நல்லதுதான். வெயிலடித்தால்தான் பூக்கள் எல்லாம் நன்றாக மலர்ந்திருக்கும். தன்வி கிண்ணத்துடன் வெளியே வந்தாள். அவளுடன் வந்த செம்பூனை, எதிர் வீட்டு நாயைப் பார்த்துப் பயந்து அவள் பின்னால் பதுங்கியது. அவள் செடியிடம் வந்து நின்றாள். வழக்கத்தைவிடப் பூக்கள் இன்று கொஞ்சம் அதிகம்போலத் தெரிந்தது. எண்ணிப் பார்த்தால்தான் இந்தச் செடி எவ்வளவு பூ கொடுக்கிறது என்று முடிவு செய்யலாம்.

அவள், கவனமாக எண்ணிக்கொண்டே பூப்பறிக்க ஆரம்பித்தாள். “ஒன்று... பதினாறு... இருபத்தேழு...”

அப்போது அவள் ஓர் அதிசயத்தைப் பார்த்தாள். மஞ்சள் வண்ணத்துப்பூச்சி, ஒரு பூவின் மீது உட்கார்ந்திருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது. “வா, வா! இப்போதுதான் வழி தெரிந்ததா?” என்று அவள் வரவேற்றாள். மேற்கொண்டு பூப்பறித்தால் செடி அசைந்து அது பறந்துவிடுமோ என்று பயமாக வேறு இருந்தது.

சிவப்புப் பூக்கள், பச்சை இலைகள் பின்னணியில் மஞ்சள் வண்ணத்துப்பூச்சி இருப்பது அருமையாக இருந்தது. உள்ளிருந்து வந்த அம்மாவின் அழைப்புக்கு அவள் திரும்பியபோது பட்டென்று அது பறந்தது.

தன்விக்கு எண்ணிக்கை விட்டுப்போனது.

அப்புறம் வந்த ஒருநாள் காலையில் தன்வி பூப்பறிக்கச் செல்லும்போது, பனி இன்னும் விலகியிருக்கவில்லை. அவளுக்கு லேசாகக் குளிர்ந்தது. பனி ஈரம் படிந்த புற்களிலிருந்தும் செடிகளிலிருந்தும் எழுந்த பச்சை மணத்தை ஆழ்ந்து சுவாசித்தாள். செம்பூனை புற்களின் மீது புரண்டு விளையாடியது.

இன்று அரளிச் செடியில் கொஞ்சம் பூக்களே இருந்தன. எல்லாவற்றிலும் பனித்துளிகள் படிந்திருந்தன. அந்தக் குளிரும் காற்றும் அவளுக்கு உற்சாகமூட்டின. இன்றாவது இந்தப் பூக்களை எண்ணி முடித்துவிட வேண்டும் எனும் உறுதி அவள் மனத்தில் ஏற்பட்டது.

அவள் எண்ணியபடியே பூப்பறிக்க ஆரம்பித்தாள்.

“ஒன்று... பதினொன்று... முப்பத்தாறு...” எண்ணிக் கொண்டிருந்தபோது, அரளிச் செடியின் கீழ்த் தண்டில் மிகச் சிறிய பச்சைப் புழு இருப்பதைப் பார்த்துவிட்டாள். கூர்ந்து பார்த்தபோது அதன் உடலிலிருந்த நுட்பமான ரோமங்கள் தெரிந்தன. அது மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. மிகவும் அழகான அந்தப் புழு எங்கிருந்து வந்திருக்கும்? நகர்ந்து நகர்ந்து எங்கே போகிறது? அவள் யோசித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று அந்தப்புழு காணாமல் போனது.

திடுக்கிட்டுவிட்டாள் தன்வி! எங்கே அந்தப் புழு?

அவள் அங்கும் இங்கும் பார்த்தபோதுதான் தெரிந்தது, புழு இருந்த அதே கிளையில் இருந்தது ஒரு பச்சோந்தி! அதுதான் நாக்கை நீட்டிப் புழுவைத் தின்றுவிட்டது.

உற்றுப் பார்த்தால்தான் அந்தச் சிறிய பச்சோந்தி அங்கே இருப்பதைப் பார்க்க முடியும். செடியின் நிறமும் அதன் நிறமும் ஒன்றுபோல் இருந்தன. பச்சோந்தி மெதுவாக நகர்ந்து சென்றது. அது எங்கே செல்கிறது என்று கவனித்துக்கொண்டிருந்தபோதுதான், தனக்கு எண்ணிக்கை தவறியது அவளுக்கு நினைவு வந்தது.

அன்று காலையில் விழிக்கும்போதே என்ன ஆனாலும் சரி, இன்று அரளிச் செடியின் பூக்களை எண்ணிக் கணக்கிட்டே ஆக வேண்டும் என்று நினைத்தாள் தன்வி.

அவள் கிண்ணத்துடன் வெளியே வந்தபோது, வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. வெயில் இல்லாத மங்கிய வெளிச்சம். மலர்ந்த பூக்கள் போதுமான அளவு இருந்தன.

அவள் எண்ணியபடியே பூக்களைப் பறித்து, கிண்ணத்தில் சேகரித்தாள். “ஒன்று... பதினெட்டு... நாற்பத்தாறு...”

அந்த நேரத்தில், ‘க்கோவ்’ என்று ஓர் ஓசை கேட்டது. அது மயிலின் குரல். தன்வியின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு அடிக்கடி மயில்கள் வருவதுண்டு.

மயில் தென்படுகிறதா என்று பார்ப்பதற்காகச் சட்டென்று திரும்பினாள்தன்வி. அங்கே, அப்போது கீழ்வானில்மிகப் பெரிய வானவில் தோன்றி யிருந்தது! அதன் நிறங்கள் தெளிவாகவும் பிரகாசமாகவும் தெரிந்தன. இதைப்போல அவள் பார்த்தது இல்லை! தன்வியின் கண்கள் அகல விரிந்தன. எல்லாவற்றையும் மறந்தவளாக அந்த வானவில்லின் அழகில் லயித்து நின்றாள். அப்போது அந்த மயில், வானவில்லின் குறுக்காகப் பறந்து உயரமான பனை மரத்தின் உச்சியில் அமர்ந்தது.

எவ்வளவு நேரம் அப்படி வானவில்லைப் பார்த்துக்கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை. செம்பூனை காலை உரசியபோதுதான் அவள் சுயநினைவுக்கு வந்தாள். தன் எண்ணிக்கை விட்டுப்போனதையும் உணர்ந்தாள்.

அடுத்த முறை அவள் பூக்களை எண்ணும்போது, தவிட்டுக் குருவிகள் வந்து அந்தச் செயலைத் தடுத்தன. மற்றொரு முறை, சில தும்பிகள் வந்து இலைகளில் அமர்ந்து முயற்சியை முறியடித்தன. அவள் நாள்தோறும் தன் அரளிச் செடியின் பூக்களை எண்ணிக் கணக்கிட முயற்சி செய்கிறாள். ஆனால், அவளால் ஒருபோதும் பூக்களை எண்ணி முடிக்க இயலவில்லை. ஏனென்றால், அவளைச் சுற்றி எப்போதும் அற்புதங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன!
கதைTamil StoryStoriesதமிழ் கதைகள்கதைகள்சிறுவர்கள் கதைகள்பூக்கள்சூரியன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x