Published : 14 Jun 2021 11:33 AM
Last Updated : 14 Jun 2021 11:33 AM

பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்ட்: போர்ட்ஃபோலியோவில் கட்டாயம் இருக்க வேண்டிய ஃபண்ட்

பங்குச்சந்தையில் தற்போது ஏற்ற இறக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பயம் மற்றும் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் உருவாகியுள்ள ஈடுபாடுதான் காரணம். இதுபோன்ற சூழலில் சிறு முதலீட்டாளர்கள் பதட்டத்துக்குள்ளாவது இயல்பானதே. ஏனெனில் இதுபோன்ற சமயங்களில் உண்டாகிற திடீர் இறக்கம் பொதுவாக நடப்பதில்லை. 2008ல் உண்டான இறக்கத்தை கண்டவர்கள் கூட மீண்டும் சந்தையில் ஏற்பட்டுள்ள இறக்கத்தை சந்திக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஆனால் துடிப்பான அஸெட் அலொகேஷன் ஃபண்டுகளில், அதுவும் குறிப்பாக பேலன்ஸ்ட் அட்வாண்டேஜ் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் சந்தை இறக்கங்களில் மிதமான பாதிப்புகளையே சந்தித்துள்ளனர். காரணம் சந்தை உச்ச மதிப்புகளில் இருக்கும்போது இந்த ஃபண்டுகள் பங்குகள் மீதான முதலீடுகளைக் குறைத்துக்கொள்கின்றன. இந்த ஃபண்டுகளின் முக்கிய அட்வாண்டேஜ் முதலீடுகள் மீதான ரிஸ்க்கை குறைக்கும் வகையில் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்கின்றன. பங்குச் சந்தையின் போக்குக்கு ஏற்ப முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் பெரும்பான்மை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஃபண்டுகளாக இவை இருக்கின்றன.

துடிப்பான அஸெட் அலொகேஷன் ஃபண்டுகள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன் சந்தை மதிப்புகளை ஆராய்கின்றன. எப்போது முதலீடுகளை பங்குகளில் தீவிரமாக மேற்கொள்ளலாம் என்பதை ஒருவர் முடிவு செய்ய முக்கியமாக உதவும் காரணி சந்தை மதிப்பு. அதாவது விலை ஏற்றம் அல்லது விலைக்கும் புத்தக மதிப்புக்கும் இடையிலான விகிதம்.

பங்குச் சந்தை உச்சத்தை எட்டும்போது துடிப்பான அஸெட் அலொகேஷன் ஃபண்டுகள் லாபத்தை எடுப்பதில் மும்முரமாக இருக்கும். இதனால் பங்குகளிலிருந்து முதலீட்டை வெளியே எடுக்கும். பங்கு விலைக்கும் புத்தக மதிப்புக்கும் இடையிலான விகிதம் சந்தை ஏற்றத்தின்போது தொடர் ஏற்றத்தில் இருக்கும். ஒவ்வொரு ஏற்றத்திலும் இந்த ஃபண்டுகள் லாபத்தை எடுத்து முதலீட்டை கடன் திட்டங்களுக்கு மாற்றும்.

இந்த துடிப்பான அஸெட் அலொகேஷன் ஃபண்டுகள் முதலீட்டு உத்திகள் மூலம் பல உச்சங்களை எட்டுவதாக உள்ளன. மேலும் இவை முதலீட்டாளர்களுக்கு லாபம் தரும் வசதியை தருவதோடு மட்டுமல்லாமல் எந்தவித சரிவும் ஏற்படாதவகையில் பாதுகாக்கும் அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த ஃபண்டுகளின் இயல்பை பார்க்கும்போது பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கான ஆரம்பப் படிக்கற்களாக பயன்படுத்தக் கூடியவையாக உள்ளன.

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களும் இந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். பொதுவாக சொன்னால் அனைவரின் போர்ட்ஃபோலியோவிலும் முக்கியமாக இருக்க வேண்டிய ஃபண்ட் இது என்றே சொல்லலாம். தற்போதுள்ள பங்குச்சந்தை சூழலில் பெரும் தொகைகளில் முதலீடு செய்ய விரும்புபவர்களும் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

கே.ராஜேஷ்
பங்குதாரர்,
குரோவெல் கேபிடல் டிஸ்ட்ரிபூஷன் எல்எல்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x