Last Updated : 18 Dec, 2015 04:37 PM

 

Published : 18 Dec 2015 04:37 PM
Last Updated : 18 Dec 2015 04:37 PM

சிரிக்க வைக்கும் குருவி!

நடிகர் சித்தார்த்தும் இரு இளைஞர்களும் தங்கள் முக பாவனையில் காதலின் வலியை, வேதனையை தத்ரூபமாக வெளிப்படுத்துகின்றனர்.

ஆனால் பாடல் வரிகளில் நக்கலும், நையாண்டியும் ததும்புகின்றது. இதுதான் ‘ஷூட் த குருவி’ பாடல். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் விஷால் சந்திரசேகரின் இசையமைப்பில், பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில், அனிருத் பாட, நடிகர் சித்தார்த், ராதாரவி மற்றும் பலர் நடித்து, பேசியிருக்கும் பாடல் இது. யூடியூபில் சென்ற மாதம் வெளியான இந்தப் பாடலின் வரிகள் தற்போது ட்ரெண்டிங். கேலி, கிண்டல், கொச்சைத் தமிழ் என சமீபகாலத்தின் இசை சரிவை பிரதிபலிப்பதுபோல பாடலை முதலில் கேட்கும்போது தோன்றலாம். ஆனால் இந்தப் பாடலின் தனித்துவம் அதை ரசிக்கவைக்கிறது.

‘வாலோட வெட்டிக் குருமா வெக்கிது வாழ்க்க… நாங்க குருமா குருவிங்க…’ போன்ற பாடல் வரிகளை தீவிரமான காதல் உணர்வுக்கான முகபாவனையில் கதாநாயகன் பாடுவதைக் காணும்போது விழுந்துவிழுந்து சிரிக்கத் தோன்றுகிறது. அநிருத்தின் குரலும் அது உன்னதமான காதல் பாடலை பாடும் தொனியில் இருப்பதும், இசை வடிவமும் நேர்த்தியாக காதல் ரசத்தை பிழிவதும் மேலும் சிரிக்க வைக்கிறது.

அதிலும் வெண்ணிற ஆடையில் தேவதை போல வலம்வரும் ஒரு பருமனான ஆண் உருவம் இந்தப் பாடலின் பகடித்தன்மையை ஒரு படி மேலே தூக்கி நிறுத்துகிறது. இதற்கு முன்பே ‘தமிழ்ப்படம்’ திரைப்படத்தில் அர்த்தமற்ற வார்த்தைகளை கோத்து இசைக்கப்பட்ட ‘ஓ மொஹ சீயா’ பாடல் சக்கைப்போடு போட்டது. அதில் ஹரிஹரனும், ஸ்வேதா மோகனும் அத்தனை அபத்தமான வரிகளை ஹிந்துஸ்தானியிலும் கர்நாடக இசையிலும் மெய்சிலிர்க்கப் பாடியிருப்பார்கள்.

எந்த குறிப்பிட்ட பாணிக்கும் தன்னை ஒப்புக்கொடுக்க மறுப்பது பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சமாகும். அந்த வகையில் இந்தப் பாடல் பல்வேறு கோணங்களில் பின்நவீன இசையின் வடிவமற்ற வடிவத்தை பிரதிபலிக்கிறது. பாடலின் காட்சி அமைப்பிலும் ஒரு தொடர் கதை தன்மை ஆங்காங்கே அறுந்துபோகிறது. அதற்காக, இது வெறும் அபத்தம், பிதற்றல் என புறந்தள்ளிவிடவும் முடியாது.

மொழி, காட்சிகள் அனைத்திலும் காலங்காலமாக சமூகத்தால் உருவாக்கப்பட்ட பிம்பங்களைப் போட்டு உடைக்கிறது பாடல். பின்நவீனத்துவத்தின் முக்கிய கூறான பகடி செய்யும் பாணியை இந்தப் பாடல் தழுவுகிறது. மேற்கத்திய கலைவடிவங்களை உள்வாங்கிய நகரமயமான இந்திய இளைஞர்களிடம் சமீபத்தில் காணப்படும் போக்கு இது. இதே பாணியில் தமிழில் சில குறும்படங்கள் வருவதையும் காண முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x