Published : 01 Jun 2021 01:18 PM
Last Updated : 01 Jun 2021 01:18 PM

தாய்மார்களின் மனநலனை மறந்துவிடக் கூடாது!

கருவுற்றிருக்கும் ஒரு பெண் தான் குழந்தை பெற்றெடுக்கப்போவது குறித்து எப்போதும் மகிழ்ச்சி குறையாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இப்படி உடல்நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலனுக்கும் கொடுங்கள் என்கிறது உலகத் தாய்க்குரிய மனநல நாள்.

2016- ஆம் ஆண்டிலிருந்து மே மாதத்தின் முதல் புதன்கிழமை தாய்க்குரிய மனநல நாளாகவும், மே மாதம் முழுவதும் தாய்க்குரிய மனநல மாதமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும் அதுபோல் கடைப்பிடிக்கப்பட்டது.

தாய்க்குரிய மனநலம்

மனநலம் என்பது, ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது, அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தத்தைச் சமாளிப்பது, ஆக்கபூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் வேலை செய்து, தனக்கும் சமூகத்துக்கும் பங்களிப்பு செய்வது, ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள் - செயல்பாடுகள் அந்த நபருடைய உளவியல், உடலியல் - வளர்ச்சியில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.

பொதுவாக தாய்க்குரிய மனநலன் பராமரிக்கப்படுவதை கருவுற்றிருக்கும் காலம் தொடங்கி குழந்தை பிறந்த பிறகான 12 மாதங்கள் வரை கவனத்தில் கொள்ளப்படுகிறது. கருவுற்ற பிறகு உடலில் நிகழும் மாற்றங்கள், எதிர்பார்ப்புகள், புதிய சவால்கள், கூடுதலான பொறுப்புகள் போன்றவற்றால் பதற்றமும் (Anxiety) மனச்சோர்வும் (Depression) இயல்பாகவே பெண்களுக்கு ஏற்படுவதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

இந்தியப் பெண்களின் நிலை

கருவுற்றுள்ள பெண்களிடமும், குழந்தை பெற்று 12 மாதங்கள் தாண்டாத பெண்களிடமும் இதுவரை குறைந்த ஆய்வுகளே இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளன. இந்தியத் தாய்மாரின் மனநலனை பாதிக்கும் காரணிகளாக பொருளாதாரச் சிக்கல், பெற்றோர் ஏற்பாடு செய்யாத திருமணங்கள், திருமண முரண்பாடுகள், ஆண் குழந்தை வேண்டும் என்கிற எண்ணம், ஏற்கெனவே கரு கலைந்த துயர அனுபவம், குழந்தை இறந்து பிறப்பது, சிறப்புக் குழந்தையாகப் பிறந்தது, குடும்ப வன்முறை, கணவர் மதுவுக்கு அடிமையாக இருப்பது ஆகியவற்றை இதுவரையிலான இந்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

கருவுற்றிருக்கும் பெண்களிடம், தென்னிந்திய அளவில் 2019இல் ஆய்வு நடத்திய மருத்துவர் சுவர்ன ஜோதி குழுவினர், கருவைச் சுமக்கும் பெண்களிடம் மனச்சோர்வு அல்லது அதீதப் பதற்றம் (Generalized Anxiety Disorder) அல்லது மனச்சோர்வும் அதீத பதற்றமும் சேர்ந்தே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

தாய்க்குரிய அவதிகள்

கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனநலச் சிக்கல் ஏற்படுவதற்கு இன்னும் பல காரணிகள் இருக்கின்றன. பெண்ணுக்கு இருக்கும் நோய், குழந்தை பெற்றெடுப்பது குறித்து சிறுவயது முதல் கேட்ட கதைகளின் தாக்கம், ஏற்கெனவே குழந்தை பெற்றபோது ஏற்பட்ட பயம், திட்டமிடப்படாத கர்ப்பம், உடல் - உணர்வு ரீதியிலான குடும்ப வன்முறை, கிராமத்தில் இருந்து நகரத்தில் குடியேறிய தாயின் தனிமை, கணவர் கைவிட்டுவிட்டதால் தனி ஆளாகக் குழந்தையை வளர்ப்பது, குழந்தைக்குத் தன்னால் ஏதும் தவறு நேர்ந்துவிடுமோ என்கிற பயம் என்பது போன்ற எண்ணற்ற காரணங்கள் தாயின் மன சமநிலையைக் குலைக்கின்றன.

இவற்றைக் கவனிக்காமலும், சிகிச்சை அளிக்காமலுமே நாம் பெரும்பாலும் கடந்து போகிறோம்.

மனநலச் சிக்கல்கள்

வாழ்க்கையில் மற்ற நேரத்தில் ஏற்படும் மனச்சோர்வுக்கான அதே அறிகுறிகளைத்தாம் கருவுற்றிருக்கும் பெண்களிடமும், குழந்தை பெற்றெடுத்த அன்னையரிடமும் பார்க்கிறோம். உதாரணமாக தூக்கக் குறைபாடு, பசியில் மாற்றம், கவனம் செலுத்த இயலாமை, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான மனநிலை, எரிச்சல் போன்றவை வருகின்றன. கூடுதலாக, குழந்தையைச் சரிவரப் பார்த்துக்கொள்ள இயலவில்லையே எனும் குற்ற உணர்வுக்கும் மனச்சோர்வுடையவர்கள் ஆளாகிறார்கள்.

தாங்கள் மனச்சோர்வுடன் இருப்பதை வெளிப்படுத்த அன்னையர்கள் தயங்குவதாகவும், தங்களை ‘நோயாளி’ அல்லது ‘மோசமான தாய்’ என முத்திரை குத்திவிடுவார்கள் என அச்சப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தில் ஏழ்மையான அல்லது நடுத்தரமான நாடுகளில் மட்டுமல்ல, வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயேகூட 10 -15 விழுக்காடு பெண்கள் மனநலச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

தாயின் மனநலச் சிக்கலுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், கரு நிறைவாக வளராதது, குறைந்த எடையுடன் பிறப்பது, குறைப் பிரசவம், நோய்த்தொற்று எளிதில் குழந்தைகளைத் தாக்குவது எனப் பல வகைகளில் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இக்குழந்தைகள் வளர்ந்த பிறகு, சமூகத்தில் பிறருடன் இயைந்து பழகுவதிலும் தடுமாற்றங்களைச் சந்திக்கிறார்கள்.

ஆதரவு குழுக்கள்

மனநலச் சிக்கலில் உள்ள கருவுற்ற பெண்களுக்கு இந்தியாவில் போதுமான ‘சமூக ஆதரவு’ கிடைப்பதில்லை என மருத்துவர் சுவர்ன ஜோதி தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகிறார். அதேவேளையில், தாயின் மனநலனை மீட்டெடுப்பதில் ஆதரவு குழுக்களுக்கு (Support Groups) மிகப்பெரிய பங்கு இருப்பதாக உலக அளவில் எண்ணற்ற ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ‘ஆதரவு குழுக்கள்’ கூடும்போது, ‘நான் தனியாக இல்லை’ என்னும் நம்பிக்கையை ஒரு தாய் பெறுகிறார்.

கணவர்களும் மனைவிகளும் கூடுகின்ற ‘ஆதரவு குழு’ கூட்டங்களில் கஷ்டங்களைச் சமாளிக்கிற நுணுக்கங்களையும் வழிமுறைகளையும் அறிவதோடு, சிறப்பாக செயல்படுதவற்கான பாராட்டுகளையும் அவர்கள் பெறுகிறார்கள். யாரும் நம்மைத் தவறாக நினைப்பார்களோ என்னும் கலக்கமின்றி தங்களின் பயத்தையும், தேவைகளையும் பற்றிக் கலந்துரையாடுகிறார்கள் என்கிறார் மனச்சோர்வு குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்திவரும் உளவியலாளர் ஆரோன் பெக்.

நாம் சொல்ல வேண்டியது

பதற்றத்தோடும், மனச்சோர்வுடனும் இருக்கும் அன்னையரிடம் நாம் அடிக்கடி சொல்ல வேண்டிய மூன்று நல்வாக்கியங்கள், (1) நீங்கள் தனியாக இல்லை. நண்பர்களும் உறவினர்களும் உங்களோடு இருக்கிறோம். (2) உங்களுக்கு ஏற்படும் பதற்றத்துக்கும் மனச்சோர்வுக்கும் உங்களை நீங்களே குற்றம் சுமத்திக்கொள்ள வேண்டியதில்லை (3) உங்களுக்கு உதவி செய்வதற்கும் வழிகாட்டுவதற்கும் மருத்துவர்களும், மனநல ஆலோசகர்களும் இருக்கிறார்கள்.

கட்டுரையாளர்: சூ.ம.ஜெயசீலன்,

உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்,

தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x