Published : 27 May 2021 03:10 am

Updated : 27 May 2021 09:22 am

 

Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 09:22 AM

அகத்தைத் தேடி 56: மழைக்கு இசை அமைத்த மகான்

agaththai-thedi

மனம் உள்ளடங்கிப் புலன்கள் கூர்மையுறும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகின் இனிய பல காட்சிகளும் ஓசைகளும் உணர்வுக்குப் புலப்படும். இத்தகைய ஓசைகளை கேட்டுக் கேட்டுத்தான் இசைஞானிகள் ராக தாளங்களை உருவாக்கினார்கள். எல்லா ஓசைகளையும் இசை வடிவில் பார்ப்பது என்பது இறை அனுபூதி பெறுவதற்கான படிநிலைகளில் ஒன்று.

தன்னை ஆட்கொண்டு பரவச நிலைக்கு இட்டுச் சென்ற சாதாரண ஓசைகளையும் பாரதி தன் கவிதைகளில் ரசமாக விவரிக்கிறார்.


எங்கிருந்தோ கேட்கிற மணி ஓசை, நாய்கள் குரைப்பது, திடீரென்று கேட்கிற அன்னக்காவடிப் பிச்சைக்காரரின் ஏங்கிய குரல், வீதிக் கதவை யாரோ சாத்துகிற சப்தம், எங்கோ யாரோ உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பேச்சுக் குரல் இதையெல்லாம் கேட்கும்போதே கீழ்த்திசையில் சங்கொலி விம்முகிறதாம், குழந்தை ஒன்று அழுகிற குரலும் குறுக்கிடுகிறது.

பாம்புப் பிடாரனின் குழலோசையும், தெருவில் ‘ஜரிகை வேணும்! ஜரிகை!’ என்று கத்திக்கொண்டு போகிறவன் குரலையும் யார் சுருதி சேர்த்து விட்டது? ‘ஆ! அது சக்தியின் லீலை!’ என்று குதூகலிக்கிறான் பாரதி.

பாரதி போலவே இயற்கையின் ஓசைகளை ஊன்றிக் கவனித்து இசையின் கற்பனைகளில் பயணித்து முறையான சங்கீதப் பயிற்சி இல்லாமலே தமிழகத்தின் சங்கீத ஜாம்பவான்களை தன் இசைக்குக் கட்டிப்போட்டவர் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள்.

கட்டபொம்மன் வழித்தோன்றல்

சுவாமிகளின் பூர்வாசிரமப் பெயர் நல்லப்ப சுவாமி. வீரபாண்டிய கட்டபொம்மன் தாய்வழி வம்சாவளி. ராஜகம்பளம் வகுப்பைச் சேர்ந்தவர். காடல்குடி ஜமீந்தார் பரம்பரை. விளாத்திகுளத்தில் குடியேறி ஒரு குடிசை வீட்டில் துறவு வாழ்க்கை மேற்கொண்டார்.

அரச பரம்பரை என்பதன் அடையாளமாய் கம்பீரத் தோற்றம்; ஆறடி உயரம்; நெற்றி நிறைய திருநீறு; கற்றையான வெண்மீசை; வெண்ணிறத்தில் வேட்டியும் மஞ்சள் துண்டும், பச்சை நிறத்தில் பீதாம்பரமும் தரித்திருப்பார். மடியில் திருநீற்றுப்பை எப்போதும் வைத்திருப்பார்.

யார் வந்தாலும் ‘சாப்பாடு ஆயிற்றா?’ என்று கேட்பார். இல்லை என்றால் தன்னிடமிருக்கும் பணத்தைக் கொடுத்து ‘முதலில் சாப்பாடு ஆகட்டும்; மற்றது அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்பாராம். கட்டப்பூச்சி முதலியார் எப்போதும் இவருடன் காணப்படுபவர்.

ஒருமுறை மைசூர் மகாராஜா இவரின் ராக ஆலாபனையைக் கேட்க ஆசைப்பட்டார். விளாத்திகுளம் சுவாமிகள் நேரில் சென்றார். எல்லோரும் மகாராஜாவை தலை தாழ்த்தி வணங்க இவர் மட்டும் தலை நிமிர்ந்தே நின்றாராம்.

சுவாமிகள் ஐந்து கட்டைக்கு மேல் குரல் எடுத்துப் பாடும் குரல் வளம் உடையவர். ஒலிபெருக்கி இல்லாத அக்காலத்தில் ஒரு மைல் தொலைவுக்கு இவர் குரல் கேட்கும். கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.மகாலிங்கம், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணியம், காருக்குறிச்சி அருணாசலம் போன்ற இசை உலக ஜாம்பவான்கள் இவர் பாடுவதைக் கேட்பதற்காகவே பயணித்து வந்திருக்கிறார்கள். இவரிடமிருந்து சில ராக சூட்சுமங்களை கற்றுக்கொண்டு போவார்கள். ஒருமுறை தியாகராஜ பாகவதர் காரில் விளாத்திகுளம் வழியாகச் சென்றபோது, விளாத்தி குளத்தில் இறங்கி நடந்தே போனாராம்.

தவளைக் கச்சேரி

ஒருமுறை விளாத்திகுளத்தில் கனமழை பெய்தது. சுவாமிகள் தங்கியிருந்த குடிசை சேதமடைந்து விட்டது. சுவாமிகளைத் தேடிச் சென்றபோது இடுப்பில் கட்டிய துண்டோடு குளக்கரையில் தவளைக் கச்சேரியை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாராம்.

பாரதியார், சுவாமிகளிடம் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. சுவாமியைப் பார்த்து, ‘பாடு! பாண்டியா பாடு!!’ என்று கூறுவாராம் பாரதி.

ஒருமுறை வைகைக் கரை ஓரம் நாகசுரக் கலைஞர் பொன்னுசாமியின் தகப்பனார் சாதகம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாகஸ்வர இசைக்கு ஏற்ப துணி துவைத்துத் தாளம் போட்டிருக்கிறார் சுவாமிகள். இசை நின்றது. துவைப்பதும் நின்றது.

சேத்தூர் ஜமீன் சேவுகப் பாண்டியத் தேவர் மிகச் சிறந்த இசைக் கலைஞர். இவருடன் ஒரே ராகத்தைத் தொடர்ந்து பாடும் போட்டியில் பங்குபெற்று கரகரப்பிரியா ராகத்தை தொடர்ந்து ஐந்து நாட்கள் பாடி அவரை வென்றார். சேத்தூர் ஜமீன்தார் தாம் பெற்ற பரிசுகள், பதக்கங்கள் எல்லாவற்றையும் சுவாமிகளிடம் சமர்ப்பித்தார்.

பஞ்சாலைகளுக்குப் புகழ்பெற்ற கோவில்பட்டி ஆலைகளின் சங்கொலி விளாத்திகுளம் வரை கேட்கும். சங்கொலிக்கு இணையாக விளாத்திகுளம் வைப்பாற்றில் மணல்வெளியில் நின்றுகொண்டு பதிலுக்கு சங்கொலி போலவே ஆலா பனையை ஆரம்பிப்பார் சுவாமிகள். எது சங்கொலி, எது சுவாமிகளின் சங்கநாதம் என்று புரியாமல் மக்கள் கல்லாய்ச் சமைந்து விடுவர். ஆலயச் சங்கொலி நின்றபிறகும் ஆகா யத்தின் உச்சி தேடி சஞ்சரிக்கும் சுவாமிகளின் கண்டத்திலிருந்து புறப்படும் சங்கொலி.

சுவாமிகள் மழை பெய்யும் போதெல்லாம் மழை ஓசைக்கு ஏற்ப இசை அமைத்துப் பாடுவாராம். மழைத்துளிகளின் தாரைகளை இசை நரம்புகளால் மீட்டிப் பாடுவதுபோல் அக்காட்சி பார்ப்போரை மயக்கும்.

கி.ரா.வைத் தேடிவந்த சுவாமிகள்

விளாத்திகுளம் சுவாமிகள் மீது அண்மையில் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அபார பிரேமை இருந்தது. பெரிய பெரிய சங்கீத வித்வான்கள் சுவாமிகளின் அருளைப் பெற தவம் கிடந்தபோது சுவாமிகள் கி.ரா.வின் வீடு தேடி வருவார். தஞ்சையில் எழுத்தாளர்களின் சங்கமமாக இருந்த யுவர்ஸ் மெஸ்சுக்கு பிரகாஷைத் தேடி கி.ரா. வரும்போதெல்லாம் பேசாத நேரங்களில், ஏதோ ராகத்தை ‘ஹம்மிங்’ செய்துகொண்டு இருப்பார். இதைப் பற்றி பிரகாஷ் ‘அவருக்குள் எப்போதும் ராகம் நதியைப் போல ஓடிக்கொண்டிருக்கும். இதைச் செய்தவர் விளாத்திகுளம் சுவாமிகள்’ என்பார் பிரகாஷ்.

விளாத்திகுளம் சுவாமிகள் ஒருமுறை முருகன் சன்னிதியில் தன்னுடைய நாக்கைத் துண்டித்துக் கொண்டதாகவும் பின்னர் அது வளர்ந்து விட்டதாகவும் ஒரு கர்ண பரம்பரைக் கதை இருப்பதாக கி.ரா. கூறியிருக்கிறார்.

விளாத்திகுளம் சுவாமிகளுக்கு ஒரு நினைவாலயம் கட்டவேண்டுமென்ற கி.ரா.வின் ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டது.

விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இருந்த அவரது சமாதி பல ஆண்டுகள் பராமரிப்பின்றி இருந்தது. தற்போது அங்கு அவர் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் பக்தர்களால் எழுப்பப்பட்டுள்ளது.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.comஅகத்தைத் தேடிமழைஇசைமகான்Agaththai Thediகட்டபொம்மன்தவளைக் கச்சேரிகி.ராசுவாமிகள்தேடிவந்த சுவாமிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x