Published : 18 May 2021 03:11 am

Updated : 18 May 2021 09:00 am

 

Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 09:00 AM

90 வயது இளைஞரின் முனைவர் பட்டம்!

90-year-old-youth
ஸ்தனிஸ்லாஸ்

பொதுவாக, மனத்தின் ஆசைகளையும் கனவுகளையும் முதுமையின் இயலாமையும் சோர்வும் முடக்கிவிடும். அது இயற்கையின் நியதி. ஆனால், சென்னையில் வசிக்கும் 90 வயதான ஸ்தனிஸ்லாஸ் இதற்கு விதிவிலக்கு. 90 வயதுவரை வாழ்வதே சாதனை எனக் கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், அவர் கனவுகளைத் துரத்திச் சென்றுகொண்டிருக்கிறார். அவருடைய கனவு பொருள்தேடல் சார்ந்தது அல்ல, அறிவுத்தேடல் சார்ந்தது.

கற்பதும் பட்டங்கள் பெறுவதுமே அவருடைய தீராத காதல். அது வெறும் கனவு மட்டுமல்ல; அதுவே அவர் வாழ்க்கையின் அர்த்தம். கற்றலின் மீதான அவருடைய பிடிப்பு, வயது மூப்பின் சோர்வைப் புறந்தள்ளி, 90 வயதிலும் ஓர் இளைஞனைப் போலப் படிப்பைத் தேடி அவரை ஓட வைத்திருக்கிறது. அண்மையில் அவர் பெற்ற முனைவர் பட்டமே அதற்குச் சான்று. 90 வயதில் முனைவர் பட்டமா என்று ஆச்சரியப்பட வேண்டாம். அவருடைய கல்வி வாழ்க்கை மட்டுமல்ல, அவரும் ஆச்சரியங்களால் நிறைந்தவரே.


தடை விதைத்த விதை

குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, 20 வயதில் அவரது கல்விக் கனவு தடைபட்டது. படிப்பு இடையில் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஏக்கம், அவரது ஆழ்மனத்தினுள், கற்றலின் மீது தீராத காதலையும் விருப்பத்தையும் விதைத்தன. அந்த விதையே இன்று விஸ்வரூபமெடுத்து, பெரும் விருட்சமாகி, முனைவர் பட்டம் பெறும் நிலைக்கு அவரை உயர்த்தியுள்ளது.

ஸ்தனிஸ்லாஸ் தனது பட்டங்கள் அனைத்தையும் தொலைதூரக் கல்வி மூலமே படித்தார். ஆராய்ச்சி வழிகாட்டி உட்பட அவருடைய ஆசிரியர்கள் பலரும் அவரைவிட வயதில் இளையவர்களாகவே பெரும்பாலும் இருந்துள்ளனர். அதை எப்போதும் ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை.

பெற்ற பட்டங்கள்

ஸ்தனிஸ்லாஸ் 1978-ல், 47 வயதில் முதல் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். தற்போது அவர் ஐந்து முதுநிலைப் பட்டங்களுக்குச் சொந்தக்காரர். எம்.ஏ. (முந்தைய) சமூகவியல், எம்.ஏ. சமூகவியல், எம்.ஏ. சர்வதேச உறவுகள், எல்.எல்.எம்., பி.ஜி டிப்ளமோ இன் கிரிமினாலஜி - தடயவியல் அறிவியல் என அவர் பெற்றிருக்கும் இந்த ஐந்து முதுநிலைப் பட்டங்கள் அவருக்குப் போதுமானதாக இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திரத்தின் ஆச்சார்ய நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ‘நீதி நிர்வாகம்: மரண தண்டனை சார்ந்து’ என்கிற தலைப்பில் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இந்த முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தன் பெயருக்கு முன்னால் ‘முனைவர்’ என்கிற முன்னொட்டு சேர்வது மிகவும் உற்சாகமாக உள்ளது எனக் கூறும் அவர், தற்போது அரசியல் அறிவியலில் மற்றொரு முதுகலைப் பட்டப் படிப்பைப் படித்துவருகிறார். அதற்குப் பின்னர், எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்கிறார்.

கனவே துணை

கற்றலின் மீது அவர் கொண்டிருக்கும் காதல் அலாதியானது. ஒவ்வொரு நாள் இரவும் 12 மணிவரை படித்துக்கொண்டிருக்கிறார். படிப்பு, படிப்பு என்று வாழ்நாள் முழுவதும் ஓடியபோதும், படிப்புக்காக அவர் தன்னுடைய கடமைகள் எதையும் துறக்கவில்லை. முழுநேர வேலை பார்த்துள்ளார். குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

குழந்தைகளையும் முறையாக, சமூகப் பொறுப்புடன் வளர்த்துள்ளார். இன்று அவருடைய குழந்தைகள், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசித்துவருகின்றனர். யாருடைய தயவுமின்றி, எவ்வித ஆதங்கமும் இன்றி சென்னையில் தனியாக அவர் வசித்துவருகிறார். தன்னுடைய வேலைகளைத் தானே கவனித்துக்கொள்கிறார். இன்றும் தனியாகப் பயணம் மேற்கொள்கிறார். அதுவும் பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்துகிறார். கற்கும் கனவை நெஞ்சினுள் என்றும் சுமந்துகொண்டு வாழும் மனிதருக்கு ஏது தனிமை, ஏது ஓய்வு?


90 வயது இளைஞர்90 year old youth90 yearபெற்ற பட்டங்கள்கனவே துணைஆசைகள்கனவுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x