Published : 18 Dec 2015 01:18 PM
Last Updated : 18 Dec 2015 01:18 PM

சினிமா ரசனை 28: யார் இந்த ஜெயபாரதி?

சில வாரங்களாகத் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிப் பார்த்து வருகிறோம். முழுக்கவே வணிகப் படங்களாக இருந்தாலும், திரைக்கதை தரமாக இருந்தால் அப்படங்கள் அவசியம் தனித்துத் தெரியும் என்பதைச் சென்ற சில வாரங்களில் கவனித்தோம். இந்த வாரம், ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் எழுதிய ஒரு புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம். ஆனால், இந்த இயக்குநர் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு அவ்வளவாகப் பரிச்சயம் ஆனவர் இல்லை. இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. காரணம், இவர் எடுக்கும் படங்கள் ‘கமர்ஷியல்’ என்ற கட்டத்துக்குள் அடங்காது. இதனாலேயே அப்படங்கள் தமிழகத்தில், ‘வழக்கமான’ கமர்ஷியல் படங்கள் அடைந்த புகழைப் பெறவில்லை.

தமிழ் எழுத்தாளர்களான து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி ஆகியவர்கள் இவரது பெற்றோர். பள்ளி நாட்களில் நாடகங்கள் எழுதி நடித்தவர் இவர். இவரது முதல் படம், இப்போது மிகப்பிரபலமாக விளங்கும் crowd funding என்ற வகையில், கல்லூரி மாணவ மாணவியர்களிடமே, பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகப் பெருமளவில் நிதி வசூலிக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம். இது தமிழின் மாற்று சினிமா என்றே விளம்பரப்படுத்தப்பட்டது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுத்து முடிக்கப்பட்ட படம் இது. தமிழில் வழக்கமாக வெளிவரும் கமர்ஷியல் படங்கள் இல்லாமல், தரமான மாற்று சினிமா உருவாக்கவேண்டும் என்று இப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இயக்குநர் இவர்.

ஏழு படங்கள்

முதல் படமாக ‘குடிசை’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஜெயபாரதி எழுதிய புத்தகமான, ‘இங்கே எதற்காக’ என்ற புத்தகத்தைத்தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம். இளவயதில், சத்யஜித் ராய், ரித்விக் கட்டக், தபன் சின்ஹா (இவர்களை நாம் முந்தைய சில வாரங்களில் கவனித்திருக்கிறோம்) போன்ற இயக்குநர்களால் கவரப்பட்டு, பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எழுத்தாளராகவும் இயக்குநராகவும் ஆனவர் ஜெயபாரதி. பத்திரிக்கைகளில் வெளிப்படையாகவும் உண்மையாகவும் விமர்சனம் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். இள வயதில் இவரது நண்பர்கள் மாலன், பாலகுமாரன் ஆகியோர். கணையாழியிலும் தினமணிக் கதிரிலும் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

இவரது விமர்சனங்கள் பற்றி இயக்குநர் பாலசந்தரே, ‘எம் படம் நல்லா இல்லைங்கறான்.. இவனே டைரக்ட் பண்ணுற படம்தான் நல்லா இருக்குமாம்’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார். அதே பாலசந்தரின் மூன்று முடிச்சு படத்தில், ரஜினியின் வேடத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் இவரே. ஆனால், பாலசந்தர் இவரைப் பற்றிப் பேசியதனால் படம் எடுக்கத் தூண்டப்பட்டு, நிதி திரட்டி மிகக்குறைந்த பட்ஜெட்டில் ‘குடிசை’ படத்தை 1979-ல் எடுத்தார். இதன் பின் இன்றுவரை மொத்தம் ஏழு படங்கள் (குடிசை, ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில், நண்பா நண்பா, குருஷேத்ரம், புத்திரன்) இயக்கியுள்ளார்.

அனுபவப் புத்தகம்

தனது வாழ்க்கையில் இயக்குநர் ஜெயபாரதி சந்தித்த பிரச்சினைகளே இந்தப் புத்தகம். தமிழில் ஒரு தரமான மாற்று சினிமா எடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள், அவற்றில் நேரக்கூடிய பிரச்சினைகள் ஆகியவற்றை மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஜெயபாரதி. கண்ணதாசன் மூன்று பெக் விஸ்கி அடித்துவிட்டு இவரது படம் ஒன்றுக்கு எழுதிக்கொடுத்த அற்புதமான மூன்று பாடல்கள், கமல் ஹாசனுக்குக் கணையாழியை அறிமுகப்படுத்திய பின்னர், 'சினிமாக்காரனுக்கு எதுக்குடா இலக்கியம்? அவனைக் கெடுத்துட்டியே' என்று பாலசந்தர் இவரிடம் சீறியது, மேஜர் சுந்தர்ராஜன் நாடகமேடைகளில் ஷேக்ஸ்பியரின் வரிகளில் இருந்து தழுவப்பட்ட ஆங்கில வசனங்களைப் பேசிவிட்டு உடனுக்குடன் அதையே தமிழிலும் பேசியபோது எழுந்து நின்று வசனத்தில் இருந்த பிழைகளை உரக்கக் கத்தியது, தமிழின் திரைப் பிரமுகர்களுடன் இவருக்கு நேர்ந்த சில கசப்பான சம்பவங்கள், ருத்ரையாவின் ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தில் கதாநாயகனாக ஒரு வாரம் நடித்து, பின்னர் மாற்றப்பட்டது, கம்யூனிஸ்ட்களுக்குப் படம் எடுக்காதே என்று இவரை இளையராஜா தடுத்தது, அதே படத்தை இயக்கியபோது தயாரிப்பு நிர்வாகம் செய்த கம்யூனிஸ்ட் ஒருவர் ‘கள் குடித்த குரங்காக' ஆட்டம் போட்டது, எம்.டி.வாசுதேவன் நாயருடனும் ரிஷிகேஷ் முகர்ஜியுடனும், ஷ்யாம் பெனகலுடனும் இவரது அனுபவங்கள், இவரது ‘குடிசை’ படத்துக்கு இன்னும் நிதி தேவைப்பட்டபோது, சென்னையில் வேறு ஒரு விஷயமாக வந்திருந்த மிருணாள் சென் இவரது படத்தைப் பார்த்துவிட்டு இவரைப் பாராட்டி, அவரது நண்பரிடம் இந்தப் படத்துக்காகப் பணம் கொடுத்து உதவச் சொன்னது என்று எக்கச்சக்கமான விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

ஏராளம் உண்டு

இவற்றோடு சேர்ந்து, தனது ஒவ்வொரு படத்தை இயக்கும்போதும் இவர் சந்தித்த ஏராளமான பிரச்சினைகள், அவற்றை இவர் சமாளித்த விதங்கள் என்று ஏராளமான விஷயங்கள் உண்டு. இப்போதும் தமிழ்த் திரையுலகில், ஓர் அருமையான, உண்மையான, உணர்ச்சிபூர்வமான படம் ஒன்றை எடுக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் அத்தனை பேருமே இந்தப் புத்தகத்தை ஒருமுறையாவது படிக்கவேண்டும். படித்தால், அப்படி ஒரு திரைப்படம் எடுக்கும் தைரியம் அவசியம் வரும். நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது. இதைப் படித்தால், தாங்கள் செல்ல நினைக்கும் புதர் மண்டிய பாதையில் பல்லாண்டுகளுக்கு முன்னரே ஒருவர் விடாமுயற்சியுடன் மேலும் கீழும் நடந்து, அதில் ஓர் ஒற்றையடிப்பாதையை உருவாக்கியிருப்பதை உணரலாம்.

இந்தப் புத்தகத்தைப் படித்தால், தமிழில் தரமான படங்களுக்கு வரவேற்பு இல்லாததின் துயரம் நமக்குத் தெளிவாகவே புரியும். மாற்று சினிமா என்பது தமிழில் இதுவரை ஏன் சாத்தியமாகவில்லை என்பதற்கு இப்புத்தகம் சான்று. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் புத்தகம் இது. விலை ரூ. 150/.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x